பெட்ரோல், டீசல் விலை உயரும்போது பணப்பை பதறும். டீசல் புகை சூழும்போது நுரையீரல் பதறும். மின்சார வாகனம் வாங்க நினைத்தால், “சார்ஜ் எங்கே போடுவது? எவ்வளவு நேரமாகும்?” என்ற கேள்வி எழுகிறது. இவற்றுக்கு நடுவே, பொருத்தமான நிலையத்தில் ஒப்பீட்டளவில் குறுகிய நேரத்தில் எரிபொருள் நிரப்பிக்கொண்டு, சில பயன்பாடுகளில் நீண்ட தூரம் இயங்கக்கூடிய வாகனம் ஒன்று நம்மை நோக்கி வருகிறது. அதன் பெயர் — ஹைட்ரஜன் ஃபியூயல் செல் வாகனம்! பயன்பாட்டின்போது அதன் டெயில் பைப்பில் தீங்கு விளைவிக்கும் மாசுகளுக்குப் பதிலாக நீராவியும் வெப்பக் காற்றுமே வெளியேறுகின்றன. கேட்கவே எதிர்கால சினிமா போல இருக்கிறது. ஆனால் உண்மையான கேள்வி வேறு: ஹைட்ரஜன் உண்மையிலேயே பசுமையான எரிபொருளா? அல்லது ‘பசுமை’ என்ற பெயரில் நமக்கு அறிமுகமாகும் இன்னொரு விலையுயர்ந்த தொழில்நுட்பமா?
கடுங்குளிரும் மலைப்பாதைகளும் நிறைந்த லடாக்கின் லே பகுதியில், ஹைட்ரஜன் ஃபியூயல் செல் தொகுப்பு பேருந்துகளின் முன்னோடி சோதனை கவனம் ஈர்த்தது. வழக்கமான டீசல் உறுமலுக்குப் பதிலாக மின்மோட்டாரின் அமைதியான ஓசை; கரும்புகைக்குப் பதிலாக நீராவி! அது ஒரு பேருந்துச் சோதனை மட்டுமல்ல; கடினமான மலைப்பாதையில் எதிர்காலத் தொழில்நுட்பத்தின் திறனைச் சோதிக்கும் முயற்சி! ஆனால் குளிரில் பேருந்துக்காகக் காத்திருக்கும் பயணிக்கு, அது எந்த எரிபொருளில் ஓடுகிறது என்பது முதல் கேள்வியல்ல. நேரத்தில் வருமா, பாதுகாப்பாகச் சேர்க்குமா, பயணம் நம்பகமாக இருக்குமா—அதுவே அவருக்கான உண்மையான தொழில்நுட்பத் தேர்வு!
பிரபஞ்சத்தில் மிக அதிகமாகக் காணப்படும் தனிமம் ஹைட்ரஜன். ஆனால் பூமியில் அது தனியாக எளிதில் கிடைப்பதில்லை; நீர், இயற்கை எரிவாயு போன்ற சேர்மங்களுடன் பிணைந்தே இருக்கிறது. எனவே பெட்ரோல் போல நிலத்திலிருந்து நேரடியாக எடுத்துப் பயன்படுத்தக்கூடிய முதன்மை எரிசக்தி அல்ல. மின்சாரத்தைப் போலவே, வேறொரு மூலத்திலிருந்து உருவான ஆற்றலைச் சேமித்து, தேவையான இடத்துக்கு எடுத்துச் செல்லும் ஓர் ‘ஆற்றல் கடத்தி’. “எளிமையாகச் சொன்னால்—ஹைட்ரஜன் ஆற்றலை உருவாக்கும் ஊற்று அல்ல; ஆற்றலைச் சுமந்து செல்லும் வண்டி!”
ஹைட்ரஜனுக்கு உண்மையில் எந்த நிறமும் இல்லை. அது தயாரிக்கப்படும் முறைகளை வேறுபடுத்திக் காட்டவே ‘பச்சை, சாம்பல், நீலம்’ போன்ற பெயர்கள் பயன்படுத்தப்படுகின்றன. புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தால் நீரிலிருந்து தயாரிக்கப்படுவது பசுமை ஹைட்ரஜன். இயற்கை எரிவாயுவிலிருந்து கார்பன் வெளியேற்றத்துடன் தயாரிக்கப்படுவது சாம்பல் ஹைட்ரஜன். அந்த உற்பத்தியின்போது வெளியாகும் கார்பனில் ஒரு பகுதியைப் பிடித்துச் சேமிக்கும் முறையுடன் உருவாக்கப்படுவது நீல ஹைட்ரஜன். ஆக, நிறம் ஹைட்ரஜனில் இல்லை… அது பிறக்கும் முறையில்தான் இருக்கிறது!
மின்பகுப்பான் (Electrolyser) எனப்படும் கருவிக்குள் நீரும் மின்சாரமும் செலுத்தப்படும்போது, தண்ணீர் ஹைட்ரஜன் மற்றும் ஆக்சிஜனாகப் பிரிக்கப்படுகிறது. கிடைக்கும் ஹைட்ரஜன் சுத்திகரிக்கப்பட்டு, சுருக்கப்பட்டு, டேங்குகளில் சேமிக்கப்படுகிறது. ஆனால் இங்கு ஒரு முக்கியமான நிபந்தனை உண்டு: பயன்படுத்தப்படும் மின்சாரம் நிலக்கரியிலிருந்து வந்தால் அது பசுமையல்ல. சூரிய, காற்றாலை போன்ற புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலங்களிலிருந்து வந்தால்தான் அது ‘பசுமை ஹைட்ரஜன்’. “தண்ணீர் மட்டும் பசுமையைத் தீர்மானிப்பதில்லை… அதை பிரிக்கும் மின்சாரம்தான் தீர்மானிக்கிறது!”
சாலை வாகனங்களில் ஹைட்ரஜனைப் பயன்படுத்தும் இரண்டு முக்கிய அணுகுமுறைகள் உள்ளன. ஒன்று, ஹைட்ரஜன் எரிபொருள்-செல் மின்சார வாகனம் (FCEV). மற்றொன்று, ஹைட்ரஜனை நேரடியாக எரிக்கும் உள்எரிப்பு எஞ்சின் வாகனம் (H₂–ICE). இரண்டையும் ஒன்றாகக் குழப்பக்கூடாது.
FCEV-யில், டேங்குகளில் சேமிக்கப்பட்ட ஹைட்ரஜன் ஃபியூயல் செல் தொகுப்பிற்குச் (Fuel Cell Stack) செல்கிறது. அங்கு காற்றிலுள்ள ஆக்சிஜனுடன் மின்வேதியியல் வினையில் ஈடுபட்டு மின்சாரத்தை உருவாக்குகிறது. அந்த மின்சாரம் மோட்டாரை இயக்குகிறது. உடன் செயல்படும் பேட்டரி, வேகமெடுக்கும்போது கூடுதல் சக்தி வழங்குவதுடன், பிரேக்கின்போது மீட்கப்படும் ஆற்றலையும் சேமிக்கிறது. பயன்பாட்டு இடத்தில் நீராவியும் வெப்பமும் வெளியேறுகின்றன; தீங்கு விளைவிக்கும் டெயில் பைப் மாசுகள் இல்லை.
H₂–ICE வாகனத்தில், மாற்றியமைக்கப்பட்ட எஞ்சினுக்குள் ஹைட்ரஜன் நேரடியாக எரிக்கப்படுகிறது. இது தற்போதுள்ள எஞ்சின் தொழில்நுட்ப மற்றும் உற்பத்தி அனுபவத்தைப் பயன்படுத்தும் வாய்ப்பை வழங்குகிறது. ஆனால் அதிக வெப்ப எரிப்பின்போது நைட்ரஜன் ஆக்சைடுகள் உருவாகக்கூடும். ஆகவே, “ஹைட்ரஜன் வாகனம் என்றாலே எந்த வெளியேற்றமும் இல்லை” என்று பொதுவாகக் கூறுவது தொழில்நுட்ப ரீதியாகத் தவறு.”
ஹைட்ரஜன் எடையில் அதிக ஆற்றலைக் கொண்டிருந்தாலும், குறைந்த இடத்தில் அடக்கிச் சேமிப்பது சவாலானது. அதனால் வாகனங்களில் பல அடுக்குப் பாதுகாப்புடன் தயாரிக்கப்பட்ட உயர் அழுத்த டேங்குகளில் அது சேமிக்கப்படுகிறது. பாதுகாப்பான ஃபில்லிங் கனெக்க்ஷன் பூட்டப்பட்டு, அழுத்தமும் கசிவும் கண்காணிக்கப்பட்ட பிறகே ஹைட்ரஜன் வாகனத்துக்குள் செலுத்தப்படுகிறது.
இந்தியாவில் ஹைட்ரஜன் ஃபில்லிங் நிலையங்கள் இன்னும் மிக அரிதாக இருப்பதால், ஆரம்பத்தில் பேருந்து மற்றும் லாரி பணிமனை வளாகங்களில் மையப்படுத்தப்பட்ட ஹைட்ரஜன் ஃபில்லிங் வசதி நடைமுறைக்கு ஏற்றதாக இருக்கலாம். “வாகனம் வந்தால் மட்டும் பயணம் தொடங்காது; எரிபொருள் பாதையும் தயாராக இருக்க வேண்டும்!”
மின்சார வாகன பேட்டரியில் மின்சாரத்தை சேமித்து மோட்டாரை இயக்குவதால், அதன் ஒட்டுமொத்த ஆற்றல் பயன்பாட்டுத் திறன் பொதுவாக அதிகம். பல பெருநகரங்களில் உள்ள நகரக் கார்கள், இருசக்கர வாகனங்கள் மற்றும் திட்டமிட்ட நகரப் பேருந்து வழித்தடங்களில் அது நடைமுறைக்கு ஏற்ற தீர்வாக இருக்கலாம். ஹைட்ரஜனின் பலம் வேறிடத்தில் தெரிகிறது — அதிகத் தினசரி ஓட்டம், நீண்ட தூரம், அதிக லோடு மற்றும் குறைந்த ஃபில்லிங் நேரம் தேவைப்படும் சில பேருந்துகள், லாரிகள், சிறப்பு வணிக வாகனங்களில். சார்ஜ் செய்வதற்கான நீண்ட நேரத்தை ஏற்க முடியாத அதிகப் பயன்பாட்டு இயக்கங்களுக்கு அது ஒரு மாற்றாக இருக்கலாம். அதே நேரத்தில், உலகளவில் ஹைட்ரஜன் மொபிலிட்டி இன்னும் தொடக்கநிலையில்தான் உள்ளது. சர்வதேச எரிசக்தி முகமையின் (International Energy Agency) 2025 மதிப்பீட்டிலும், பியூயல்-செல் வாகனங்களில் கனரக லாரிகளே வேகமாக வளரும் பிரிவாகச் சுட்டிக்காட்டப்படுகின்றன. பேட்டரி பல பயணங்களுக்குத் திறமையான தீர்வு; ஹைட்ரஜன் சில கடினமான இயக்கங்களுக்கு மாற்றுப் பாதை!
பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கான எரிபொருள் நிரப்பும் நிலையங்கள் பரவலாக உள்ளது; ஆனால் கார்பன் வெளியேற்றமும் காற்று மாசும் அவற்றின் பெரும் சுமை. மின்சார வாகன பேட்டரியானது ஆற்றல் திறனில் முன்னிலை வகிக்கிறது. ஹைட்ரஜன் சில நீண்ட தூர மற்றும் அதிகப் பயன்பாட்டு இயக்கங்களில் வாய்ப்பளிக்கிறது; ஆனால் எரிபொருள், வாகனம், ஃபில்லிங் நிலையம்—மூன்றின் செலவும் தற்போது அதிகம். எனவே வாங்கும் விலையை மட்டும் பார்த்து முடிவு செய்ய முடியாது. வழித்தடத் தூரம், தினசரி இயக்கம், லோடு, சார்ஜிங் அல்லது ரீஃபில்லிங் வசதி, நிறுத்த நேரம், ஒரு கிலோமீட்டருக்கான செலவு, முழு வாழ்க்கைச் சுழற்சி வெளியேற்றம்—இவை அனைத்தையும் சேர்த்தே தொழில்நுட்பத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும். “யார் சிறந்தவர் என்பதல்ல; எந்தப் பயணத்திற்கு யார் பொருத்தம் என்பதே முக்கியம்! “
டெயில் பைப்பை (Tail Pipe) மட்டும் பார்த்தால் FCEV சுத்தமானது; அதன் எரிபொருள் பிறந்த இடத்தையும் பார்த்தால்தான் முழு உண்மை தெரியும். கார்பன் கட்டுப்பாடின்றி நிலக்கரி அல்லது இயற்கை எரிவாயுவிலிருந்து ஹைட்ரஜன் தயாரிக்கப்பட்டால் கணிசமான வெளியேற்றம் ஏற்படலாம். புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தால் தயாரிக்கப்படும் பசுமை ஹைட்ரஜனில்தான் அதன் பருவநிலைப் பலன் வலுவாகிறது. அதாவது, “வாகனம் என்ன வெளியிடுகிறது?” என்பது பாதிக் கேள்வி. “அதன் எரிபொருள் எப்படித் தயாரிக்கப்பட்டது?” என்பதே மீதிப் பாதி. “ஒரு எரிபொருளின் பசுமை, வாகனத்தின் டெயில் பைப்பில் தொடங்குவதில்லை; அது தயாரிக்கப்படும் மின்நிலையத்திலேயே தொடங்குகிறது!”
ஹைட்ரஜன் வாகனத்தின் விலை மட்டுமே முழுக் கணக்கல்ல. பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி, சுத்திகரிப்பு, சுருக்குதல், போக்குவரத்து, ஃபில்லிங் நிலையம் ஆகிய ஒவ்வொரு கட்டத்திற்கும் செலவு உண்டு. அதோடு ஃபியூயல் செல் தொகுப்பு (Fuel Cell Stack), உயர் அழுத்த டேங்க் மற்றும் பாதுகாப்பு அமைப்புகளின் பராமரிப்பையும் கணக்கிட வேண்டும். எனவே, வாங்கும் விலையை மட்டும் பார்க்காமல், வாகனத்தின் முழு ஆயுளிலும் ஒரு கிலோமீட்டரை இயக்க எவ்வளவு செலவாகிறது என்பதையே கணக்கிட வேண்டும். “புகை மறையலாம்… செலவு கணக்கில் மறையக் கூடாது!”
ஹைட்ரஜன் மிகவும் இலகுவானது. திறந்த அல்லது நன்கு காற்றோட்டமுள்ள இடத்தில் கசிந்தால் மேல்நோக்கி வேகமாகப் பரவும்; மூடப்பட்ட இடத்தில் மேல்பகுதியில் தேங்கும் அபாயம் இருக்கலாம். அது எளிதில் தீப்பற்றக்கூடியது; குறிப்பாக பகல்வெளியில் அதன் தீக்கதிர்கள் கண்களுக்கு எளிதில் தெரியாமல் இருக்கலாம். வாகனங்களில் பயன்படுத்தப்படும் உயர் அழுத்த டேங்குகள் பல அடுக்குப் பாதுகாப்புடன் வடிவமைக்கப்பட வேண்டும். அதோடு அழுத்த நிவாரணச் சாதனம் (Pressure Relief Device), கசிவு சென்சார் (Leak sensor ), தானியங்கி எரிபொருள் துண்டிப்பு (Automatic Fuel Supply Cut ), காற்றோட்டம் மற்றும் மோதல் பாதுகாப்பும் அவசியம். “ஹைட்ரஜன் ஆபத்தானதா?” என்பது மட்டும் சரியான கேள்வியல்ல. “அது சரியான தரநிலைகளுடன் தயாரிக்கப்பட்டு, சேமிக்கப்பட்டு, நிரப்பப்பட்டு, பராமரிக்கப்படுகிறதா?” என்பதே முக்கியம். ஹைட்ரஜன் ஃபியூயல் செல் வாகனங்களுக்கான UN GTR No.13 போன்ற சர்வதேசத் தொழில்நுட்பப் பாதுகாப்பு விதிமுறைகளும் உள்ளன. “புதிய எரிபொருளுடன் பழைய அலட்சியம் சேர்ந்தால், தொழில்நுட்பம் மட்டும் பாதுகாப்பைக் காப்பாற்றாது!”
ஹைட்ரஜன் எல்லா வாகனங்களுக்குமான பொதுத் தீர்வல்ல. நீண்ட தூரம், அதிக லோடு மற்றும் அதிகத் தினசரி பயன்பாடு கொண்ட சில பேருந்துகள், கனரக லாரிகள், சுரங்க மற்றும் சிறப்பு வாகனங்களில் அதன் வாய்ப்பு கவனிக்கப்படுகிறது. மின்மயமாக்கப்படாத சில ரயில் வழித்தடங்களில் ஹைட்ரஜன் ஃபியூயல் செல் ரயில்களும் பயன்படலாம். பல கப்பல் பயன்பாடுகளில், நேரடி ஹைட்ரஜனுடன் பசுமை அமோனியா, பசுமை மெத்தனால் போன்ற ஹைட்ரஜன் அடிப்படையிலான எரிபொருட்களும் முக்கியத்துவம் பெறுகின்றன. விமானத் துறையில் பசுமை ஹைட்ரஜனிலிருந்து தயாரிக்கப்படும் செயற்கை எரிபொருள்கள் எதிர்கால வாய்ப்பாக உள்ளன. “ஹைட்ரஜன் எல்லா சக்கரங்களுக்கும் பொருத்தமல்ல… சரியான லோடு, தூரம், இயக்கத் தேவைக்கான சக்தி!”
இந்தியாவின் தேசிய பசுமை ஹைட்ரஜன் இயக்கம், தொழில் துறையுடன் போக்குவரத்திலும் முன்னோடித் திட்டங்களை முன்னெடுக்கிறது. 2026 ஜூலை நிலவரப்படி, 21 வழித்தடங்களில் 27 பேருந்துகள் மற்றும் 43 லாரிகள் உட்பட மொத்தம் 70 ஹைட்ரஜன் வாகனங்களைக் களமிறக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. அவற்றுடன் 16 ஹைட்ரஜன் பியூயல் நிலையங்களை அமைப்பதற்கான 12 முன்னோடித் திட்டங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் FCEV மற்றும் H₂–ICE ஆகிய இரு தொழில்நுட்பங்களும் களச் சோதனைக்கு உட்படுத்தப்பட உள்ளன. ஆதாரம்: இந்திய அரசு – PIB அறிவிப்பு
இது நல்ல தொடக்கம். ஆனால் பெரிய அளவிலான கொள்முதல் மற்றும் நாடு தழுவிய விரிவாக்கத்திற்கு முன், ஒரு கிலோமீட்டருக்கான செலவு, எரிபொருள் கிடைப்புத் திறன், பசுமை ஹைட்ரஜன் வழங்கல், டேங்கின் ஆயுள் மற்றும் பராமரிப்புத் திறன் ஆகியவை களத்தில் மதிப்பிடப்பட வேண்டும். பணிமனைப் பாதுகாப்பு, ஓட்டுநர் பயிற்சி மற்றும் அவசரகாலப் பணியாளர்களின் தயார்நிலையும் அதே அளவு முக்கியம். பொதுப் முதலீடு, ‘புதிய தொழில்நுட்பம்’ என்ற கவர்ச்சியை மட்டும் பின்தொடரக் கூடாது; உண்மையான இயக்கத் தரவுகளின் அடிப்படையில் அடுத்தகட்ட முடிவு எடுக்கப்பட வேண்டும். எண்கள் நல்ல தொடக்கம்; சாலையில் கிடைக்கும் இயக்கத் தரவுகள்தான் இறுதித் தீர்ப்பு!
• மின்சார வாகன பேட்டரியைப் போலவே ஃபியூயல் செல்லும் மின்சாரம் தயாரிக்கிறது. ஆனால் ஹைட்ரஜனும் காற்றிலுள்ள ஆக்சிஜனும் தொடர்ந்து கிடைக்கும் வரை ஃபியூயல் செல் தொகுப்பு இயங்கிக்கொண்டே இருக்கும்; தனியாக ரீசார்ஜ் செய்ய வேண்டியதில்லை.
ஆதாரம்: U.S. Department of Energy – Fuel Cells
• 2025-லும் குறைந்த வெளியேற்ற ஹைட்ரஜன், உலகின் மொத்த ஹைட்ரஜன் உற்பத்தியில் ஒரு சதவீதத்தைக்கூட எட்டவில்லை. ‘பசுமை ஹைட்ரஜன்’ பற்றிய எதிர்பார்ப்பு பெரியது; நடைமுறை உற்பத்தி இன்னும் மிகச் சிறியது. ஆதாரம்: IEA – Global Hydrogen Review 2025
• இந்தியாவின் ஹைட்ரஜன் போக்குவரத்து முன்னோடி திட்டங்களில் வாகனங்களை இயக்குவது மட்டும் நோக்கமல்ல. செயல்திறன், எரிபொருள் பயன்பாடு, பாதுகாப்பு மற்றும் பயன்பாடு குறித்த தகவல்களை தொடர்ந்து அறிக்கையிடவும் திட்ட அமைப்புகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆதாரம்: இந்திய அரசு – PIB அறிவிப்பு
“ஒரு ஹைட்ரஜன் முன்னோடித் திட்டத்தின் வெற்றியை வாகன எண்ணிக்கை தீர்மானிக்காது. ஒரு கிலோமீட்டருக்கான செலவு, வாகனத்தின் இயக்க நேரம், பாதுகாப்புப் பதிவு, எரிபொருளின் உண்மையான கார்பன் தடம்—இந்த நான்கு தரவுகள்தான் இறுதித் தீர்ப்பை எழுத வேண்டும்!”
• ஹைட்ரஜனின் பலம் விரைவான நிரப்புதலில்; அதன் சவால் முழுமையான விநியோகக் கட்டமைப்பில்!
• வாகன எண்ணிக்கையைவிட, ஒரு கிலோமீட்டருக்கான உண்மையான செலவும் கார்பன் தடமுமே முக்கியம்!
• புதிய தொழில்நுட்பத்தை வாங்குவது எளிது; பாதுகாப்பாகவும் நம்பகமாகவும் இயக்குவதுதான் உண்மையான சோதனை!
• வகையை அறியுங்கள்: அது ஃபியூயல் செல் வாகனமா அல்லது H₂–ICE வாகனமா என்பதை முதலில் பாருங்கள்.
• நிறத்தை அல்ல, மூலத்தைப் பாருங்கள்: பயன்படுத்தப்படும் ஹைட்ரஜன் உண்மையில் பசுமையான முறையில் தயாரிக்கப்பட்டதா என்பதைச் சரிபாருங்கள்.
• புகைக்குழாயுடன் கணக்கை முடிக்காதீர்கள்: உற்பத்தி முதல் பயன்பாடு வரையிலான மொத்த வெளியேற்றத்தையும் கவனியுங்கள்.
• பாதுகாப்பில் சமரசம் வேண்டாம்: அங்கீகரிக்கப்பட்ட ஹைட்ரஜன் ஃபில்லிங் நிலையம், பரிசோதிக்கப்பட்ட டேங்க் மற்றும் பயிற்சி பெற்ற பணியாளர்கள் அவசியம்.
• விளம்பரத்தை அல்ல, தரவை நம்புங்கள்: செலவு, செயல்திறன், நம்பகத்தன்மை மற்றும் பாதுகாப்பு ஆதாரங்களை ஒப்பிட்டே முடிவெடுங்கள்.
ஹைட்ரஜன் நாளையே பெட்ரோல், டீசலை மாற்றிவிடும் மந்திர எரிபொருள் அல்ல; அதே நேரத்தில், அதை வெறும் கனவு என்றும் புறக்கணிக்க முடியாது. பசுமையாகத் தயாரிக்கப்பட்டு, பாதுகாப்பாகச் சேமிக்கப்பட்டு, பொருத்தமான இயக்கங்களில் பயன்படுத்தப்பட்டால்—சில பேருந்துகள், கனரக லாரிகள் மற்றும் அதிகப் பயன்பாட்டு வாகனங்களுக்கு அது புதிய பாதையைத் திறக்கலாம். ஆனால் பயணியின் கணக்கில் எரிபொருளின் நிறம் முக்கியமல்ல. கட்டணம் குறையுமா, பயணம் பாதுகாப்பாகுமா, நகரின் காற்று சுத்தமாகுமா—இந்த மூன்று கேள்விகளுக்கும் பதில் தரும் நாளில்தான் ஹைட்ரஜன், எதிர்காலக் கனவிலிருந்து நமது சாலையின் நிஜமாக மாறும்!
ஹைட்ரஜன் வாகனத்தின் வெற்றி டேங்கில் இல்லை… அதன் முழு இயக்க அமைப்பில்தான்!
“மக்கள், பாதுகாப்பு, பொருளாதாரம், சுற்றுச்சூழல் — நான்கிலும் நன்மை தந்தால்தான் ஹைட்ரஜன் உண்மையான முன்னேற்றம். அதை வரவேற்போம்; கேள்விகளின்றி அல்ல… ஆதாரங்களுடன்!”
— முனைவர் . வளவன் . அமுதன்
பொதுப் போக்குவரத்து | ஆட்டோமொபைல் | மொபிலிட்டி | மின்சார வாகனங்கள் | சாலைப் பாதுகாப்பு நிபுணர்
உயிரி எரிபொருள்கள் (Biofuels) — இந்தியாவின் புதிய ஆற்றல் பாதை!
கரும்பிலிருந்து எத்தனால்… கால்நடைக் கழிவிலிருந்து பயோகேஸ்… பயன்படுத்திய சமையல் எண்ணெயிலிருந்து பயோடீசல்! வேளாண் எச்சங்களும் மக்கும் நகரக் கழிவுகளும் வாகனங்களுக்கான எரிபொருளாக மாற முடியுமா? கச்சா எண்ணெய் இறக்குமதிச் சார்பைக் குறைத்து, விவசாயிகளுக்குப் புதிய வருமானத்தை உருவாக்க முடியுமா? இவை சுற்றுச்சூழலுக்கு உண்மையிலேயே நல்லதா? கழிவிலும் ‘எரிபொருள்’ இருக்கிறது--அடுத்த வாரம் அதன் ஆற்றல் ரகசியங்களைத் திறப்போம்..
(சக்கரங்கள் சுழலும்..)