சிறப்புக் களம்

தீவிரமாகும் 2-ம் அலை கொரோனா: முன்களப் பணியில் களம் இறங்கிய சென்னை காவல்துறை!

kaleelrahman

அதிவேகமாக பரவும் கொரோனா நோய்த் தொற்றிலிருந்து காக்கும் பணியில் களம் இறங்கிய சென்னை காவல்துறை. என்ன செய்கிறார்கள்?

சென்னையில் கொரோனா 2ம் அலையின் தாக்கம் தீவிரமடைந்துள்ள நிலையில் மீண்டும் முன்களப் பணியாளர்களாக தங்களை காக்கும் பணியாக, சென்னை காவல்துறை தங்களுக்கு தேவையான கொரோனா தடுப்பு சானிடைசர்களை தாங்களே தயாரிப்பதில் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றனர்.

இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் பொருட்டு காவல்துறையினர் முன்களப் பணியாளர்களாக செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில் கடந்த 2019ஆம் ஆண்டு முதல் அலையின் போதே 30-க்கும் மேற்பட்ட காவல் துறையினரை கொரோனா ஈவு இரக்கமின்றி பலிவாங்கி விட்டது. தற்போது இரண்டாம் அலையிலும் சென்னையில் மட்டும் இதுவரை சென்னை காவல்துறையைச் சேர்ந்த 3,566 பேர் பாதிப்படைந்துள்ளனர். இவர்களில் 3,340 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். 213 பேர் சிகிச்சையில் உள்ளனர். 13 பேர் மரணமடைந்துள்ளனர். இவர்களில் 8 பேர் கொரோனாவில் பாசிடிவ் ஆகி உயிரிழந்துள்ளனர். 5 பேர் கொரோனா நெகட்டிவ் ஆகி உயிரிழந்துள்ளதாக சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.

அதனால் முன்களப் பணியாளர்களான காவலர்கள் தங்களை தாங்களே காக்கும் பணியில் இறங்குவது அவசியமான ஒன்றாகி விட்டது. கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியதுமே அதன் அடிப்படை தடுப்புப் பொருளான சானிடைசரின் அவசியம் தமிழகத்தில் மட்டுமின்றி இந்தியா முழுவதும் அவற்றின் தேவை அதிகரித்தள்ளது. கடைகளில் சானிடைசர் விலை கொடுத்து வாங்குவதை விட தாங்களே சானிடைசர் தயாரிப்பதை கடந்த ஆண்டே காவல் துறையினர் மேற்கொண்டனர்.

அதற்காக சென்னை எழும்பூர் ராஜரத்தினம் போலீஸ் மைதானத்தில் சானிடைசர் தயாரிப்பதற்கு தனி கூடம் அமைக்கப்பட்டது. ஆயுதப்படை போலீசார் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை மருந்தியல் துறையினரின் உதவியுடன் காவல் துறைக்கு தேவையான சானிடைசர்களை தாங்களே தயாரித்து காவல் துறையினருக்கு வழங்கினர். அதே போல தற்போது கொரோனாவின் 2வது அலையிலும் காவல் துறையினர் சானிடைசர் தயாரிக்கும் பணியில் களம் இறங்கியுள்ளனர்.

காவல்துறையின் ஆயுதப்படையைச் சேர்ந்த மருந்தியல் கல்வியில் தேர்ச்சி பெற்ற 10 ஆயுதப்படை காவலர்கள் மருந்தியல் துறை தலைவர் ஜெரால்டு சுரேஷ், மருத்துவர்கள் செல்வகுமார், டிட்டோ ஆகியோரின் வழிகாட்டுதலின்படி மூலப் பொருட்களை தேவையான அளவுக்கு கலந்து சானிடைசர்களை தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு கொரோனா முதல் அலையின்போது ஏறத்தாழ 10 ஆயிரம் லிட்டர் வரை ஆயுதப்படை காவலர்கள் மூலம் சானிடைசர்கள் தயாரிக்கப்பட்டு சென்னை நகரம் முழுவதும் காவல் துறையினருக்கு வழங்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது இரண்டாம் அலையின் தாக்கம் அதிகரிப்பதை கருத்தில் கொண்டு காவல் துறையினரின் பாதுகாப்பை கருதி மீண்டும் சானிடைசர்கள் தயாரிக்கும் பணியை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் துரிதப்படுத்தியுள்ளார். அதனடிப்படையில் தினசரி 500 லிட்டர் வரை சானிடைசர்கள் தயாரிக்கப்பட்டு காவல் துறையினருக்கு வழங்கப்பட்டு வருகிறது.

குறிப்பாக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணும் நாள் மே 2 ஆம் தேதி வரவுள்ள நிலையில் முதற்கட்டமாக 3 ஆயிரம் லிட்டர் சானிடைசர் தயாரித்து சென்னையில் உள்ள 3 வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள ஆயுதப்படை காவலர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆயுதப்படை காவல் துறையினரைத் தொடர்ந்து காவல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது. இந்த சானிடைசர்கள் மூலம் அனைத்து காவல் துறையினரும் தங்களின் பாதுகாப்பை வலுப்படுத்திக் கொள்ள முடியும் என்று சென்னை ஆயுதப்படை போலீசார் தெரிவித்துள்ளனர்.

- சுப்ரமணியன்