காஞ்சிபுரத்தில் இரண்டு தனியார் காப்பக இல்லத்தின்மீது பல குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகின்றன. இதன் பின்னணியில் தமிழகத்தில் குழந்தைகள் நலக் குழுமங்கள் செயல்படாமை, பாதுகாப்பு கூட்டங்கள், கலந்துரையாடல்கள் அரசு சார்பில் நடத்தப்படாதது ஆகியவையே முக்கிய காரணங்களாக பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் குழந்தைகள் மீதான வன்கொடுமைகள் அதிகரித்துவரும் போதிலும், 38 மாவட்டங்களில் 32 மாவட்டங்களில் மட்டுமே தான் குழந்தைகள் நலக் குழுமம் செயல்பட்டுவருகிறது. மேலும் இளையோர் நீதி சட்டத்தின்படி மூன்று மாதத்திற்கு ஒரு முறை, மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுடன் கலந்துரையாடல் மேற்கொள்ள வேண்டும்.
ஆனால் காஞ்சிபுரம் மாவட்டம் 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற கலந்துரையாடல் கூட்டத்திற்கு பிறகு தற்போது வரை துறை சார்ந்த அதிகாரியுடன் எந்த ஒரு கலந்துரையாடல் கூட்டம் நடைபெறவில்லை. இதே போல் தான் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்கள் நிலையாக உள்ளது. இதுவே குழந்தைகளின் பாதுகாப்பு எந்த அளவுக்கு கேள்விக்குறியாகி உள்ளது என்பதை அப்பட்டமாக காட்டுவதாக அரசின் மீது குற்றச்சாட்டு எழுகின்றது.
காஞ்சிபுரத்தில் வல்லக்கோட்டை அருகே எறையூர் கிராமத்தில், தனியார் குழந்தைகள் இல்லத்தில் 15 ஆண் குழந்தைகள் மட்டுமே அரசு பதிவில் பதிவு செய்யப்பட்டுள்ளனர். ஆனால் கூடுதலாக அந்த இல்லத்தில் சுமார் ஆறு பெண் குழந்தைகளையும் சட்டத்திற்கு புறம்பாக பராமரித்து வருவதாக ஆதாரங்கள் நமக்கு கூறுகின்றன. மேலும் அங்குள்ள சிறுவர்கள் அந்தப் பெண் குழந்தைகள் குளிக்கும் போது பார்ப்பது, நிர்வாணமாக புகைப்படம் எடுப்பது, பாலியல் தொடர்பு வைத்திருப்பது என குற்றச்செயல்களில் ஈடுபடுவதாகவும் புகார் தெரிவிக்கப்படுகிறது. சிறுவர்கள் மட்டுமல்லாமல் அந்த காப்பகத்தில் இருக்கும் சிறுமிகளிடம், இல்ல நிர்வாகியின் வளர்ப்பு மகன் பரத்வாஜ் என்பவர் பாலியல் தொடர்பு வைத்திருப்பதாகவும், மேலும் இந்த இல்லத்தின் நிர்வாகி சாமி மற்றும் இங்கே உள்ள முதியோர் இல்லத்தில் உள்ள சேகர் என்பவரும் இதே ரீதியில் சிறுமிகளை பயன்படுத்துவதாகவும் புகாரொன்று அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் அங்கு உள்ள சிறுமியை சேகர் என்பவர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியது வெளியே தெரிந்து விட்ட காரணத்தினால் அச்சிறுமியை வீட்டிற்கு அனுப்பி விட்டதாகவும் புகார் உள்ளது. மேலும் அவர்கள் நடத்திவரும் மாட்டுப் பண்ணைக்கு அங்குள்ள சிறுவர்களைக் கொண்டே சாணி அள்ளுதல், பால் கறத்தல், மாட்டுக்கொட்டகை கழுவி சுத்தப்படுத்துதல் போன்றவைகளோடு கல் சுமக்க வைத்தல், குப்பை கொட்டி எரித்தல், பாத்திரம் கழுவுதல், தண்ணீர் தொட்டி கழுவுதல், முதியோர்களை குளிப்பாட்டுதல் என குழந்தைகளை அனைத்து அடிமைத்தனமான வேலைகளுக்கும் பயன்படுத்துகிறார்கள் என அடுக்கடுக்காய் சமூக பாதுகாப்பு அமைப்பு இயக்குனருக்கு புகார் கிடைத்துள்ளது.
இதேபோல் காஞ்சிபுரத்தின் குன்றத்தூர் ஒன்றியம் வரதராஜபுரம் மகாலட்சுமி நகரில் இயங்கிவரும் தனியார் குழந்தையை காப்பகத்தில் நிர்வாகியின் பத்தாம் வகுப்பு படிக்கும் மகன், அங்கிருக்கும் குழந்தைகளின் கைகளில் சூடு வைப்பதாகவும், பிளாஸ்டிக் பைப்புகளை ஒட்ட வைப்பதற்கு பயன்படுத்தப்படும் பிளாஸ்டர் கொண்டு குழந்தைகளின் தலையில் ஒட்டிய பின்னர் ரத்தம் வருமளவிற்கு பிரித்து எடுத்து துன்புறுத்துவதாகவும் சமூக பாதுகாப்பு அமைப்பிற்கு புகார் கிடைத்திருக்கிறது. குழந்தை இல்லத்தை நடத்துவதற்கு அனுமதி வாங்கியதற்கு கொடுத்த முகவரியும் தற்போது சம்பந்தமில்லாத வேறொரு இடத்தில் குழந்தைகளை வைத்திருப்பதாகவும் புகார் இருக்கின்றது.
இந்தப் புகார்கள் மீது தற்போது வரை சமூக பாதுகாப்பு அமைப்பை சார்ந்த அதிகாரிகள் யாரும் அடிப்படை விசாரணை கூட மேற்கொள்ளப்படவில்லை என்பது, இங்கே குறிப்பிடத்தக்கது.
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல் 38 மாவட்டங்களில் ஒரு மாவட்டத்தில் இருக்கக்கூடிய இரண்டு குழந்தைகள் காப்பகத்தில் நடைபெறும் வன்கொடுமைகளின் அதிர்ச்சிகரமான சம்பவங்களை இங்கே பட்டியலிட்டுள்ளோம். இதையெல்லாம் தடுக்க அனைத்து மாவட்டங்களிலும் குழந்தைகள் நலத்துறை என்று தனித்துறை உருவாக்கப்பட வேண்டும். இத்துறையின் கீழ் மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு, மாவட்ட குழந்தை நல குழு, இளையோர் நீதி குழுமம், குழந்தை பாதுகாப்புக் குழுக்கள் ஆகியன கொண்டு வரப்பட வேண்டும் இதன் மூலமாகவே தமிழகத்தில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கவும் குறைக்கவும் முடியும்.
இளையோர் நீதி குழுமம் வகுத்துள்ள சட்டத்தின்படி ஒவ்வொரு மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர்கள், மூன்று மாதத்திற்கு ஒரு முறை ’மாவட்ட குழந்தைகள் நல குழுமத்திடம்’ கலந்துரையாடல் செய்ய வேண்டும் என்பது விதி. இதற்கு ஏற்பாடு செய்வது மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர். ஆனால் அவ்வாறு நடைபெறுவதில்லை என்பதுதான் நிதர்சனம். காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு ஒருமுறை மட்டுமேதான் கலந்துரையாடல் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. அதன்பிறகு தற்போது வரை கலந்துரையாடல் கூட்டம் நடைபெறவில்லை. இதன் காரணமாக சிறார்கள் வன்கொடுமைக்கு ஆளாகும் போது மாவட்ட ஆட்சியர் கவனத்திற்கு கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது என பெற்றோர்களும் சமூக ஆர்வலர்களும் குற்றம் சாட்டுகின்றனர்.
இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து வல்லக்கோட்டை தனியார் குழந்தைகள் காப்பக உரிமையாளரிடமும் நாம் பேசினோம். அவர், “எங்கள் காப்பகத்தில் அனைத்து பணிகளுக்கும் உரிய பணியாளர்கள் நியமித்துள்ளோம். ஏறத்தாழ 30 பணியாளர்கள் பணிபுரிகிறார்கள். இருப்பினும் இந்த சிறார்கள் எதற்காக அந்த பணியை மேற்கொண்டார்கள் என்பது குறித்து எனக்கு தெரியவில்லை. அது குறித்து விசாரிக்கிறேன். இனிமேல் இதுபோன்ற தவறு நடைபெறாமல் பார்த்துக் கொள்கிறேன். மேலும் எங்கள் காப்பகத்தில் பெண் பிள்ளைகள் யாரும் தங்க வைக்கப்படவில்லை” என்றார்.
இதுகுறித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தியை தொடர்புகொண்டு கேட்கும் போது, “காஞ்சிபுரம் மாவட்டத்தில் குழந்தைகள் நல குழுமத்திற்கு உறுப்பினர்களை நேர்காணல் செய்துள்ளோம். அதனுடைய விவரத்தை தமிழக அரசுக்கு அனுப்பி வைத்துள்ளோம். விரைவில் மாவட்டத்தில் குழந்தைகள் நல குழுமம் உருவாக்கப்படும். மேலும் புகார் அளிக்கப் பட்டுள்ள காப்பகங்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு மூன்று சிறுவர்களை காப்பகத்தில் இருந்து மீட்டு அரசு அங்கீகரிக்கப்பட்ட காப்பகத்தில் சேர்த்துள்ளோம். மேலும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு துறை சார்பாக விளக்கம் கேட்டு சம்பந்தப்பட்ட காப்பகத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது” என்றார்.
- பிரசன்னா