சிறப்புக் களம்

தமிழ் சினிமாவில் 60 ஆண்டுகள் நகைச்சுவை ஆட்சி - “ஆச்சி” மனோரமா நினைவுநாள் இன்று…!

Veeramani

நான்கு தலைமுறை நடிகர்களுடன் நடித்து தமிழ் சினிமாவையும், தமிழ் மக்களையும் தனது நகைச்சுவை நடிப்பினால் மகிழ்வித்த நகைச்சுவை அரசி “ஆச்சி” மனோரமா நினைவுநாள் இன்று..!

தமிழ் மக்களால் “ஆச்சி” என அன்போடு அழைக்கப்பட்ட மனோரமாவின் இயற்பெயர் கோபிசாந்தா, இவர் 1937 ஆம் ஆண்டு மே 26ஆம் தேதி மன்னார்குடியில் பிறந்தார், இவரது பெற்றோர் காசியப்பன் கிளாக்குடையார் மற்றும் ராமாமிர்தம் ஆவர். சிறுவயதிலேயே குடும்பச்சூழல் காரணமாக தாயுடன் காரைக்குடி அருகே உள்ள பள்ளத்தூருக்கு சென்ற கோபிசாந்தா, தனது 12வது வயதிலேயே நாடகங்களில் சிறு வேடங்களில் நடிக்கத்தொடங்கினார். பின்னர் பழம்பெரும் தமிழ்நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் புதுக்கோட்டையில் நடத்திய நாடக கம்பெனியில் இணைந்து நூற்றுக்கணக்கான நாடகங்களில் நடித்தார். நாடக இயக்குநர் திருவேங்கடம் மற்றும் ஆர்மோனிய கலைஞர் தியாகராஜன் ஆகியோர்தான் கோபிசாந்தாவை ‘மனோரமா’ என பெயர் மாற்றினார்கள்.

மஸ்தான் என்பவர் இயக்கிய சிங்கள மொழி திரைப்படம்தான் மனோரமா நடித்த முதல்படம். அதன்பின்னர் 1958இல் கவிஞர் கண்ணதாசன் தயாரித்த மாலையிட்ட மங்கை என்ற திரைப்படம் மூலமாக மனோரமா தமிழில் அறிமுகமானார். சினிமாவில் அறிமுகமாகி சில படங்களில் கதாநாயகியாக நடித்தாலும், அதன்பின்னர் மனோரமா தொடர்ந்து நகைச்சுவை பாத்திரங்களிலேயே கவனம் செலுத்தத் தொடங்கினார். தங்கவேலு, நாகேஷ், சுருளிராஜன், வெண்ணிற ஆடை மூர்த்தி, சோ, தேங்காய் சீனிவாசன் ஆகியோருடன் இணைந்து மனோரமா நடித்த நகைச்சுவை காட்சிகள் மக்களால் கொண்டாடப்பட்டது, அதன்பின்னர் மனோரமா இல்லாத திரைப்படங்களே கிட்டத்திட்ட இல்லை என்ற சூழல் உருவானது.   

‘மாலையிட்ட மங்கை’ என்ற படத்தில் தனது திரைவாழ்வை தொடங்கிய மனோராமா தொடர்ந்து 60 ஆண்டுகள் தமிழ் சினிமாவில் வெற்றிமாலை சூடியவர். எம்ஜிஆர் – சிவாஜி, ரஜினி – கமல், விஜய் – அஜித், சிம்பு –தனுஷ் என நான்கு தலைமுறை நடிகர்களுடன் நடித்த மனோரமா, தமிழ் சினிமா மட்டுமின்றி மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி, சிங்களம் என ஆறு மொழிகளில் நடித்துள்ளார். 1000 நாடகங்கள், 1500க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த மனோரமா, 1000க்கும் மேற்பட்ட படங்களில் நடித்ததற்காக கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இவர் இடம்பெற்றுள்ளார்.

மனோரமா ஐந்து முதலமைச்சர்களுடன் நடித்த பெருமையை பெற்றவர். முன்னாள் முதல்வர் சி.என்.அண்ணாதுரை நடித்த ‘வேலைக்காரி’ நாடகத்திலும், முன்னாள் முதல்வர் கருணாநிதி நடித்த ‘உதயசூரியன்’ நாடகத்திலும் நடித்தவர் மனோரமா. முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களில் நடித்ததுடன், ஆந்திர முன்னாள் முதல்வர் என்.டி.ஆரின் படங்களிலும் நடித்துள்ளார். தற்போதைய தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நடித்த ‘ஒரே ரத்தம்’ படத்திலும் நடித்துள்ளார் மனோரமா.

“கண் திறந்தது என்ற படத்தின் கதாநாயகன் எஸ்.எம்.ராமநாதன் என்பவரை 1964இல் திருமணம் செய்துக்கொண்ட மனோரமா, 1966இல் அவரை விவாகரத்து செய்தார், இவர்களுக்கு பூபதி என்ற மகன் உள்ளார்.

இவரின் நடிப்புத்திறனை பாராட்டி 1989 ஆம் ஆண்டு ‘புதிய பாதை’ படத்திற்காக சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருதும், பத்மஸ்ரீ, கலைமாமணி உள்ளிட்ட பல விருதுகளும், கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் கெளரவ டாக்டர் பட்டமும் பெற்றுள்ளார்.

நகைச்சுவை நடிகையாக மாறியது குறித்து ஒரு பேட்டியில் பேசிய மனோரமா, “கவிஞர் கண்ணதாசன்தான் என்னை நகைச்சுவை வேடங்களில் நடிக்க சொன்னார். கதாநாயகிகளாக நடிப்பவர்கள் நான்கு, ஐந்து ஆண்டுகள்தான் சினிமாவில் இருப்பார்கள். ஆனால், நகைச்சுவை பாத்திரங்களில் நடித்தால் சிகரங்களை தொடுவீர்கள் என அவர் சொன்னார்” எனக் கூறினார். ஆம் உண்மையில் அரை நூற்றாண்டு காலத்துக்கும் மேலாக மக்களின் இதயங்களை வென்று சிகரத்தைத்தான் தொட்டிருக்கிறார் “ஆச்சி”.