சிறப்புக் களம்

சென்னை தினம்: ‘குலுங்க..குலுங்க’ தாங்கி செல்லும்..90 ஆண்டுகளாக தொடரும் புறநகர் ரயில் சேவை

EllusamyKarthik

இந்தியாவின் பரபரக்கும் மாநகரங்களில் ஒன்று சென்னை. சென்னைப்பட்டினம், மதராஸப்பட்டினம், மெட்ராஸ் என பல பெயர்களை தன்னகத்தே தாங்கி நிற்கிறது சென்னை. தமிழ்நாட்டின் தலைநகரான இந்நகரம் கடந்த 1639-இல் உருவாக்கப்பட்டது. தற்போது இந்நகரம் உதயமாகி 382 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. 

முன்பெல்லாம் தமிழ் சினிமாவில் ஒரு டிரெண்ட் இருந்தது. கிராமத்தில் இருக்கும் தமிழ் கதாநாயகர்கள் சிங்காரப் பட்டினமான சென்னைக்கு வேலை தேடி வந்து வாழ்வில் எப்படி செட்டிலானார்கள் என்பதே பெரும்பாலான கதைக்களமாக இருக்கும். காலப்போக்கில் அந்த கதைக்களம் பழிவாங்குவது, காதலிப்பது என மாற்றுக் காரணங்களை கொண்டது. இப்போது அந்த டிரெண்ட் தமிழ் சினிமாவில் பார்ப்பது அரிதினும் அரிது. 

அது போல வேலை நிமித்தமாக தமிழகத்தின் மற்ற பகுதிகளை சேர்ந்த சமானியர்கள் சென்னை நகரை நோக்கி நகர்ந்தவர்கள், நகர்ந்துக் கொண்டிருப்பவர்கள், எதிர்காலத்தில் சென்னைக்கு புலம் பெயர உள்ளவர்கள் என ஒவ்வொருவரும் நிஜ ஹீரோ தான். 

சென்னைக்கு புதிதாக வரும் கதாநாயகர்கள் எப்படி ஊரை வியப்புடன் பார்ப்பார்களோ அதே போல வியப்பு நம் நிஜ ஹீரோக்களுக்கும் கிடைக்கும். 

புறநகர் ரயில் சேவை

சென்னை என்றாலே மெரினா கடற்கரை, அண்ணா சாலை, கோட்டை, சென்ட்ரல் ரயில் நிலையம், மீனம்பாக்கம் விமான நிலையம் என பல லேண்ட் மார்க்குகள் நம் மைண்டுக்குள் வந்து போகலாம். அந்த பட்டியலில் சென்னை நகரை வலம் வந்துக் கொண்டிருக்கும் புறநகர் ரயில் சேவையும் பெரும்பாலானவர்களுக்கு இருக்கலாம். 

நடைவழி பயணம், டூவீலர் டிரைவ், ஆட்டோ சவாரி, ஷேர் ஆட்டோ, மாநகரப் பேருந்து, மெட்ரோ ரயில் என பல இருந்தாலும் புறநகர் ரயில் பயணம் அலாதியானது. குறிப்பாக இந்த ரயில் சாமானியர்கள் பயணிக்கும் CONVOY என சொல்லலாம். இதில் ஒவ்வொரு பயணிக்கும் அவருடன் பயணிக்கின்ற சக பயணிகள் தான் பாதுகாவலர்கள். 

1931 முதல் சேவையில்!

ஆங்கிலேயர்கள் ஆட்சியின் பிடியில் இருந்த அன்றைய மெட்ராஸ் மாகாணத்தை வணிக நோக்கத்தில் இணைக்கும் நோக்கில் தொடங்கப்பட்டது தான் புறநகர் ரயில் சேவை. முதலில் நீராவி எஞ்சின் கொண்ட ரயில் சேவையை தொடங்கவே பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் முடிவு செய்திருந்தனர். பின்னர் அது மின்சார ரயில் சேவையாக மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி இங்கிலாந்தில் இருந்து 25 எலெக்ட்ரிக் கேரியர்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. கட்டமைப்பு வேலைகள் முடிந்ததும் 1931-இல் ஏப்ரல் 2 அன்று புறநகர் ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. அதை தொடங்கி வைத்தவர் அப்போதைய மெட்ராஸ் கவர்னர் ‘சர் ஜார்ஜ் ஃபெட்ரிக் ஸ்டான்லி’. முதன்முதலில் இந்தியாவில் முழுவதும் மின்சாரத்தில் இயங்கிய மீட்டர் காஜ்களில் ஒன்றாக இந்த ரயிலின் ஓட்டம் அமைந்தது. சென்னை கடற்கரை தொடங்கி தாம்பரம் மார்க்கம் வழியாக அந்த ரயில் இயக்கப்பட்டுள்ளது. 

பின்னர் படிப்படியாக புறநகர் ரயில் சேவை விரிவடைந்தது.  

வழித்தடங்கள்!

வாகன நெரிசல் அதிகம் உள்ள சென்னை நகரில் இந்த ரயில் பறக்கும். டிக்கெட் விலையும் மலிவு. சென்னை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து தாம்பரம், செங்கல்பட்டு, திருமால்பூர் வரை ஒரு வழித்தடம், சென்னை கடற்கரை டூ வேளச்சேரி வழித்தடம், சென்னை கடற்கரை டூ கும்மிடிப்பூண்டி, சென்னை கடற்கரை டூ அரக்கோணம் என முக்கிய மார்க்கங்களில் புறநகர் ரயில் சேவை நீள்கிறது. பயணக் கட்டணமும் மலிவு தான். ரிட்டர்ன் டிக்கெட், சீசன் டிக்கெட்டுகளும் உள்ளன. பீக் ஹவர்களில் ரயில் பெட்டிகள் அனைத்திலும் கூட்டம் அள்ளும். தற்போது கொரோனா கட்டுப்பாடுகளால் அந்த கூட்டத்திற்கு தட்டுப்பாடு. 

தமிழ், ஆங்கிலம், இந்தி என மூன்று மொழிகளில் இந்த புறநகர் ரயில்கள் பேசும். அடுத்த ஸ்டேஷன் என்ன? ரயிலின் டெஸ்ட்டினேஷன்? என அனைத்தும் இதில் அடங்கும். பள்ளி  - கல்லூரி செல்லும் மாணவர்கள், இளைஞர்கள், வேலைக்கு செல்பவர்கள், மூத்த குடிமக்கள் என பலரையும் ‘குலுங்க.. குலுங்க’ தாங்கி செல்லும். 

இடையிடையே பாடல் பாடி அசத்துகின்ற திறமையாளர்களையும் பார்க்க முடியும். வாழ்க்கையின் எதார்த்ததை இந்த ரயில் அப்படியே சுமந்து செல்லும்.