சிறப்புக் களம்

விதிமுறைகளை மீறியதால் தீ நகரானதா தி.நகர்?

விதிமுறைகளை மீறியதால் தீ நகரானதா தி.நகர்?

webteam

சென்னை சில்க்ஸ் தீவிபத்தைத் தொடர்ந்து தி.நகரில் செயல்படும் பல அடுக்குமாடி வணிக வளாகங்கள் விதிமுறைகளைப் பின்பற்றவில்லை எனப் புகார் எழுந்துள்ளது. 

சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் பட்டியலிட்டுள்ள விதிமுறைகள் இவை:

* அடுக்குமாடி வணிக வளாகங்களின் அணுகுசாலைகள் 18 மீ அல்லது கட்டுப்பாடுகளுடன் கூடிய 12 மீ அல்லது 15 மீ அகலம் கொண்டவையாக இருக்க வேண்டும். சென்னை சில்க்ஸ் கட்டடத்தின் அணுகுசாலைகளாக உள்ள உஸ்மான் சாலையில் நுழைவு வாயில் 3.7 முதல் 4.9 மீ மட்டுமே அகலம் கொண்டவையாக உள்ளன. 

* ஒவ்வொரு 500 சதுர மீட்டருக்கும் இரண்டு வெளியேறும் வழிகள் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். அவற்றில் ஒன்று தீ போன்ற அவசர காலங்களில் வெளியேறுவதற்காக கட்டடத்துக்கு வெளியில் நேரடியாக தரைத்தளத்தை இணைக்கும் வகையிலான படிக்கட்டுகளாக இருக்க வேண்டும் என்பது சிஎம்டிஏ விதி. ஆனால், தி.நகரில் உள்ள பெரும்பாலான வணிகவளாகங்களில் ஒரே ஒரு படிக்கட்டு வழி மற்றுமே அமைக்கப்பட்டிருக்கிறது. அந்த படிக்கட்டுகளை ஆக்கிரமித்து துணிகள் வைக்கப்பட்டிருப்பதையும் நாம் காணலாம். 

* அவசர காலங்களில் தீயணைப்பு வாகனங்கள் கட்டடத்தினை அணுகும்வகையில் நாலாபுறமும் 7 மீ இடைவெளி விடப்பட்டிருக்க வேண்டும். ஆனால், சென்னை சில்க்ஸ் கட்டடத்தில் பின்புறத்தைத் தவிர மற்ற பகுதிகளில் இந்த விதிகள் கடைபிடிக்கப்படவில்லை.

* ஒவ்வொரு தளத்திலும் தீயணைப்பு கருவிகள் குறைந்தது 2 பொருத்தப்பட்டிருக்க வேண்டும். 

*தீயணைப்புக்கென தனியாக ஒரு குழாய் கட்டடம் முழுவதும் பொருத்தப்பட்டு, ஒவ்வொரு தளத்திலும் அதற்கான இணைப்புகள் அந்த தளத்தின் நீள, அகலத்துக்கேற்ப ஹோஸ்கள் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். 

* அவசர கால வழியை மக்களுக்கு தெரிவிக்கும் வகையில் அறிவிப்பு பலகைகள் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். அவசர காலங்களில் மக்கள் கூட பிரத்யேக இடம் ஒன்று அமைக்கப்பட்டிருக்க வேண்டும். 

தண்ணீர் தொட்டி, தீயணைப்பு குழாய்கள் மற்றும் ஹோஸ்கள் ஆகியவற்றை அமைப்பதில் தி.நகரில் உள்ள பெரும்பாலான வணிக வளாகங்கள் தேசிய கட்டிட குறியீடு காட்டும் வழிகாட்டுதல் நெறிமுறைகளைப் பின்பற்றவில்லை என்றே கூறப்படுகிறது. மேலும், வணிக வளாகத்தின் ஒவ்வொரு தளத்திலும் தானியங்கி தெளிப்பான்களைப் பயன்படுத்த வேண்டும் என்றும் விதி இருக்கிறது. பெரும்பாலான வணிகவளாகங்களில் தானியங்கி தெளிப்பான்கள் இருந்தும், அவை செயல்பாட்டில் இல்லை என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.