காதல் தொல்லையிலிருந்து தப்பிக்க நினைத்த மாணவியை கல்லூரி வாசலில் இளைஞர் கழுத்தறுத்து கொலை செய்துள்ளார்.
சென்னை கே.கே.நகரில் தனியார் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியில் பி.காம். படித்து வரும் மாணவி அஷ்வினி. மாணவி இன்றைய வகுப்புகள் முடிந்து வீடு திரும்ப கல்லூரி வாசலுக்கு வந்தபோது அஷ்வினியை இளைஞர் ஒருவர் கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்திருக்கிறார். இதனால் நிலைதடுமாறி கீழே விழுந்த மாணவியை பொதுமக்கள் மீட்டு அருகிலிருந்த தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இச்சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர், “யாரும் எதிர்பாராதவிதமாக கல்லூரி வாசலில் வந்த மாணவியை யாரோ ஒருவர் திடீரென கூர்மையான கத்தியால் கழுத்தை தரதரவென்று கொடூரமாக அறுத்தார். இதனால் ரத்து வெள்ளத்தில் மாணவி கதறியடி மயங்கி விழுந்தார். பதறிய அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிப்போய் மாணவியை மீட்டு அருகிலிருந்த மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அந்த இளைஞருக்கும் பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர். பொதுமக்கள் மட்டுமல்லாமல் மாணவர்கள் உள்பட பலரும் அந்த இளைஞரை கடுமையாக எட்டி உதைத்து தாக்கினர். இதனால் அந்த இளைஞரும் சுயநினைவை இழந்ததுபோல காட்சியளித்தார்” என்றார்.
கொலைக்கான பின்னணி?
மாணவி அஷ்வினியும், அழகேசனும் மதுரவாயல் பகுதியைச் சேர்ந்தவர்கள். தன்னை காதல் செய்யுமாறு ஏற்கனவே பலமுறை அஷ்வினிக்கு அழகேசன் தொல்லை கொடுத்திருக்கிறார். அழகேசனின் தொல்லை தாங்காத அஷ்வினி இதுகுறித்து மதுரவாயல் போலீசாரிடம் புகார் கொடுத்திருக்கிறார். அதன்பேரில் அழகேசன் மதுரவாயல் போலீசாரால் கைது செய்யப்பட்டிருக்கிறார். இதனிடையே அழகேசனின் தொல்லையிலிருந்து தப்பிக்க ஜாபர்கான்பேட்டையில் உள்ள தனது உறவினர் வீட்டில் இருந்து கல்லூரிக்கு சென்று வந்திருக்கிறார் அஷ்வினி. இந்நிலையில் சிறையிலிருந்து வெளியே வந்த அழகேசன் ஆத்திரத்தில் அஷ்வினியை படுகொலை செய்திருக்கிறார். காதல் தொல்லையிலிருந்து தப்பிக்க நினைத்த மாணவி இளைஞரால் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இதனிடையே, கல்லூரி மாணவி அஸ்வினி குத்திக்கொலை செய்யப்பட்டது தொடர்பாக எழும்பூர் வட்டாட்சியர் விசாரணை நடத்தி அறிக்கை தந்த பின் அரசிடம் சமர்பிக்கப்படும் என சென்னை ஆட்சியர் அன்புச்செல்வன் புதிய தலைமுறைக்கு பேட்டியளித்துள்ளார். மாணவி கொலை தொடர்பாக கே.கே.நகர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொலைக்கு பயன்படுத்திய ஆயுதத்தை கைப்பற்றிய போலீசார், அழகேசனிடம் வாக்குமூலம் பெறும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.