Workout
Workout File Image
சிறப்புக் களம்

நீண்ட இடைவேளைக்கு பின் மீண்டும் உடற்பயிற்சி செய்யப் போகிறீர்களா? - கவனிக்க வேண்டிய விஷயங்கள்!

Justindurai S

நீண்ட இடைவேளைக்குப் பிறகு மறுபடியும் உடற்பயிற்சி செய்யப் போகிறீர்களா? அப்படியென்றால், முக்கியமான சில விஷயங்களை அவசியம் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். இதுதொடர்பாக ஜிம் பயிற்றுநர்களிடம் கேட்டுப் பெற்ற தகவல்களை இங்கே கொடுத்துள்ளோம்..

மறுபடியும் நீங்கள் உடற்பயிற்சியை செய்யத் தொடங்கும்போது, முன்பிருந்த அதே உடல்நிலைதான் இப்போதும் இருக்க வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை. பிரசவம், நோய் தாக்குதல், காயம், வேலையில் ஏற்படும் மன அழுத்தம் போன்ற காரணங்களால்தான், பலரும் உடற்பயிற்சி மேற்கொள்வதை பாதியிலேயே விட்டுவிடுகிறார்கள். இதுபோன்ற காரணங்கள் உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு பல வழிகளிலும் தீங்கு விளைவிக்கும். காயம் காரணமாக நீங்கள் உடற்பயிற்சியை நிறுத்தியிருந்தால், மறுபடியும் செய்யும்போது உங்களுக்கு சில கட்டுப்பாடுகள் இருக்கும். உதாரணமாக, சில குறிப்பிட்ட பயிற்சிகளை செய்ய முடியாது அல்லது வழக்கமாக செய்யும் பயிற்சியை வேறு விதமாக இப்போது செய்வீர்கள்.

workout

உடற்பயிற்சியை பாதியில் நிறுத்தியதற்கு நோய்தான் காரணம் என்றால், ஒன்று, உங்களுக்கான உடற்பயிற்சியை தேர்ந்தெடுக்கும் வழியை நீங்கள் மாற்றிக்கொள்ள வேண்டும் அல்லது ஏற்கெனவே தேர்ந்தெடுத்துள்ள உடற்பயிற்சியின் முறையை மாற்ற வேண்டும்.

உதாரணமாக, சுவாசப் பிரச்னை தொடர்பான நோய் உள்ளவருக்கு இருக்கும் அதே உடற்பயிற்சி முறை, இதய நோயுள்ளவருக்கு இருக்காது. நீங்கள் மருந்து, மாத்திரைகள் எடுத்துக் கொள்பவராக இருந்தால், அதற்கேற்ற மாற்றங்களை நீங்கள் செய்துகொள்ள வேண்டும். குறிப்பிட்ட மருந்தை எடுத்துக்கொள்ளும் நேரத்திற்கும் உடற்பயிற்சி செய்யும் நேரத்திற்கும் இடையே நெருங்கிய தொடர்புள்ளது. சுருக்கமாக கூறினால், நீண்ட இடைவேளைக்குப் பிறகு நீங்கள் உடற்பயிற்சியை மேற்கொள்வதற்கு முன்பு, முதல் வேளையாக உங்கள் மருத்துவரை நேரில் சந்தித்து, தேவையான அனைத்து பரிசோதனைகளையும் செய்து, உங்கள் சந்தேகங்கள் அனைத்தையும் சரி செய்து கொண்டு வாருங்கள்.

உடற்பயிற்சி என்பது உங்களுக்கு மகிழ்ச்சியும் ஆர்வமும் தரக்கூடியதாக இருக்க வேண்டும். அதற்கு தொழில்முறை ஃபிட்னஸ் பயிற்சியாளர் உங்களுக்கு உதவுவார். முறையாகவும் சீராகவும் உடற்பயிற்சி செய்யும்போது, அது உங்களை உடலளவிலும் மனதளவிலும் பலப்படுத்தும். உங்கள் உடலை அசைக்கும்போது, புது சக்தியைப் பெற்றதுபோல் உணர்வீர்கள். இது உங்கள் உடலில் உள்ள எண்டோர்பினை வெளிப்படுத்தி உங்களை மகிழ்விக்கும். சீராக உடற்பயிற்சி செய்வதால் உங்களுக்கு கிடைக்கும் பலன் என்ன தெரியுமா? உங்கள் சுய மரியாதையை மீட்டுக் கொள்ளலாம், அறிவுத்திறன் அதிகமாகும், நிம்மதியான தூக்கம் கிடைக்கும். அவ்வப்போது உடற்பயிற்சியில் உங்களுக்கென சிறு, சிறு இலக்கை நிர்ணயித்துக் கொள்ளுங்கள். ஒவ்வொன்றாக அதை வெற்றிகரமாக முடிக்கும்போது உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்.

workout

அடுத்ததாக, உங்களின் தற்போதைய நேரம் மற்றும் சூழ்நிலைகளுக்கு இடமளிக்கும் வகையில் உடற்பயிற்சி இலக்குகளை மாற்றிக்கொள்ள வேண்டும். சூழ்நிலைகள், வேலை நேரம், தொடர்புகொள்ளும் வழி, உடற்பயிற்சிக்கு தேவைப்படும் வசதிகள் போன்ற பல விஷயங்கள் இடைப்பட்ட காலத்தில் மாறியிருக்கும். ஆகையால் உடற்பயிற்சிக்கு நீங்கள் செலவழிக்க வேண்டிய நேரமும் மாறும். உங்களுக்கு இப்போதுதான் குழந்தை பிறந்துள்ளது என்றால், உங்கள் கவனம் முழுதும் உங்கள் குழந்தை மீதுதான் இருக்கும். எனவே, குழந்தை தூங்கும் நேரம் பார்த்து உங்கள் உடற்பயிற்சி நேரத்தை மாற்றிக் கொள்ளுங்கள்.

நீங்கள் புதிய ஊருக்கு மாற்றலாகி, அங்கு அருகில் ஜிம் இல்லையென்றால், அதற்குச் செல்ல வேண்டிய தூரத்தையும் நீங்கள் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். இதுபோன்று எல்லா சூழ்நிலைகளையும் கவனத்தில் எடுத்துக் கொண்டு உங்கள் இலக்கை நிர்ணயிக்க வேண்டும். இதற்கென தெளிவான ஒரு அட்டவணையை நீங்கள் போட்டுக்கொள்ள வேண்டும். நாம் நிர்ணயித்துள்ள இலக்கை நோக்கி முன்னகர்ந்து செல்கிறோமா அல்லது பின்னோக்கி செல்கிறோமா என்பதை துல்லியமாக பதிவு செய்ய வேண்டும். நம்முடைய இலக்கில் நாம் எவ்வுளவு தூரம் முன்னேற்றம் கண்டிருக்கிறோம் என்பதை குறிப்பிட்ட கால இடைவெளியில் அளவிட்டு பார்க்க வேண்டும். ஆரம்பத்தில் சில தடைகள் ஏற்பட்டாலும், நீண்ட கால நோக்கில் பார்த்தோமென்றால் இது நிலையானதாக இருக்கும்.

80, 90 என எந்த வயதிலும் நீங்கள் உடற்பயிற்சி செய்யலாம். நீண்ட இடைவேளைக்குப் பிறகு உடற்பயிற்சி செய்யப் போகிறீர்கள் என்றால், உங்களின் தற்போதைய வயது மற்றும் மாற்றமடைந்துள்ள உங்களின் ஃபிட்னஸையும் கொஞ்சம் கவனத்தில் எடுத்துக் கொள்ளுங்கள்.

workout

நீண்ட காலமாக உடற்பயிற்சி செய்யாமல் இருக்கும்போது, இதயம் மற்றும் நுரையீரலின் திறன் குறைந்திருக்கும், உடல் எடை அதிகரித்தோ அல்லது மெலிந்தோ காணப்படும். மேலும் உடல் சமநிலை குறைந்திருக்கும். இதையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் மீண்டும் பழைய உடற்பயிற்சியை செய்தால், உங்களுக்கு மோசமான காயங்கள் ஏற்படக்கூடும். முதலில் எளிமையான பயிற்சியை செய்யத் தொடங்குங்கள். உங்கள் உடல் இதை எப்படி ஏற்றுக்கொள்கிறது என்பதை பொறுத்து, கொஞ்சம் கொஞ்சமாக தீவிர உடற்பயிற்சியை மேற்கொள்ளுங்கள்.

மேலே கூறிய எல்லா விஷயங்களுக்கும் நீங்கள் கவனம் கொடுத்தாலும், உடற்பயிற்சியின் முழுமையான பலன் உங்களுக்கு கிடைக்க வேண்டுமென்றால் நல்ல உணவு பழக்கம் வேண்டும், நிறைய நீர் அருந்த வேண்டும், நன்றாக தூங்க வேண்டும். நீங்கள் எவ்வளவு கடுமையாக, அனுபவித்து உடற்பயிற்சி செய்தாலும், சாப்பிடும் உணவிற்கு கவனம் கொடுக்காவிட்டால், உடற்பயிற்சியால் கிடைக்கக்கூடிய எந்த பலனும் உங்கள் உடலில் தெரியாது. இப்படியே நீங்கள் தொடர்ந்து செய்து கொண்டிருந்தால், உடற்பயிற்சி செய்யும் ஆர்வம் எல்லாம் குறைந்து போகும். நீண்ட இடைவேளைக்குப் பிறகு மீண்டும் உடற்பயிற்சி செய்யத் தொடங்குவதற்கு முன், தற்போதைய வயது, உடல்நிலை, நோய், காயம், உட்கொள்ளும் மருந்துகள், உடற்பயிற்சி செய்வதற்கான நோக்கம் மற்றும் செலவழிக்கும் நேரம் போன்ற முக்கியமான விஷயங்களுக்கு கவனம் கொடுப்பதைப் போல் உணவுப் பழக்கத்தையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.

workout

உடலுக்கு தேவைப்படும் புரதம், நார்ச்சத்து மற்றும் பிற ஊட்டச்சத்துகள் ஆகியவை முழுமையாக கிடைக்க வேண்டும். இதையெல்லாம் ஒரே நாளில் நிறைவேற்றிட முடியாது. ஃபிட்னஸ் மற்றும் ஊட்டச்சத்து நிபுணரின் கண்காணிப்பில் தான் இதையெல்லாம் செய்ய வேண்டும். மேலும் இதை உள்வாங்கிக் கொள்ள உடலுக்கு தேவைப்படும் நேரத்தை நாம் கொடுத்தே ஆக வேண்டும்.

இப்போது இந்த விஷயத்தில் உங்களுக்கு ஒரு தெளிவு கிடைத்திருக்கும். உடற்பயிற்சி செய்வதிலிருந்து நீண்ட இடைவேளை எடுத்துக் கொண்டதை நினைத்து கவலைப்படாதீர்கள். உங்கள் ஃபிட்னஸிற்கான அடுத்த அடியை தைரியமாக எடுத்து வையுங்கள்.