சிறப்புக் களம்

8 மாதத்தில் 165 ரூபாய் விலை ஏற்றம் - சாமானியர்களை சோதிக்கும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை

8 மாதத்தில் 165 ரூபாய் விலை ஏற்றம் - சாமானியர்களை சோதிக்கும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை

கலிலுல்லா

சமையல் எரிவாயு, 'சிலிண்டர்' விலை, ஆகஸ்ட் 17 முதல் 25 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் சிலிண்டர் விலை 875 ரூபாய் 50 காசாக அதிகரித்துள்ளது. பொதுமக்களைக் கவலை அடைய வைத்திருக்கும் இந்த விலையேற்றம் குறித்த தகவல்களை பார்ப்போம்.

சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலையின் ஏற்ற இறக்கத்தை அடிப்படையாகக் கொண்டே இந்தியாவில் பெட்ரோல், டீசல் சமையல் எரிவாயு சிலிண்டர் ஆகியவற்றின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதலே தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதன் காரணமாக இந்தியாவில் சமையல் எரிவாயுவின் விலையும் ஏறுமுகமாகவே இருக்கிறது.

வீடுகளில் சமையலுக்குப் பயன்படுத்தப்படும் 14.2 கிலோ எடைகொண்ட சிலிண்டர் விலை கடந்த ஆண்டு டிசம்பர் 1-ம் தேதி 610 ரூபாயாக இருந்தது. அதன்பிறகு, விலை படிப்படியாக உயர்த்தப்பட்டு சென்னையில் சிலிண்டர் விலை 875 ரூபாய் 50 காசாக அதிகரித்துள்ளது. கடந்த ஆறு மாதங்களில் மட்டும், ஆறாவது முறையாகச் சமையல் எரிவாயுவின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதற்குமுன், கடந்த ஜூலை ஒன்றாம் தேதி 25 ரூபாய் விலை உயர்த்தப்பட்டது. கடந்த ஒன்றரை மாதத்திற்குப் பின் எண்ணெய் நிறுவனங்கள் மீண்டும் விலையை உயர்த்தியுள்ளன.

வர்த்தக ரீதியாகப் பயன்படுத்தப்படும் 19 கிலோ எடை கொண்ட சிலிண்டர் சென்னையில் ஆயிரத்து 756 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலை இன்று நாடு முழுவதும் உயர்த்தப்பட்டுள்ள நிலையில், நாட்டின் தலைநகர் டெல்லி மற்றும் மும்பையில் சிலிண்டர் விலை 859 ரூபாயாகவும், கொல்கத்தாவில் 886 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது.

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு என நாடு முழுக்கவே எரிபொருட்களின் விலை கடந்த சில மாதங்களாக வெகுவாக அதிகரித்து வருகின்றன. கொரோனா சூழலில் தொடர்ந்து பலர் வேலை, வாழ்வாதாரத்தை இழந்து அவதியுறும் நிலையில், இந்த விலையேற்றங்கள் மக்களின் மீது பெரும் சுமையாகின்றன. இந்நிலையில் கடந்த 2 மாதத்தில் சமையல் எரிவாயு விலை 50 ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளதால் மக்கள் கவலையடைந்துள்ளனர்

கடந்த ஓராண்டில் எத்தனை முறை சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளது?

வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 25 ரூபாய் உயர்த்தப்பட்டு 875 ரூபாய்க்கு தற்போது விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு முதல் இதுவரையிலான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ஏறுமுகத்திலேயே காணப்படுகிறது.

இந்த ஆண்டு மட்டும் எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலை 165 ரூபாய் அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு தொடக்கம் முதல் எரிவாயு சிலிண்டர் விலை ஏற்றத்தில் உள்ளது.

2020ம் ஆண்டு டிசம்பரில் மட்டும் எரிவாயு சிலிண்டர் விலை இரண்டு முறை உயர்த்தப்பட்டுள்ளது.

டிசம்பர் 1, 2020 - ரூ.660

டிசம்பர் 15, 2020 - ரூ. 710

இந்தாண்டு ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை கணக்கெடுத்து பார்த்தால் 165 ரூபாய் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

ஜனவரி 1 2021 - ரூபாய் 710.00

பிப்ரவரி 25 2021 - ரூபாய் 810.00

மார்ச் 1 2021 - ரூபாய் 835.00

ஏப்ரல் 1 2021 - ரூபாய் 825.00

மே 1 2021 - ரூபாய் 825.00

ஜூன் 1 2021 - ரூபாய் 825.00

ஜூலை 1 2021 - ரூபாய் 850.00

ஆகஸ்ட் 17 2021 - ரூபாய் 875.00

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை நிர்ணயிக்கப்படுவது எப்படி?

அயல்நாடுகளில் எல்பிஜி கேஸ் விலையை பொறுத்தது தான் நமக்கான விலை தீர்மானிக்கப்படுகிறது. பெரும்பாலும் ஏற்றத்தை நாம் சந்தித்து வருகிறோம். சவுதி அனல்கோ நிறுவனத்தின் விலை தான் அளவுகோளாக இருக்கிறது. அயல்நாட்டிலிருந்து வரும்போது, மூலப்பொருட்கள், போக்குவரத்து கட்டணம், சுங்கவரி, இறக்குமதி சமவரிக்கு விதிக்கப்படுகிறது. உள்நாட்டுக்கு வரும்போது, உள்நாட்டு போக்குவரத்து, சிலிண்டர்களில் கேஸ் நிரப்புதல், சந்தைபடுத்துதல், டீலர் கட்டணம், ஜிஎஸ்டி வரி என இவை அனைத்தும் முடிந்த பின் விலை தீர்மானிக்கப்படுகிறது.

விலை ஏற்றம் தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த கலைச்செல்வி பேசுகையில், ''கடந்த 2021 ஜனவரி 17ம் தேதி முதல் தற்போது ஆகஸ்ட் வரை 8 மாதங்களில் 165 ரூபாய் சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளது. கொரோனா பெருந்தொற்று காலத்தில் மக்கள் வேலை இழந்து, வறுமையில் வாடும் இந்த சூழலில் ஒன்றிய அரசு மக்கள் குறித்து கவலைப்படாமல் தொடர்ந்து விலை ஏற்றத்தை அமல்படுத்தி வருகிறது. பாமர மக்களுக்கு இது மிகப்பெரிய சுமையாக இருக்கும். ஒன்றிய அரசின் இந்த போக்கை ஏற்றுக்கொள்ள முடியாது. மக்களுக்கு நிவாரணம் கொடுப்பதற்கு பதிலாக சுமையையே ஒன்றிய அரசு சுமத்துகிறது. மக்களை வஞ்சித்து வரும் போக்கை அரசு கைவிட வேண்டும்.

வலது சாரி ஆதரவாளர் சீனிவாசன் பேசுகையில், ''கச்சா எண்ணெய் நிறுவனங்கள் தான் இந்த விலையை நிர்ணயிக்கிறது. அரசின் தலையீடு என்பது இல்லை. பெட்ரோல், டீசலுக்கு அரசுக்கு மானியம் தருவதில்லை. ஆனால், எல்பிஜி சிலிண்டருக்கு அரசு மானியம் தருகிறது. ஆக, இரண்டையும் வெவ்வேறு தளத்தில் வைத்து அரசு பார்க்கிறது என்பதை புரிந்து கொள்ளமுடிகிறது. சிலிண்டர் விலை ஏற்றத்திற்கும் அரசுக்கும் சம்பந்தமில்லை. 4 மாதங்கள் சிலிண்டர் விலை நிலையாக இருந்தது குறித்து யாரும் பேசுவதில்லை'' என்று அவர் தெரிவித்துள்ளார்.