சென்னையில் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமலும், எந்நேரமும் மக்கள் கூட்டமாக உலவும் இடமாகவும் இருப்பது தியாகராயர் நகர். இதனை தி.நகர் என்று கூறினால் தான் பல பேருக்கு தெரியும். இதேபோல் தி.நகரில் முக்கிய இடமாகவும், பெண்கள் அதிகம் விரும்பும் இடமாகவும் இருப்பது சவுந்தர பாண்டியனார் அங்காடி. இதையும் பாண்டி பஜார் என்று கூறினால்தான் பலருக்கு தெரியும். இந்த சாலையில் பெரும்பாலும் துணிக்கடைகளே அதிகம் காணப்படுகின்றன. அதுமட்டுமின்றி எலக்ட்ரானிக்ஸ், வீட்டு உபயோகப்பொருட்கள், பூங்கொத்துகள், உணவகங்கள் உள்ளிட்ட பல்வேறு கடைகள் உள்ளன.
மரங்கள் சூழ குறுகிய சாலையை கொண்ட பாண்டி பஜாரில் எந்நேரமும் போக்குவரத்து நெரிசலுக்கு குறையிருக்காது. சாலையின் இருபுறங்களும் கார்கள் நின்றுகொண்டிருக்கும். அதை நிறுத்திவிட்டு ஷாப்பிங் சென்றவர்கள் நேரத்தை மறந்து துணிகள் உள்ளிட்டவற்றை ஆர்வத்துடன் வாங்கிக்கொண்டிருப்பார்கள். இத்தகைய பாண்டி பஜார் தற்போது மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் மூலம் புதுப்பொலிவுடன் மாறி வருகிறது. இந்த திட்டத்திற்கு மத்திய அரசிடம் இருந்து நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அது மாநில அரசிடம் வழங்கப்படுகிறது. அதன்பின்னர் அந்த நிதி மாநகராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்படுகிறது. அதன்படி, சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தலைமையிலான இயக்குநர்கள் குழு மூலம் சென்னை ஸ்மார்ட் சிட்டி லிமிடெட் என்ற நிறுவனம் அமைக்கப்பட்டு வளர்ச்சிப் பணிகள் நடைபெறுகின்றன. நீண்ட மாதங்களாக திட்டம் அன்னநடை போட்டு செயல்படுத்தப்பட்டாலும், அலங்காரத்திற்கு பஞ்சமின்றி அரங்கேறிக்கொண்டிக்கிறது.
இதற்கு முன் கார்கள் நிறுத்தப்பட்ட பிளாட்பாரங்கள் தற்போது பெரிய மால்களின் பார்க்கிங்கில் போடப்பட்டிருக்கும் சதுரக் கற்களால் அமைக்கப்பட்டுள்ளன. அதில் இருசக்கர வாகனங்கள் மட்டுமே நிற்கின்றன. அதேசமயம் யாரும் காரை கொண்டு வந்து நிறுத்த முடியாத வகையிலும், பிளாட் பாரத்தில் பைக்கை ஓட்டிச் செல்ல முடியாத வகையிலும் தடுப்புகள் போடப்பட்டுள்ளன. இதற்கு முன் சாலையோரத்தில் சிரமப்பட்டு நடந்த மக்கள் தற்போது பிளாட் பாரங்களில் ஒய்யாரமாக நடந்து செல்கின்றனர்.
அத்துடன் சாலையில் ஆங்காங்கே வரையப்பட்டிருக்கும் வண்ண ஓவியங்களின் அருகே நின்று பலரும் செல்ஃபி மற்றும் போட்டோக்களை எடுத்துக்கொண்டு செல்கின்றனர். இதற்கு முன் இருந்த சாதாரண தெருவிளக்குகள் மாற்றப்பட்டு, வளைவான டிசைன் கொண்ட அழகிய விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இரண்டு விளக்கு கம்பங்களுக்கு ஒன்று என்ற முறையில் சாலை நெடுக சிசிடிவி கேமராக்களை மாநகராட்சி நிர்வாகம் அமைத்துள்ளது. இதனால் மொத்த பஜாரும் முழு பாதுகாப்பு வளையத்திற்குள் இருக்கிறது. பாண்டி பஜாரில் சுற்றித்திரிய நினைப்பவர்களுக்காக ஸ்மார்ட் சைக்களில்கள் தயார் நிலையில் உள்ளன. பேருந்து நிலையங்களின் மேற்பலகைகள் கூட திரையுடன் காட்சியளிக்கிறது.
பஜார் முடியும் சாலை சந்திப்பில் பிரம்மாண்டமாக 4 அடுக்கு கொண்ட வாகன பார்க்கிங் கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. இந்த கட்டடம் முடிந்த பின்னர் பார்க்கிங் பிரச்னையும் பஜாரில் இருக்காது எனப்படுகிறது. அதுமட்டுமின்றி மாநகராட்சி அதிகாரிகள் சிலரிடம் பேசிய போது, பார்க்கிங் கட்டடம் கட்டி முடித்த பின்னர் பஜாருக்குள் எந்த வண்டியும் அனுமதிக்கப்பட வேண்டாம் என்ற திட்டத்தில் இருப்பதாக கூறினார். அதன்பின்னர் பஜார் சாலைக்கு நடந்து செல்பவர்களும், ஸ்மார்ட் சைக்கிள் மூலம் செல்பவர்கள் மட்டுமே செல்லலாம். சாலையின் இரு பிளாட்பாரங்களிலும் குடைகளை வைத்து இருக்கைகள் அமைக்கவும் திட்டமிடப்பட்டிருக்கிறதாம்.
பஜாரில் இதற்கு முன் இருந்த மின்சார விநியோகப் பெட்டிகளுக்கு பதிலாக, ஒவ்வொரு கடைக்கும் தனித்தனியாக மின்சார கணக்கீடு காட்டும் வகையில் திறந்த வெளி மின் அளவீடு பொருத்தப்படவுள்ளது. இந்தப் பணிகள் அனைத்து முடிந்த பின்னர் பாண்டி பஜார் ஒரு மினி ஃபாரினாக மாறும் எனவும் கூறப்படுகிறது. அதன்பின்னர் சென்னையில் பிக்னிக் செல்ல நினைக்கும் குடும்பத்தினர்களின் விருப்பமான இடங்களில் முக்கியமானதாக பாண்டி பஜார் இருக்கும் என்பதில் சந்தேகம் வேண்டாம்.