சிறப்புக் களம்

புகழஞ்சலி: 'அப்பு' புனித் ராஜ்குமார் மீது கன்னட ரசிகர்களுக்கு தீராப் பற்று ஏன்?!

PT WEB

கன்னட சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகர் புனித் ராஜ்குமார் மாரடைப்பு காரணமாக காலமானார். குழந்தை நட்சத்திரம் முதல் கன்னட ரசிகர்களால் கொண்டாடப்பட்ட அவரது வாழ்க்கை பற்றிய தொகுப்பு இது.

1976-ம் ஆண்டு வாக்கில் கன்னட சினிமாவை ஆண்டு கொண்டிருந்த 'மாஸ் ஹீரோ' ராஜ்குமார் நடிக்க ஒப்பந்தமான திரைப்படம் 'பிரேமதா கனிகே'. அந்த திரில்லர் படத்தின் கதைக்கு ஆறு மாத வயது குழந்தை தேவைப்பட்டது. படத்தின் இயக்குநர் சோமசேகர் அதற்காக குழந்தையை தேடிக்கொண்டிருக்க, ராஜ்குமார் ஒரு ஐடியா கொடுத்தார். அது, பிறந்த ஆறு மாதமே ஆன அவரின் இளைய மகனான புனித் ராஜ்குமாரை நடிக்கவைப்பது என்பது.

வருங்காலத்தில் புனித் ஒரு பெரிய நடிகராக வலம் வருவார் என்ற நினைப்பில் அன்று ராஜ்குமார் நடிக்க வைத்திருக்கலாம். ஆனால், சிவராஜ்குமார், ராகவேந்திரா ராஜ்குமார் ஆகியோரைவிட புனித் பெரிய புகழை ஈட்டுவார் என்று ராஜ்குமார் நினைத்திருக்க வாய்ப்பில்லை. அதுதான் நடந்தது. இன்றைய நிலையில் சிவராஜ்குமார் கன்னட சினிமாவின் மூத்த நடிகராக இருந்தாலும், அவரை விட அதிகம் ரசிகர்களால் விரும்பப்படுவது புனித் மட்டுமே.

ஆறு மாத குழந்தையாக இருக்கும்போதே நடிக்க ஆரம்பித்த புனித் சிறுவயதிலேயே அற்புதமான நடிப்பால் மக்களை கவர்ந்தவர். தனது 10-வது வயதிலேயே 'பெட்டாடா ஹூவு' (Bettada Hoovu) படத்திற்காக சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருதை வென்றார். அதனால் அப்போதே கன்னட மக்கள் அவரை கொண்டாடித் தீர்த்தனர். மக்கள் கொண்டாடும் அளவுக்கு படங்களும் குவிந்தன. 14 வயதாகும் போதே 14 படங்கள் வரை நடித்துள்ளார். எனினும் 1989-ல் வெளியான 'பரசுராம்' படத்தில் தனது தந்தையுடன் நடித்த புனித் அதன்பின் திரை வாழ்க்கையில் இருந்து ஒதுங்கினார். மீண்டும் வந்துவிடுவார் என்று எதிர்பார்த்திருந்த ரசிகர்களை நீண்ட காலம் ஏமாற்றினார். இந்தக் காலகட்டத்தில் புனித்தின் மூத்த சகோதரர் சிவராஜ்குமார் தொடர்ச்சியாக வெற்றி பெற்று, கன்னட சினிமாவின் முன்னணி ஹீரோ என்ற நிலைக்கு உயர்ந்தார்.

ஒருகட்டத்தில் தன்னை மக்கள் மறந்துவிட்டனர் என்ற நிலையில்தான் திடீர் சர்ப்ரைஸாக 'அப்பு' என்ற படத்தின் மூலமாக 2002-ல் ரீ என்ட்ரி கொடுத்தார் புனித். இந்தப் படத்தை பூரி ஜெகநாத் எழுதி இயக்கியிருந்தார். அதுவரை கர்நாடக மக்கள் புனித்தை குழந்தை நட்சத்திரமாகவே பார்த்திருந்தனர். அதனால் 'அப்பு' படத்தில் எப்படி இருக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பு. மக்களின் அந்த எதிர்பார்ப்பை தனது நடிப்பு மூலமாக பூர்த்தி செய்தார். தனது காதலுக்காக ஒரு போலீஸ் அதிகாரியை எதிர்க்கும் ஓர் அச்சமற்ற இளைஞனை சுற்றி நடக்கும் சம்பவங்களே கதை.

இளம்வயதாக இருந்த புனித், தனது அசத்தியமான ஜிம்னாஸ்டிக்ஸ் திறன், துள்ளலான நடனம் மற்றும் காமெடியால் மக்களை வெகுவாக ரசிக்க வைத்தார். குழந்தையாக அவரைக் கண்ட கன்னட மக்கள், அவரின் இந்த அவதாரத்தை எதிர்பார்க்கவில்லை. விளைவு, பாக்ஸ் ஆஃபிஸில் கன்னட சினிமா இதுவரை கண்டிராத வசூல். வசூலைத் தாண்டிலும் அந்த படம் ஏற்படுத்திய தாக்கம் காரணமாக மக்கள் மத்தியில் 'அப்பு' என்றே இன்றுவரை அழைக்கப்பட்டு வருகிறார்.

'அப்பு'வுக்கு பிறகு குடும்ப பொழுதுபோக்குகளை மையப்படுத்திய திரைப்படங்களுக்கு முக்கியவத்துவம் கொடுத்து நடிக்க ஆரம்பித்தார். 2015-ம் ஆண்டு ஆக்‌ஷன் அவதாரம் எடுக்க தொடங்கினார். அதுவரை சினிமா வாழ்க்கையில் பாதுகாப்பாக விளையாடிய புனித் தந்தையின் மாஸ் அந்தஸ்த்தை கையிலெடுக்க தான் கடைபிடித்த வரம்புகளை புறம்தள்ளினார். 2015-ல் வெளியான 'ராணா விக்ரமா' படம் அவரின் மாஸ் ஹீரோ அவதாரத்துக்கு விதை போட்டது. இதில் இரட்டை வேடம். படம் புனித் எதிர்பாராத வெற்றியை கொடுத்தது. கூடவே விருதுகளையும்.

அடுத்ததாக தமிழில் வெளியான 'இவன் வேறமாதிரி' படத்தை ரீமேக் செய்தார். 'சக்ரவ்யூஹா' என்கிற பெயரில் வெளியான இப்படம் 'ராணா விக்ரமா' படத்தைக் காட்டிலும் பெரிய வெற்றி. குறிப்பாக அவரை பின்பற்றிய தீவிர ரசிகர்களுக்கு 'சக்ரவ்யூஹா'வில் அவர் காட்டிய ஆக்‌ஷன் பெரிய விருந்தாக அமைந்தது. படிப்படியாக 2014 முதல் இவர் நடித்த 'பவர்' முதல் 'டோட்மனே ஹட்கா' வரையிலான ஆக்‌ஷன் படங்கள் ரசிகர்கள் மத்தியில் 'பவர் ஸ்டார்' என கொண்டாட வைத்தது. 2017-ல் தனது தந்தையின் பெயரில் 'ராஜகுமாரா' படம் அந்த ஆண்டின் அதிக வசூல் செய்த திரைப்படங்களில் ஒன்றாக மாறியது. இதன்பின் பெரிய ஹிட் எதுவும் புனித் கொடுக்கவில்லை. கடைசியாக இவர் நடிப்பில் வெளியான 'யுவரத்னா' கலவையான விமர்சனங்களை பெற்றது.

குழந்தையில் இருந்து ஒருவரை மக்கள் ரசிப்பது பல கலைஞர்களுக்கு கிடைக்காத ஒரு வாய்ப்பு. அந்த வாய்ப்பை பெற்ற ஒரு சிலரில் புனித் ராஜ்குமார் மிக முக்கியமானவர். ஒரு பெரிய ஸ்டாரின் மகன் என்பதை தாண்டி கன்னட மக்களால் அதிகமாக நேசிக்கப்பட்டவர் புனித். அதே அளவு மக்களையும் நேசித்தவர் புனித். இதை அவரின் நடவடிக்கைகளை கவனித்தவர்களுக்கு நன்றாக தெரியும்.

ஒரு நடிகராக மட்டுமில்லாமல் தயாரிப்பாளர், சின்னத்திரை தொகுப்பாளர் என பன்முகங்களை காண்பித்துள்ள புனித் மாரடைப்பால் 46 வயதில், தான் நேசித்த மக்களை விட்டுப் பிரிந்துள்ளார். நிச்சயம் அவரின் இறப்பு கன்னட சினிமாவுக்கும், ரசிகர்களுக்கும் பெரும் இழப்பே.

- மலையரசு