சிறப்புக் களம்

‘வந்தால் வெள்ளம்.. வராவிட்டால் பஞ்சம்’ - சென்னையின் தொடர்கதை..!

‘வந்தால் வெள்ளம்.. வராவிட்டால் பஞ்சம்’ - சென்னையின் தொடர்கதை..!

webteam

தமிழகத்தில் ஆண்டு தோறும் தென் மேற்கு பருவமழை மற்றும் வடகிழக்கு பருவமழை பொழிகின்றன. இதில் வடகிழக்கு பருவமழை தான் பெரும் மழை பொழிவை நமக்கு தருகிறது. இந்தப் பருவத்தில் கிடைக்கும் மழைப்பொழிவு ஆண்டு தோறும் தமிழகத்தை தண்ணீர் பஞ்சத்தில் இருந்து மீட்க உதவுகிறது. விவசாயிகளும் இதை நம்பியே விதைக்கின்றனர். இந்த மழை ஆண்டு தோறும் மக்களுக்கு பாடம் ஒன்றை எடுத்துவிட்டு செல்கிறது. குறிப்பாக தமிழகத்தின் தலைநகரமான சென்னைக்கு ‘ஸ்பெஷல் கிளாஸ்’ நடத்திவிட்டு செல்கிறது எனக் கூறலாம்.

தமிழகத்தில் தண்ணீர் பஞ்சங்களில் சிக்கி தவிக்கும் பகுதிகளில் சென்னை முக்கியமான ஒன்று. ஆண்டு தோறும் கோடைக்காலங்களில் மக்கள் குடங்களை தூக்கிக்கொண்டு சாலை சாலையாக திரிவதை காண முடியும். குளிப்பதற்கும், குடிப்பதற்கும் நீரின்றி மக்கள் அலைந்து கொண்டிருப்பார்கள். இந்த வருடம் கூட தண்ணீர் பஞ்சம் என்பது மக்களின் பெரும் கவலையாக மாறியது. நீர்ப் பற்றாக்குறையால் சில நிறுவனங்கள் வேலையாட்களை வீட்டிலிருந்தே பணிபுரியுமாறு சொல்லும் அளவிற்கு சென்றன. பல உணவங்கள் மூடப்பட்டன. தட்டுப்பாடு காரணமாக மக்களுக்கு தண்ணீரின் விலையை உயர்த்திய மாநகராட்சி, அளவையும் குறைத்தது. 

சென்னையின் புறநகர் பகுதிகளில் உள்ள விவசாயக் கிணறுகள், குவாரிகள் ஆகியவற்றில் இருந்து தண்ணீர் கொண்டுவரப்பட்டது. இதற்கெல்லாம் மேலாக வேலூர் ஜோலார்பேட்டையில் இருந்து ரயில் மூலம் சென்னைக்கு தண்ணீர் வந்தது. தண்ணீருக்காக ஆங்காங்கே பிரச்னைகளும், சண்டைகளும் கூட அரங்கேறியது. ஒரு கட்டத்தில் சென்னை வாசிகளின் ஒருமித்த குரலாக தண்ணீர் மாறியது.  இதனை தடுக்க அரசு துரிதமான நடவடிக்கைகளை மேற்கொண்டு போதுமான அளவு மக்களின் குறையை போக்கியது. பல இடங்களில் சிறிய ரக வாகனங்களை குறுகலான சாலைகளுக்குள் அனுப்பி மக்களின் நீர்த் தேவையை மாநகராட்சி நிவர்த்தி செய்தது.

இத்தகைய நிலையில், கடந்த சில நாட்களாக சென்னையில் மழை பெய்த வண்ணம் உள்ளது. மழை என்றால் லேசாக பெய்துவிட்டு செல்வது போல் அல்ல. நில ஒரு மணி நேரம், இரண்டு மணி நேரம் நின்று பெய்கிறது. சில தினங்களுக்கு முன்பு நுங்கம்பாக்கத்தை குறிவைத்த மழை இரவு கொட்டித்தீர்த்தது. அன்று இரவு மட்டும் 102 மிமீ மழை. வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பே ஓரளவு மழைப் பொழிவை சென்னை கண்டுவிட்டது. 

இந்த மழையால் சென்னைக்கு நீர் ஆதரமாக இருக்கும் முக்கிய ஏரிகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. சென்னையின் நிலத்தடி நீர் மட்டமும் கணிசமாக அதிகரித்திருக்கிறது. இதனால் மக்களின் தண்ணீர் பஞ்சமும் கிட்டதட்ட குறைந்துவிட்டது. ஆனால் மழை இனிமேல் தான் இருக்கிறது என வானிலை மையம் அறிவித்துள்ளது. இத்தனை நாட்கள் தண்ணீருக்காக ஓடிய சென்னை மக்களுக்கு இனிமேல் தண்ணீரால் ஓடுவோமோ என்ற எண்ணம் எட்டிப்பார்க்க ஆரம்பித்துவிட்டது. இதற்கு காரணம் முந்தைய நினைவுகள் தான். 

கடந்த 2015ஆம் ஆண்டு சென்னையில் வந்த வெள்ளம் அந்த அளவிற்கு மக்களை மிரட்டிவிட்டு சென்றிருக்கிறது. அப்போது, இரண்டு தினங்களுக்கு விடாமல் அப்படியொரு கொட்டித்தீர்த்தது. மணிக்கணக்கில் இடைவெளியில்லாமல் பெய்த கனமழையால் சென்னையை சுற்றியுள்ள நீர் பிடிப்பு பகுதிகள் கிடுகிடுவென நீரின் அளவு உயர்ந்தது. அப்படி நீர் பிடிப்பு ஏரிகளில் இருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீரால்தான் சென்னையில் பெருவெள்ளம் ஏற்பட்டது.

குறிப்பாக, மழையால் வந்த வெள்ளம் என்று சொல்வதைவிட, சரியான நேரத்தில் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரி நீரை வெளியேற்றாமல், ஏரி நிரம்பும் வரை காத்திருந்து திடீரென தண்ணீரை திறந்ததே காரணம் என்றும் கூறப்படுகிறது. அதேசமயம் அப்போது வந்த வெள்ளம் சென்னையில் எந்த அளவிற்கு மழைநீர் வடிகால் சாக்கடைகள் இயங்குகின்றன என்பதையும் வெளிச்சம் போட்டு காட்டியது. சென்னைக்குள் வந்த வெள்ளநீர் வெளியேற வழியில்லாமல் குடியிருப்புகளில் புகுந்து நாசமாக்கியது. இதனால் சென்னையே முடங்கியது. சென்னையில் வசித்த வெளியூர் வாசிகள் ஊர் திரும்பியதால் சென்னை பெரும்பாலும் வெறிச்சோடியது. பின்னர் ஒருவழியாக நீர் அனைத்தும் கடலில் சென்று கலந்த பின்னர் சென்னை இயல்பு நிலைக்கு திரும்பியது.

சென்னையில் முறையான மழைநீர் சேகரிப்பு திட்டமிருந்தால் இதுபோன்று வீணாக கடலில் கலக்கும் நீரை சேமித்திருக்கலாம் என நீரியல் வல்லுநர்கள் கூறினர். அந்த நீரைக்கொண்டு கோடைகாலத்தில் தண்ணீர் பஞ்சம் ஏற்படமால் பார்த்துக்கொள்ள முடியும் என்று கருத்து தெரிவித்தனர். தற்போது கூட சில நாட்கள் பெய்த மழைக்கே சென்னையின் சாலைகள் குட்டைகளாக மாறியுள்ளன. 

இந்நிலையில் தமிழகத்தில் சில மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் அறிவிப்பும் வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பு மக்களை மறுபடி வெள்ளம் வருமோ என்ற அச்சத்திற்கு அழைத்துச்செல்லும் என்பதே நிதர்சனம். ஏனென்றால் நவம்பர், டிசம்பர் மாதம் என்றாலே சென்னை மக்களுக்கு கொஞ்சம் பீதி இருக்கத்தான் செய்கிறது. சுனாமி, பெருவெள்ளம், புயல் என பல பேரழிவுகளும் இந்த மாதங்களிலே நிகழ்ந்துள்ளன. கொஞ்சம் மழை கனமாக பெய்துவிட்டால், புயல் சின்னம் உருவாகியுள்ளதாக ஒரு செய்தி வெளியானால் கூட மக்களுக்கு சற்றே ‘கருக்குனு’ தான் இருக்கிறது. இது சென்னைவாசிகளுக்கே உண்டான பதட்டம்.

இதுபோன்ற மழைப்பொழிகளை எதிர்கொள்ள வேண்டுமென்றால் சென்னையில் முறையான மழைநீர் வடிகால் மற்றும் சேகரிப்பு திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என நிபுணர்கள் கூறுகின்றனர். அரசு மட்டுமின்றி மக்களும் மழைநீரை சேமித்தால் தான் இது சாத்தியமாகும் எனவும் வல்லுநர்கள் கூறுகின்றனர். இல்லையென்றால் வந்தால் வெள்ளம் வராவிட்டால் பஞ்சம் என்ற நிலை தான் சென்னையின் தொடர் கதையாக இருக்கும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.