தேனி மாவட்டம் குரங்கணி காட்டுப் பகுதிக்கு மலைப் ஏற்றம் பயிற்சியை ஏற்பாடு செய்த சென்னை ட்ரெக்கிங் கிளப் அமைப்பு கடந்த ஒரு வாரமாகவே மூடப்பட்டதாக கூறப்படுகிறது.தேனி மாவட்டம் போடி அருகே குரங்கணி வனப்பகுதியில் திருப்பூர் மற்றும் சென்னையை சேர்ந்த இரண்டு குழுவினர் மலையேறும் பயிற்சியில் ஈடுபட்டனர். அப்போது திடீரென ஏற்பட்ட காட்டுத்தீயில் மலையேற்றம் சென்ற 30-க்கும் மேற்பட்டோர் சிக்கினர். காட்டுத்தீ குறித்து தகவலறிந்து அப்பகுதிக்கு விரைந்த வனக்காவலர்கள், ஊர்மக்களுடன் இணைந்து அவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
தீக்காயங்களுடன் மீட்கப்பட்டுள்ள 27 பேர் தேனி, மதுரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். காட்டு தீயில் சிக்கி 9 பேர் உயிரிழந்துள்ளதாக தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் கூறியுள்ளார். இதில் 6 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள், 3 பேர் ஈரோட்டை சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. மீட்கப்பட்ட 27 பேரில் 10 பேருக்கு எவ்வித காயமும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் இந்த மலை ஏற்றம் நிகழ்வை ஒருங்கிணைத்த சென்னை ட்ரெக்கிங் கிளப் அமைப்பு கடந்த ஒரு வாரமாக சென்னையில் மூடப்பட்டிருப்பதாக தெரிகிறது. ஏற்கெனவே இந்நிறுவனம் சார்பில் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் 4 முறை அசம்பாவித சம்பங்கள் நடைபெற்றுள்ளது. 2012 ஆம் ஆண்டு சென்னை ஐஐடி மாணவர் பிரபு சங்கர் என்பவர் மலை ஏற்றத்தின்போது ஆந்திரம் மாநிலத்தில் உயிரிழந்தார்.
சென்னை ட்ரெக்கிங் கிளப் பிப்ரவரி 2008ஆம் ஆண்டு தொடங்கப்பட்டுள்ளது. பெல்ஜியம் நாட்டை சேர்ந்த பீட்டர் வேன் கெய்ட் என்பவர் இந்த கிளப்பை நிறுவியுள்ளார். சென்னை துரைப்பாக்கத்தில் 2008ஆம் ஆண்டு சிறு சிறு ட்ரெக்கிங்கை தொடங்கிய இந்த நிறுவனத்தில், கடந்த 3 ஆண்டுகளில் ஆயிரக்கணக்கோனோர் சேர்ந்துள்ளனர். அதன்படி தற்போது 40 ஆயிரம் உறுப்பினர்கள் இந்த கிளப்பில் உள்ளதாக கூறப்படுகிறது. அத்துடன் 150-க்கும் மேற்பட்ட கார்ப்ரேட் கம்பெனிகளின் பணியாளர்கள், இந்த கிளப்பின் கீழ் தூய்மை பணிகளை அவ்வப்போது மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விவரங்கள் இல்லாத இணையதளம் !
http://chennaitrekkers.org/ என்ற இணையதள முகவரியை ஆராய்ந்தபோது, அதில் சென்னை ட்ரெக்கர்ஸ் கிளப்-பின் தொலைப்பேசியோ அல்லது செல்போன் எண்களோ இல்லை. இவர்கள் தங்களுடைய பேஸ்புக் சமூக வலைத்தளத்தில் மூலமாக, இதுபோன்ற நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்கின்றனர். ஒவ்வொரு பயண ஏற்பாட்டுக்கும் ஒருங்கிணைப்பாளராக சிலர் நியமிக்கப்படுவார்கள். அவர்களின் ஒருங்கிணைப்பு மூலமாக மலையேற்றம், பைக் பயணங்கள் ஏற்பாடு செய்யப்படுகிறது. இதில் இணைய நம்முடைய இமெயில் முகவரியை பதிவிட வேண்டும். பின்பு, அவர்கள் மெயில் மூலமாக நம்மை தொடர்பு கொள்வார்கள். அதில் சென்னை ட்ரெக்கர்ஸ் சார்பில் மேற்கொள்ளப்படும் அடுத்தடுத்த நிகழ்வுகள் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக மார்ச் 31 மற்றும் ஏப்ரல் 1 ஆம் தேதி சென்னையில் இருந்து சேலம் மாவட்டம் சேர்வராயன் மலைத் தொடருக்கு பைக்கில் செல்லும் ரோட் ட்ரிப் நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது. இந்நிகழ்ச்சிக்கு தினேஷ், பூங்கதிர்வேலன் என்கிறவர்கள் ஒருங்கிணைக்கிறார்கள்.
இதில் தினேஷ் என்பவரை தொடர்புக் கொண்டு கேட்டதற்கு "சென்னை ட்ரெக்கிங் கிளப் நிறுவனர் வெளிநாட்டில் இருக்கிறார். எனக்கு லாங் டிரைவ் பைக்கில் போக விருப்பம் என்பதால், பைக் ரைட் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைப்பேன். இனி, எந்தவொரு ட்ரெக்கிங் மற்றும் பைக் ரைட் நிகழ்ச்சிகளும் நடத்தப்படாது" என தெரிவித்தார்.