சிறப்புக் களம்

சிஎஸ்கேவின் பவர் ப்ளே அஸ்திரம்; டி-20ன் நம்பிக்கை நாயகன் தீபக் சாஹர்...!

சிஎஸ்கேவின் பவர் ப்ளே அஸ்திரம்; டி-20ன் நம்பிக்கை நாயகன் தீபக் சாஹர்...!

EllusamyKarthik

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பந்து வீச்சில் துருப்புச் சீட்டாக விளங்கும் தீபக் சாஹரின் அரிய சாதனைகளை திரும்பிப் பார்க்கலாம்.

சிஎஸ்கேவின் பவர் பிளே அஸ்திரமாக விளங்கி வருபவர். சர்வதேச அளவில் சிறப்பான சாதனைகளை வசமாக்கியுள்ளவர். ஆடவர் டி20 கிரிக்கெட்டில் ஹாட்ரிக் வீழ்த்திய முதல் இந்தியர். சர்வதேச டி20ல் சிறந்த பந்துவீச்சாளராக உள்ள தீபக்கின் சாதனைதான் இது.  

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பவர் பிளே ஸ்பெஷலிஸ்ட் ஆக அறியப்படுபவர் தீபக் சாஹர். சிஎஸ்கே தடை செய்யப்பட்டிருந்த இரண்டாண்டுகள் புனே அணிக்கு விளையாடிய தோனியை, தனது ஸ்விங் பவுலிங் மூலம் வெகுவாக கவர்ந்தார் தீபக். புதிய பந்தில் விக்கெட்டுகளைச் சரிக்கும் வல்லமை கொண்ட தீபக், 2018 ஆம் ஆண்டு, சென்னை அணி ஐபிஎல் கோப்பையை வெல்ல முக்கிய துருப்புச் சீட்டாக இருந்தார். 2019 ஆம் ஆண்டு சென்னை அணி ஃபைனல் வரை முன்னேறிய சீசனில் 22 விக்கெட்டுகளைச் எடுத்திருந்தார் தீபக். இவரது ஸ்விங் திறனுக்கு அங்கீகாரமாக இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பை வழங்கியது பிசிசிஐ.

அந்த ஆண்டு வங்கதேசத்திற்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட இருபது ஓவர் தொடரில் மலைக்க வைக்கும் சில அரிய சாதனைகளை நிகழ்த்தினார் தீபக். நாக்பூரில் நடைபெற்ற போட்டியில் வங்கதேசத்திற்கு எதிராக ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய தீபக் சாஹர், அந்தப் போட்டியில் 3.2 ஓவர்கள் வீசி 7 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஹாட்ரிக் வீழ்த்தியதற்கு அடுத்த பந்திலும் விக்கெட் வீழ்த்தியிருந்தார் அவர்.

இதன் மூலம் ஆடவர் இருபது ஓவர் கிரிக்கெட்டில் ஹாட்ரிக் வீழ்த்திய முதல் இந்தியர் என்ற பெருமையையும், சர்வதேச அளவில் டி20 இல் ஹாட்ரிக் வீழ்த்திய முதல் வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையையும் வசமாக்கினார் தீபக். சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஹாட்ரிக் வீழ்த்திய முதல் இந்தியராக உள்ளார் மகளிர் கிரிக்கெட் வீராங்கனை ஏக்தா பிஸ்ட்.

சர்வதேச இருபது ஓவர் கிரிக்கெட்டில் சிறந்த பந்து வீச்சாகவும் தீபக் சாஹரின் சாதனையே முதலிடத்தில் உள்ளது. அனைத்து வகை இருபது ஓவர் போட்டிகளில் தீபக் சாஹரின் சாதனை முதல் 6 இடங்களுக்குள் உள்ளது கூடுதல் சிறப்பு.

இத்தகையை பல சிறப்புகளைக் கொண்ட தீபக் சாஹர் நடப்பு ஐபிஎல் சீசனில் மீண்டும் ஃபார்முக்கு வந்துள்ளார். பஞ்சாபுக்கு எதிரான போட்டியில் 13 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார் தீபக். இந்நிலையில் தீபக் சாஹரின் மீதான எதிர்பார்ப்பு பன் மடங்கு எகிறியுள்ளது. சென்னை அணி பேட்டிங்கின் போது பவர் பிளேவில் சோபிக்கத் தவறினாலும், பந்து வீச்சில் எதிரணிக்கு நெருக்கடி கொடுக்க தவறுவதில்லை. அதற்கு முக்கிய அஸ்திரமாக வலு சேர்த்து வருகிறார் தீபக் சாஹர்.