சிறப்புக் களம்

"எங்கள் பகுதி வீதியோரவாசிகள் பசியால் வாடாமல் உதவுகிறோம்!" - ஒரு Vlogger-ன் முன்னெடுப்பு

"எங்கள் பகுதி வீதியோரவாசிகள் பசியால் வாடாமல் உதவுகிறோம்!" - ஒரு Vlogger-ன் முன்னெடுப்பு

நிவேதா ஜெகராஜா

சென்னை அண்ணா நகர் பகுதியை சேர்ந்த இளைஞர் குழுவொன்று, அன்றாடம் 100 முதல் 200 சாலையோர மக்களுக்கு உணவளித்துவருகின்றனர். food.impramation என்ற பெயரில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வலம் வரும் சூர்ய நாராயணன் என்ற இளைஞர் இந்த முன்னெடுப்பை தொடங்கியுள்ளார்.

தங்கள் பணி குறித்து நம்மோடு பகிர்ந்துக்கொண்ட அவர், “நாங்கள் சென்னை அண்ணா நகர் பகுதியில் வசிக்கிறோம். இங்கிருக்கும் சாலையோர மக்களுக்கு உணவளிக்க திட்டமிட்டு, அதை செயல்படுத்தி வருகிறோம்.

என் நண்பர்கள் நரேன், ப்ரகலாத், சந்தோஷ், ஜெஷ்வந்த், ஹர்ஷித் ஆகியோர் எனக்கு இதில் உதவி புரிகின்றனர். உணவுக்கு ஆகும் செலவுகளை, நாங்கள் எங்களுக்குள் பகிர்ந்துக் கொள்கிறோம். மதிய உணவுதான் பிரதானம். சில நேரத்தில், இரவு உணவும் அளிப்போம்.

கடந்த ஒரு மாதமாக, இந்த முன்னெடுப்பை நாங்கள் செய்து வருகிறோம். இப்பகுதி சாலையோர மக்கள் எங்களுக்கு பரிச்சயமாக்கிவிட்டார்கள். அதனால் ஒருவர்கூட பசியால் வாடாதபடி பார்த்துக்கொள்கிறோம்.

நாங்கள் இத்தனை மணிக்கு உணவளிக்க வருவோமென்பது அப்பகுதி மக்களுக்கு தெரிந்துவிடுவதால், அவர்களே வரிசையில் குறிப்பிட்ட இடங்களில் காத்திருக்க தொடங்கிவிடுகிறார்கள். அவர்களின் ஒத்துழைப்பால், எங்களுக்கு பணிச்சுமை குறைந்துவிட்து.

சாலையோர மக்களுக்கு மட்டுமன்றி, எங்கள் பகுதி காவலர்களுக்கும் நாங்கள் பரிச்சயமாகிவிட்டோம். அவர்கள், எங்களுக்கு வழி கூறி, எங்கு யார் இருக்கின்றார்கள் என வழிகாட்டுகின்றனர்.

தொடக்கத்தில், அண்ணா நகர் ரவுண்டானா பகுதியில் மட்டுமே உணவளித்துக் கொண்டிருந்தோம். இப்போது முடிந்தவரை அண்ணா நகர் முழுக்க உணவளிக்கிறோம். நான், அடிப்படையில் இணையதளத்தில் Vlogger. என்னுடைய சமூகவலைதள பயன்பாடுகள் மூலம், இதை விரிவுப்படுத்தி வருகிறேன். தொடக்கத்தில் சிலர் பொருளாதார ரீதியாக உதவினர். இருப்பினும் நாங்கள் அதை ஊக்கப்படுத்தவில்லை. ‘எங்களால் முடிந்தளவு’ என்பதே எங்கள் நோக்கம். ஆகவே இப்போதுவரை நாங்களே செய்கிறோம். இன்னும் எவ்வளவு நாட்கள் முடியுமோ, அவ்வளவு நாட்கள் இதைத்தொடர்வோம்” என்றார்.

இளைஞர்களின் இந்த தன்னார்வ முயற்சி அப்பகுதி முன்கள வீரர்களுக்கும், ஆதரவற்றோருக்கும் மிகப்பெரிய நம்பிக்கையை கொடுத்துள்ளது.