அந்த நேரத்தில் அந்தப் பெண்ணிற்கு அங்கு என்ன வேலை? படிக்கச் சென்ற பெண் ஏன் வெளியே சுற்ற வேண்டும்.. ஆண் தோழருடன் பொது இடங்களில் பேசக்கூடாதா ஏன் மறைவான இடம்.. இத்யாதி இத்யாதி கேள்விகள்.. எவ்வளவு எளிதாக கேட்கப்படும் கேள்விகள்.. கோவையில் கல்லூரி மாணவிக்கு நடந்திருப்பது மிகப்பெரிய கொடூரம் என்பதையே மறந்து எப்படியான கருத்துக்கள் எல்லாம் கேட்கப்படுகிறது..
வெறுமனே சமூக வலைதளங்களில் பதில் அளிக்கக் கூடிய பொறுப்புகளில் இல்லாத நெட்டிசன்கள் மட்டும் இத்தகைய தான்தோன்றித்தனமான கருத்துக்களை பதிவிட்டிருந்தால் கூட அது வேறு விஷயம். சமூகத்தில் பொறுப்பு மிக்க பதவிகளில் இருப்பவர்களும், ஊடக அரங்குகளில் தோன்றி சமூக அக்கறையுள்ள விஷயங்களை விவாதிப்பவர்கள், பிரபலமான நட்சத்திரங்கள் என பலரும் ஒரு சேர இதே கருத்துக்களை வெவ்வேறு வார்த்தைகளில் உதிர்த்துக் கொண்டே இருக்கிறார்கள். கிட்டதட்ட இது ஒரு கருத்துருவாக்கம் போலவே ஆகிவிட்டது.
ஆம், கொடூரமான குற்றத்தை செய்த அந்த கயவர்கள் குறித்தும் இனிமே அதுபோன்ற துயரங்கள் நடக்காமல் இருப்பது குறித்தும் விவாதிக்க வேண்டிய அறிவுத்தளம் மிகக் கேவலமாக பாதிக்கப்பட்ட பெண்ணையே குற்றவாளிக்கூண்டில் நிறுத்தும் வேலையை மிகத்தீவிரமாக நடத்திக் கொண்டிருக்கின்றன. பாதிக்கப்பட்ட பெண்ணின் மீதுதான் தவறு என சிலர் நரேட்டிங் செட் செய்கிறார்களே என்ற பத்திரிகையாளர் கேள்விக்கு, "VALUE JUDGEMENT பாஸ் பண்ணாதீங்க. எல்லோருக்கும் சுதந்திரம் இருக்கிறது" என்று கோவை காவல் ஆணையர் ஆ.சரவண சுந்தர் மிகத் தெளிவாக பதில் அளித்திருந்த போதும் பெண்ணுக்கு எதிராக கருத்து சொல்வோர் நின்றபாடில்லை.
நிர்பயா சம்பவத்தை இந்த நாடு இன்று அல்ல என்றும் மறக்காது என்றே நினைக்கிறேன். ஆம், பொதுமக்கள் பயணிக்கின்ற ஒரு பேருந்தில் நடந்த துயர சம்பவம். நாள்தோறும் செய்திகளில் பச்சிளம் குழந்தைகள், சிறுமிகள் கூட பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாகும் செய்திகளை பார்த்துக் கொண்டுதானே இருக்கிறோம்.. பாலியல் வன்கொடுமைகள் நிகழ்வதற்கு இடம் என்பதையெல்லாம் ஒரு காரணமாக எடுத்துக் கொண்டு விவாதிப்பது யதார்த்தத்தை மறைத்து பேசுவதே.
அதுவும் குற்றப்பின்னணி கொண்ட குற்றவாளிகளை சுதந்திரமாக நடமாட விடுவது, போதைப்பொருள் பழக்கத்தை கட்டுப்படுத்தாமல் குற்றச்செயல்களுக்கு வழிவகுப்பது, சட்டவிரோத பார்கள் நடத்தப்படுவதை கண்டுகொள்ளாமல் இருப்பது.. இதையெல்லாம் விட்டுவிட்டு வெறுமனே ஒரு ஆணும், பெண்ணும் தனியாக இருந்தார்கள் என்பதையே எப்படி குற்றமாக பேசப்படுகிறது. அந்தப் பெண் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதையே மறந்துவிட்டு அவரே குற்றவாளியாக்க எவ்வளவு பேர் மிகத் தீவிரமாக கருத்துக்களை கொட்டிக் கொண்டே இருக்கிறார்கள்.
இந்த நிலையில், பாதிக்கப்பட்ட பெண்ணையே குற்றவாளியாக்கும் பேச்சுக்கள் குறித்து மூத்த பத்திரிக்கையாளர் டி.என்.ரகு ஆதங்கத்துடன் தனது கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.
இதுகுறித்து அவர் கூறுகையில்,
கோவையில் பாதிக்கப்பட்ட பெண்ணையே குற்றவாளியாக்கும் பலரின் கருத்துக்கள் கண்டிக்கத்தக்கது. இது ஒரு சதவீதம் கூட நியாயம் கிடையாது. நமது நாட்டில் பாலியல் வன்முறை என்பது இரவு 11 மணிக்கு சொந்த வேலைக்காக செல்லும் பெண்களுக்கு மட்டும் நடக்கவில்லை, 2 முதல் 5 வயதுடைய குழந்தைகளுக்கும் நடக்கிறது. எனவே, பாலியல் வக்கிரம் பிடித்த மனிதர்களுக்கு நேரம் காலம் எதுவும் பொருட்டே கிடையாது. இந்த விஷயத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணை குற்றம்சாட்டுவது மிகவும் தவறு.
இந்த வன்முறைக்கு ஆளாகின்ற பெண்களுக்கு எதிர்காலத்தில் பாலியல் வாழ்க்கை பாதிக்கப்படும் என்று பாதிக்கப்பட்ட பெண்கள் சொல்வார்கள். இது அவர்களுக்கு ஒரு ஆறாத வடுவாக இருக்கும். இதுபோன்ற விஷயத்தில் ஒரு சமூகமாக நாம் என்ன செய்ய வேண்டும் என்றால், பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகின்ற பெண்கள் இதற்கு பொறுப்பல்ல என்பதை நாம் உணர்த்த வேண்டும். இதனை ஒரு சமூகமாக நாம் செய்யவில்லை என்றால் நமக்கு விமோசனமே கிடையாது. பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இது போன்ற ஆறுதல்களையாவது நாம் கொடுக்க வேண்டும். உங்கள் மீது எந்த தவறும் கிடையாது. இந்தியா என்பது ஒரு சுதந்திரமான நாடு, ஒரு பெண்ணும் ஆணும் எப்போது வேண்டுமானாலும் வெளியே செல்லலாம். எங்கு வேண்டுமானாலும் பேசிக்கொண்டு இருக்கலாம்.
மகாத்மா காந்தி சொல்வது போல், ஒரு பெண் எப்போது பொதுவெளியில் சுதந்திரமாக நடமாட முடிகிறதோ அப்போது தான் இந்தியா ஒரு சுதந்திர நாடு. இந்த விஷயத்தில் பாதிக்கப்பட்ட பெண்களை குற்றம்சாட்டுபவர்கள் மனசாட்சியே இல்லாதவர்கள், இந்த பிரச்சனையை திசை திருப்பிகிறார்கள். கோவையில் அந்த பெண் அங்கு சென்றதால் நடக்கவில்லை. இது போன்ற குற்றச்செயல் எங்கு இருந்தாலும் நடக்கும்.
பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகின்ற பெண்கள் அதற்கு பொறுப்பல்ல என்பதை உணர்த்த வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது
மேலும், நமது நாட்டில் பாலியல் வன்முறை நடைபெறும் இடம் மற்றும் அதில் பாதிக்கப்படும் பெண்களின் வயது பார்த்தாலே தெரிந்துவிடும். இந்த விஷயத்தில் பாதிக்கப்பட்ட பெண்களை குற்றம்சாட்டுவது ரொம்ப தவறு. இது சமூகமும் சேர்ந்து அவர்கள் மீது நெருக்கடியில் தொடுக்கின்ற தாக்குதல். இதுபோன்ற பாலியல் வன்முறைகள் உண்மையிலேயே மாறவேண்டும். தற்போது பாலியல் வன்கொடுமை என்ற சொல்லாடல் வந்ததே ஒரு சமுதாய மாற்றம் என்பதையே காட்டுகிறது. முன்பு, கற்பழிப்பு என்று தான் போடுவார்கள். தற்போதும் சில செய்தி தாள்களில் கற்பழிப்பு என்று தான் பயன்படுத்துகின்றனர். ஆனால் தற்போது பாலியல் சீண்டல், பாலியல் வன்கொடுமை, பாலியல் வன்முறை என்று சொல்வதே ஒரு நல்ல மாற்றம்.
அவங்க ஏன் அங்க போனாங்க அப்படினு கேட்பவர்கள் எல்லாம் மனசாட்சி இல்லாதவர்கள்
அதேபோல், பாதிக்கப்பட்ட பெண்களை குற்றம்சாட்டாமல் இருப்பதும், நீங்க ஏன் அங்க போனிங்க, ஒரு ஆணுடன் என்ன பேச்சு என இதுபோன்று கேட்காமல் இருப்பது மிகவும் நல்லது. ஏனென்றால் அவர்கள் மீது ஒரு துளி கூட தவறு கிடையாது. இதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அதேபோல், மீடியாவும் இதனை செய்தியாக்குவதில் ஒரு நெறிமுறையை பின்பற்ற வேண்டும். பாதிக்கப்பட்டவர்களின் கண்ணியத்திற்கு பங்கம் விளைவிக்கும் மாதிரி தலைப்பு மற்றும் தகவல் பயன்படுத்துவது போன்ற விஷயங்களை செய்யக்கூடாது. இதுபோன்ற தலைப்பு மற்றும் தகவல் போடுவதினால் பதிக்கப்பட்டவர்கள் மேலும், பதற்றமடைந்துவிடுவார்கள். அவங்க ஏன் அங்கு போனாங்க அப்படினு கேட்பவர்கள் எல்லாம் மனசாட்சி இல்லாதவர்கள் என்றார்.
அதனை தொடர்ந்து, அவரிடம் இந்த விஷயத்தில் முன்னணி நட்சத்திரங்களாக இருப்பவர்கள், அரசியல் பேசும் நபர்கள் மற்றும் சில ஊடகங்கள், பாதிக்கப்பட்ட பெண் மீது நேரடியாக குற்றம்சாட்டுகின்றனர், இது மிகவும் ஆபத்தான போக்கு இல்லையா??? என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர், ஒரு சமூகமாக நாம் முன்னேறவில்லை மற்றும் தெளிவு இல்லை என்பதையே இது காட்டுகிறது. நமது நாட்டில் ஒரு பச்சிளம் குழைந்தைக்கு இதுபோன்ற நிலைமை ஏற்பட்டால் கூட அவர்களுக்காக நாம் துணை நிற்பது இல்லை. எல்லாரும் இந்த உலகம் என்ன சொல்லும், அவங்க வாழ்க்கை என்னவாகும் என்பது போன்று தான் பேசுவார்கள். அப்படி பேசுபவர்கள் மிக பெரிய தவறு செய்கிறார்கள்.
ஜேம்ஸ் வசந்தன், இந்த பெண்ணுடைய வாழ்க்கையே போயிடுச்சு என்கிறார். இப்படி சொல்வதற்கு அவர் யார்??.. அவருக்கு என்ன உரிமை இருக்கிறது.
இந்த விஷயத்தில், தற்போது கூட தமிழ் திரைப்பட இசையமைப்பாளரும், இயக்குநரும், தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளருமான ஜேம்ஸ் வசந்தன், இந்த பெண்ணுடைய வாழ்க்கையே போயிடுச்சு என்கிறார். இப்படி சொல்வதற்கு அவர் யார்??.. அவருக்கு என்ன உரிமை இருக்கிறது. பாதிக்கப்பட்ட பெண்ணுடைய வாழ்கையில் அவர் உதவி செய்ய போகிறாரா???.. அப்படி உதவி செய்ய முடியாத ஜேம்ஸ் வசந்தன் ஏன் உபத்திரம் பண்ணனும், ஏன் டிமாரலைஸ் பண்ணனும். அந்த பெண்ணோட தவறு என்ன??.. பாதிக்கப்பட்ட பெண் மீது ஏன் எல்லாம் குற்றச்சாட்டையும் சுமத்தனும்??.. இவர் பேசியது மிகவும் கண்டிக்கத்தக்கது, ரொம்ப ஆபத்தானது. உண்மையிலேயே மனசாட்சி இருந்தால் இந்த குற்றச்சாட்டை ஜேம்ஸ் வசந்தன் திரும்ப பெற வேண்டும். மேலும், பாதிக்கப்பட்ட பெண் மீது என்ன தவறு இருக்கிறது என்று அவங்க வீட்டில் இருக்கும் மனைவியோ, பெண்களோ அவரிடம் எடுத்து சொல்லணும்.
இந்த விஷயத்தை முதலில் நிறுத்த வேண்டும். பெண்கள் பாதுகாப்பு குறித்தும், ஆண்கள் தரக்குறைவாக நடக்காமல் இருப்பதையும் பற்றி பேசும் போது, இது வேறொரு திசையை நோக்கி எடுத்திட்டு போயிடும். இது மிகவும் தவறான போக்கு, அவர்கள் என்னமோ பாதிக்கப்பட்ட பெண்கள் மீது மிகவும் அக்கறை இருப்பது போன்று பேசுகிறார்கள். ஆனால் உண்மையிலேயே அந்த பெண்ணிற்கு அவர்கள் துரோகம் செய்கிறார்கள். இதுபோன்று பேசும் நபர்களால் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு துளி கூட நன்மை கிடைக்காது. மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு ஆதரவு கூறுவது போல கருத்து தெரிவித்துவிட்டு இதுபோன்று கூறுவது ரொம்ப அநியாயம் மற்றும் அயோக்கியத்தனம். பொதுவாக அந்த பெண் என்ன பண்ணுவா, அந்த பெண்ணுடைய வாழ்க்கை போய்டுச்சு என்று கூறுபவர்கள் அவருடைய வாழ்க்கையை இன்னும் சூனியமாக்க முயற்சி செய்கிறார்கள் என்று தான் கூறுவேன் என்றார்.
"வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டிவைப்போமென்ற விந்தை மனிதர் தலை கவிழ்ந்தார்" என்று பாரதியார் 100 வருடங்களுக்கு முன்பே பாடிவிட்டு சென்றிருக்கிறார். அப்படியான சூழலில் மீண்டும் பெண்களை வீட்டிற்குள்ளே பூட்டுவதற்கான வேலையை அக்கறை என்ற பெயரில் பார்த்துவிடக் கூடாது.
’அக்கறை’ என்ற பெயரில் மீண்டும் பெண்களை வீட்டிற்குள்ளே பூட்டுவதற்கான வேலையை பார்த்துவிடக் கூடாது
ஒரு பெண் இரவில் நடமாடுவது சிக்கலாக இருக்கிறது என்பது ஒரு பிரச்சனை என்பதையே உணராமல் மீண்டும் அவர்களை பின்னோக்கி இழுப்பது என்னவிதமான அக்கறை. குற்றம் செய்த கயவர்களை திருத்த வேண்டும்.. தண்டனைகளை அதிகப்படுத்த வேண்டுமே தவிர மனிதர்கள் இரவில் நடமாடும் சுதந்திரத்தை கேள்விக்குள்ளாக்க கூடாது. அடுத்த மனிதர்களை தொந்தரவு செய்யாதவரை சுதந்திரம் குறித்து கேள்வி எழக் கூடாது. பெண்ணை வெறும் போகப்பொருளாக பார்க்கும் பார்வையில் இருந்து விடுபடுவது தான் இங்கு எல்லாவற்றிலும் முக்கியமானது என்பதை எளிதில் நாம் மறந்துவிடக் கூடாது..