சீனாவின் வுகான் நகரில் முதன் முதலில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தொற்று, உலகின் பல நாடுகளிலும் மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸுக்கான தடுப்பு மருந்தை பரிசோதிக்கும் பணியை அமெரிக்கா தொடங்கியுள்ளது. மருத்துவத்துறையில் பெரும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த பரிசோதனை நடவடிக்கைகள், வாஷிங்டன் மாகாணத்தின் சியாட்டெல் நகரில் உள்ள அமெரிக்காவின் தேசிய சுகாதார நிறுவனம் நடத்துகிறது. இதுகுறித்து முறையான அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.
உலக அளவில் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த நிலையில், இந்தியாவில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 129 பேர் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், நோய்த்தொற்றுப் பரவலைத் தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
சென்னையில் கொரோனா அச்சம் காரணமாக, மத்திய - மாநில அரசு அலுவலக பணியாளர்கள் பயோமெட்ரிக் வருகைப் பதிவு முறைக்கு பதிலாக பதிவேட்டில் கையெழுத்திடும் முறை கடைபிடித்து வருகின்றனர். மத்திய அரசு ஏற்கனவே அறிவித்ததன் அடிப்படையில், பயோ மெட்ரிக்
வருகைப்பதிவு முறை கைவிடப்பட்டிருப்பதோடு, அலுவலகத்துக்கு உள்ளே வரும்போதே சானிடைசரைக் கொண்டு கை கழுவவும்
அறிவுறுத்தப்படுகின்றனர்.
அதேபோல், தமிழகம் உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் வணிக வளாகங்கள், திரையரங்குகள், பூங்காக்கள் உள்ளிட்டவைகள் மூடப்பட்டுள்ளன. பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களுக்குச் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அதேநேரம், பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பல நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்தே பணி செய்ய அறிவுறுத்தியுள்ளன.
அரசின் இந்த பல்வேறுகட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மக்கள் மத்தியில் நன்மதிப்பை பெற்று வந்தாலும், தங்களது அன்றாட வேலைகளை நம்பி குடும்பத்தை காப்பாற்றி வரும் சாமானியர்களின் வாழ்வில் இது பூகம்பத்தை கிளப்பியுள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். அரசின் இந்த கெடுபிடிகளால் தங்களின் அன்றாட வருமானம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறுகின்றனர் வியாபாரிகள், வணிகர்கள்.
தற்போதுள்ள சூழலில் 31ஆம் தேதி வரை கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், நோய்த் தொற்றுப் பரவல் எப்போது கட்டுக்குள் வரும், இயல்பு நிலை எப்போது திரும்பும் என எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.
இதுகுறித்து வாடகை வாகன உரிமையாளர் மற்றும் ஓட்டுநர் சங்கத்தின் ஜூட் மேத்யூ கூறும்போது, “கடந்த 3 நாட்களாகவே ஒரு ரூபாய் கூட வணிகம் இல்லாமல்தான் இயங்கி கொண்டிருக்கிறோம். 12 மணிநேரம் காத்துகிடந்தால்தான் ஓலா, உபர் போன்ற நிறுவனங்களில் 100-110 ரூபாய் சம்பாதிக்ககூடிய நிலை உள்ளது. அதிகமான வாடிக்கையாளர்களை ஏற்றி இறக்கினால்தான் அவர்களின் வருமானம் இருக்கும். அதை முறைப்படுத்த எவ்வித நடவடிக்கையும் அரசு எடுக்கவில்லை.
கொரோனாவை கண்டு பயப்படவில்லை. ஆனால், கடன் கட்ட வேண்டிய பைனான்ஸ் நிறுவனங்களை பார்த்துதான் பயப்படுகிறோம். 1300 புக்கிங் கிடைக்கும் ஓலாவில் 300 புக்கிங் கிடைப்பதே பெரிய விஷயமாக இருக்கிறது. இதைத்தாண்டி பல்வேறு நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. மக்கள் பீதியில் இருக்கிறார்கள். 2 மாதம் கடன் கட்ட முடியவில்லை என்றாலே வண்டியை சீஸ் செய்யப்பட்டுவிடும். இதை அரசு இதுவரை முறைப்படுத்தாதது வருத்ததிற்குரியது” எனத் தெரிவிக்கிறார்.
இதுகுறித்து சிஐடியு துணைத்தலைவர் பொன்முடி கூறுகையில், “தமிழக அரசு எடுத்துள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் என்பது தேவைதான். ஆனால் பிழைப்புக்கு வழியில்லாமல் இருப்பவர்கள் பலர் உள்ளனர். மொத்த தொழிலாளர் வர்க்கத்தில் 92 சதவீதம் பேர் அமைப்பு சாரா தொழிலாளர்கள்தான். அவர்களுக்கு வேலை பாதுகாப்பும் இல்லை. ஒப்பந்த தொழிலாளர்களுக்கும், அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கும் எவ்வித சட்டப்பாதுகாப்பும் இல்லை. அவர்கள் வேலைக்கு போகவில்லை என்றால் சம்பளம் கிடையாது. அவர்களின் குடும்ப வருமானமே அதை நம்பித்தான் இருக்கும். அவர்கள் என்ன செய்வார்கள். இவர்கள் வருமானம் இழந்த நிராயுதபானியாக ஆக்கப்படுவார்கள். அதற்கு அரசு சரியான பரிகாரத்தை செய்ய வேண்டும்” எனத் தெரிவித்தார்.
இதுகுறித்து பொருளாதார அறிஞர் ஜெயரஞ்சன் கூறுகையில், “யார் பொருளாதாரத்தில் கீழ் மட்டத்தில் இருக்கிறார்களோ அவர்களுக்கு பாதிப்பு அதிகமாக இருக்கும். அனைத்து பகுதிகளையும் மூடுவதால் மட்டுமே இதை சமாளித்து விட முடியாது. இதன்மூலம் பாதிக்கப்படுபவர்களுக்கு நிவாரணத்தை அரசு கொடுக்க வேண்டும். இதற்கு முன் நாம் கண்டுகொள்ளாமல் இருந்ததன் விளைவே. இந்த அமைப்பை நாம் சரிசெய்ய வேண்டும் என்பதை இப்போதாவது தெரிந்து கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்தார்.