பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் தான் திரையுலகில் கால் பதித்து 50 வருடம் ஆனதை கொண்டாடும் வகையில் ‘இண்டஸ் எண்டர்டைன்மெண்ட்’ என்ற நிறுவனத்துடன் இணைந்து ‘எஸ்.பி.பி - 50’ என்ற பெயரில் இசை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். அந்த இசை நிகழ்ச்சிகளில் தன்னுடைய பாடலை அனுமதியின்றி பாடக் கூடாது என இசையமைப்பாளர் இளையராஜா எஸ்.பி.பிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இதனால் இளையராஜாவின் பாடல்களை இனி வரவிருக்கும் இசை நிகழ்ச்சிகளில் பாட இயலாது என எஸ்.பி.பி தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டார். இது பெரிய சர்ச்சையை எற்படுத்தியுள்ளது.
தனது பாடல்களுக்கு தான் காப்புரிமை பெற்றிருப்பதால் அதை மீறி யாரும் அதைப் பயன்படுத்தக் கூடாது என்பதுதான் இளையராஜா தரப்பு வாதம்.
காப்புரிமை தொடர்பான சட்டம் என்ன சொல்கிறது?
ஒரு திரைப்படப் பாடலானது இசையமைப்பாளர், பாடலாசிரியர் பாடலைப் பாடுபவர் என மூன்று பேரின் பங்களிப்புடன் உருவாகிறது. ஒரு படத்திற்காக உருவாக்கப்படும் இந்த இசையை படத்தின் தயாரிப்பாளர் இசை நிறுவனங்களுக்கு விற்பார். இதில் இசைக்கான காப்புரிமை இசையமைப்பாளருக்கும், பாடல் வரிகளுக்கான காப்புரிமை இசையமைப்பாளருக்கும் சொந்தம் என்று கூறப்பட்டுள்ளது. இரண்டும் இணைந்த திரையிசை பாடலுக்கான காப்புரிமை இசை நிறுவனங்களுக்கு சொந்தம் என்கிறது சட்டம்.
பொதுவாக, ஒரு இசை நிகழ்ச்சி நடத்தும்போது நிகழ்ச்சியை ஒருங்கினைப்பவர் இந்தியன் பெர்பாஃர்மிங் ரைட் சொசைட்டி நிறுவனத்திடம் ஒரு தொகையை கட்டி அனுமதி பெற வேண்டும். இந்த தொகை இசை நிறுவனம், இசையமைப்பாளர், பாடலாசிரியர் என மூவருக்கும் 5:3:2 என்ற விகிதத்தில் ஆண்டுக்கு ஒரு முறை பிரித்துக்கொடுக்கப்பட வேண்டும்.
இதில் குற்றச்சாட்டு என்னவென்றால் இந்தியன் பெர்பாஃர்மிங் ரைட் சொசைட்டி நிறுவனம் சரியாக தனது வேலையை செய்யவில்லை என்பதே. இது குறித்து இளையராஜா அந்த நிறுவனத்தை எற்கனவே கடுமையாக விமர்ச்சித்துள்ளார். தன் பாடல்கள் பயன்படுத்தும்போது வசூலிக்கப்படும் தொகையில் 10 சதவீதம் கூட தன்னிடம் வந்து சேர்வதில்லை என்கிறார் அவர்.
இளையராஜா தனது பாடல்களை காப்புரிமை பெறாமல் வெளியிடவோ, மேடை நிகழ்ச்சிகளில் பாடவோ கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் மூலம் 2015-ம் ஆண்டு மார்ச் மாதம் தடை வாங்கியுள்ளார். மேலும், இசை நிறுவனங்கள் தன்னுடன் போட்ட ஒப்பந்தங்கள் 5 வருடங்களுக்கு மட்டுமே என்பதால் அவை முடிந்துப்போய் பல நாட்கள் ஆகிவிட்டதாக அவர் கூறியிருந்தார். இது ரேடியோ மற்றும் தொலைக்காட்சிகளுக்கும் பொருந்தும்.
கடந்த சில வருடங்களாகவே இளையராஜா தனது அனுமதி இல்லாமல் அவரது பாடல்களை பயன்படுத்த கூடாது எனக் கூறி வருகிறார். அவரது காப்புரிமையை பாதுகாக்க தற்போது தனியாக ஒரு குழுவும் உள்ளது. அதனால் இது புதிய விஷயம் இல்லை என்கிறார்கள். எஸ்.பி.பி ஒன்றும் இலவசமாக இந்த இசை நிகழ்ச்சியை நடத்தவில்லை. அவரும் பணம் வாங்கிகொண்டு தான் பாடுகிறார். அதனால் ராயல்ட்டி கேட்பது தவறல்ல. மேலும், பணம் பிரச்சனையல்ல. பணம் வாங்குவதும் வாங்காததும் இளையராஜாவின் இஷ்டம். ஆனால், அனுமதி கேட்க வேண்டும் என்று கூறுகிறார்கள் அவர்கள்.
ஆனால் எஸ்பிபி ஆதரவாளர்கள், எஸ்.பி.பி., லதா மங்கேஸ்கர், கே.ஜே.யேசுதாஸ் போன்றவர்களின் பங்களிப்பை ஒரு பாடலில் அங்கீகரிக்காமல் இருக்க முடியாது. அதுபோல, 2012 காப்புரிமை சட்டத்தில் பாடகர்களின் பங்களிப்பு அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்தியன் பெர்பாஃர்மிங் ரைட் சொசைட்டி நிறுவனம் சரியாக செயல்படாததற்கு பாடகர்கள் எவ்வாறு பொறுப்பாவார்கள்? என்று கேள்வி கேட்கின்றனர்.
ஏ.ஆர்.ரகுமானின் இசை ராயல்ட்டி:
இளையராஜா ராயல்ட்டி விஷயத்தில் இப்போது சுதாரித்து கொண்டவர். ஆனால், இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் பல ஆண்டுகளாக தனது பாடல்களுக்கு காப்புரிமையை அவர்தான் வைத்துள்ளார். அவருடன் வேலை செய்யும் எந்த ஒரு தயாரிப்பாளருக்கும் இசையால் வரும் லாபத்தில் அவருக்கு பங்கு கொடுக்க வேண்டும் என்பது தெரியும்.