Model Image ai
சிறப்புக் களம்

சக்கரங்கள் சொல்லும் கதை – 5 | மின்சார வாகனங்கள் — மாற்றமா.. புரட்சியா?

வெப்பம் அல்லது மின்னழுத்தம் பாதுகாப்பு வரம்பை மீறினால், சார்ஜிங் வேகத்தையோ மின் விநியோகத்தையோ கட்டுப்படுத்தும். அதனால்தான் EV என்பது வெறும் ‘மின்சார கார்’ அல்ல; சக்கரங்களில் பயணிக்கும் ஒரு கணினி!

Prakash J

இரவில் சார்ஜ்... காலையில் பயணம்!

இரவு 10 மணி. நகரம் மெதுவாக உறங்கத் தொடங்குகிறது. ஆனால் ஒரு வீட்டின் வாகன நிறுத்துமிடத்தில் நாளைய பயணத்திற்கான வேலை அமைதியாக நடக்கிறது. சுவரிலிருந்து நீளும் மின்கம்பி, இருசக்கர வாகனத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் நிலையம் செல்லவில்லை; எரிபொருள் நிரப்பவில்லை. இருந்தாலும் மறுநாள் காலை அந்த வாகனம் மீண்டும் பயணத்துக்குத் தயாராகிவிடும். கைப்பேசியைப் போல வாகனத்தையும் சார்ஜ் செய்யும் காலம் வந்துவிட்டது. ஆனால் ஒரு சார்ஜில் எவ்வளவு தொலைவு செல்லும்? மின்கலத்தின் ஆயுள் என்ன? நீண்ட பயணத்தில் சார்ஜர் கிடைக்குமா? EV உண்மையிலேயே சுற்றுச்சூழலுக்கு நல்லதா? இந்தக் கேள்விகளுக்குப் பதில் தெரிந்தால்தான் அது நமக்கான சரியான தேர்வா என்பதை முடிவு செய்ய முடியும்.

ஒரு பயணம்... பல கேள்விகள்!

கோவையைச் சேர்ந்த ஓர் இளைஞரை உதாரணமாக எடுத்துக்கொள்வோம். தினமும் சுமார் 50 கிலோமீட்டர் பயணம் செய்யும் அவர், பெட்ரோல் செலவைக் குறைக்க மின்சார இருசக்கர வாகனத்திற்கு மாறுகிறார். வீட்டில் சார்ஜ் செய்வதால் தினசரிப் பயணம் எளிதாகிறது. ஆனால் நண்பர்களுடன் மலைப்பகுதிக்குச் செல்லத் திட்டமிட்டபோது புதிய கேள்விகள் எழுகின்றன: ஏற்றமான சாலையில் மின்கலம் எவ்வளவு நீடிக்கும்? வழியில் செயல்படும் சார்ஜர் இருக்கிறதா? திரும்பிவரத் தேவையான மின்சாரம் கிடைக்குமா? EV என்பது வாகனத்தை மட்டும் மாற்றவில்லை; பயணத்தை முன்கூட்டியே திட்டமிடும் முறையையும் மாற்றுகிறது!

எல்லா மின்சார வாகனங்களும் ஒன்றா?

அந்த இளைஞர் தேர்ந்தெடுத்தது மின்கலத்தில் சேமிக்கப்பட்ட மின்சாரத்தால் முழுமையாக இயங்கும் வாகனம். ஆனால் ‘EV’ என்ற பெயரில் சந்தையில் உள்ள எல்லா வாகனங்களும் இதே முறையில் இயங்குவதில்லை.. மின்சார இயக்கத்தை முழுமையாகவோ பகுதியாகவோ பயன்படுத்தும் வாகனங்கள், அவற்றின் ஆற்றல் மூலத்தையும் இயக்க முறையையும் பொறுத்து பல வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன. அவற்றில் நான்கு முக்கிய வகைகளைப் பார்க்கலாம்.

• BEV — Battery Electric Vehicle: மின்கலத்தில் சேமிக்கப்பட்ட மின்சாரத்தால் மட்டுமே இயங்கும் முழுமையான மின்சார வாகனம். இதை வெளிப்புற மின் இணைப்பில் சார்ஜ் செய்ய வேண்டும்.

• HEV — Hybrid Electric Vehicle: எரிபொருள் எஞ்சினும் மின்மோட்டாரும் இணைந்து இயங்கும் ஹைபிரிட் வாகனம். இதன் மின்கலம் வாகன இயக்கம் மற்றும் (regenerative braking) மூலம் சார்ஜ் செய்யப்படுகிறது; வெளிப்புற மின் இணைப்பில் சார்ஜ் செய்யப்படாது.

• PHEV — Plug-in Hybrid Electric Vehicle: எரிபொருள் எஞ்சினுடன் ஒப்பீட்டளவில் பெரிய மின்கலத்தையும் கொண்டது. வெளிப்புறமாகச் சார்ஜ் செய்து, குறிப்பிட்ட தொலைவு வரை மின்சாரத்தில் மட்டும் இயக்கலாம்.

• FCEV — Fuel Cell Electric Vehicle: ஹைட்ரஜனை fuel cell மூலம் மின்சாரமாக மாற்றி, அந்த மின்சாரத்தால் மின்மோட்டாரை இயக்குகிறது.

இந்தக் கட்டுரை, மின்கல மின்சாரத்தால் முழுமையாக இயங்கும் BEV வகையை முதன்மையாக விளக்குகிறது.

மின்சார வாகனத்தின் உள்ளே என்ன நடக்கிறது?

பெட்ரோல் வாகனத்தில் எரிபொருள் எரிந்து, பல இயந்திரப் பாகங்களைக் கடந்து சக்கரங்களை இயக்குகிறது. EV-யில் பாதை சுருக்கமானது: மின்கலத்திலிருந்து வரும் மின்சாரம், கட்டுப்பாட்டு அமைப்பு வழியாக மின்மோட்டாரை அடைந்து சக்கரங்களை இயக்குகிறது. இதனால் எஞ்சின் ஆயில், எக்ஸாஸ்ட் அமைப்பு மற்றும் சில வழக்கமான பராமரிப்புத் தேவைகள் குறைகின்றன.

மின்சார வாகனத்தின் நான்கு முக்கிய உறுப்புகள்:

• மின்சாரத்தைச் சேமிக்கும் உயர் மின்னழுத்த மின்கலம்

• சக்கரங்களை இயக்கும் மின்மோட்டார்

• மின்சார ஓட்டத்தைக் கட்டுப்படுத்தும் மின்னணு அமைப்பு

• மின்கலத்தின் சார்ஜ் மற்றும் வெப்பநிலையைக் கண்காணிக்கும் பேட்டரி மேலாண்மை அமைப்பு

EV-யின் மறைந்திருக்கும் மூன்று புத்திசாலித்தனங்கள்!

ஒரு மின்சார வாகனத்தை இயக்குவது மின்கலமும் மோட்டாரும் மட்டுமல்ல. ஓட்டுநர் ஆக்சிலரேட்டரிலிருந்து காலை எடுத்தவுடன், மோட்டார் தற்காலிகமாக ஜெனரேட்டராக மாறி வாகனத்தின் வேகத்தைக் குறைப்பதுடன், அந்த இயக்க ஆற்றலின் ஒரு பகுதியை மீண்டும் மின்சாரமாக மாற்றி மின்கலத்துக்குத் திருப்பி அனுப்புகிறது. இதுதான் ‘ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங் (Regenerative Braking)’. இதனால் வழக்கமான பிரேக் பேட்களின் தேய்மானமும் ஓரளவு குறையலாம். இன்னொரு ஆச்சரியம் EV-யில் உள்ள பெரிய மின்கலம் சக்கரங்களை மட்டும் இயக்குவதில்லை; குளிர்சாதனம், உட்புற வெப்பக் கட்டுப்பாடு மற்றும் மின்னணுக் கருவிகளுக்கும் ஆற்றல் வழங்குகிறது. அதேநேரம், ‘Battery Management System’ எனப்படும் மின்னணுக் காவலன், மின்கலத்தின் ஒவ்வொரு செல்லின் மின்னழுத்தம், வெப்பநிலை, சார்ஜ் நிலை ஆகியவற்றை இடைவிடாமல் கண்காணிக்கிறது. வெப்பம் அல்லது மின்னழுத்தம் பாதுகாப்பு வரம்பை மீறினால், சார்ஜிங் வேகத்தையோ மின் விநியோகத்தையோ கட்டுப்படுத்தும். அதனால்தான் EV என்பது வெறும் ‘மின்சார கார்’ அல்ல; சக்கரங்களில் பயணிக்கும் ஒரு கணினி!

பெரிய மின்கலம் அதிகப் பயணத் தொலைவை வழங்கலாம். அதே நேரத்தில் வாகனத்தின் விலை, எடை மற்றும் சார்ஜிங் தேவையும் அதிகரிக்கலாம். எனவே அதிகத் திறன் கொண்ட மின்கலமே எப்போதும் சிறந்தது அல்ல; நமது தினசரித் தேவைக்கு ஏற்ற திறன்தான் புத்திசாலித்தனமான தேர்வு.

உலகம் EV-களை நோக்கி நகர்வது ஏன்?

நகரக் காற்றுமாசு, பெட்ரோலிய விலை, எரிபொருள் இறக்குமைச் சார்பு மற்றும் காலநிலை மாற்றம் ஆகியவை புதிய போக்குவரத்துத் தீர்வுகளின் தேவையை அதிகரித்துள்ளன. EV-யில் புகைக் குழாய் இல்லாததால், அது ஓடும் இடத்தில் நேரடி புகை வெளியேற்றம் இல்லை; இயக்கச் சத்தமும் குறைவு.. சர்வதேச எரிசக்தி முகமையின் Global EV Outlook 2026 அறிக்கையின்படி, 2025ஆம் ஆண்டில் உலகளவில் இரண்டு கோடிக்கும் அதிகமான மின்சார மற்றும் plug-in hybrid கார்கள் விற்பனையாகின. இது புதிய கார் விற்பனையில் சுமார் நான்கில் ஒரு பங்கு. ஆனால் வாகன விலை, அரசு ஊக்குவிப்பு, மின்சாரக் கட்டணம் மற்றும் சார்ஜிங் வசதியைப் பொறுத்து ஒவ்வொரு நாட்டிலும் வளர்ச்சியின் வேகம் மாறுகிறது.

இந்தியாவின் EV பயணம்

மத்திய அரசின் 2026 ஆகஸ்ட் வெளியீட்டின்படி, இந்தியாவின் EV விற்பனை 2016ல் சுமார் 50,000 ஆக இருந்தது; 2025ல் அது 23 லட்சமாக உயர்ந்தது—சுமார் 46 மடங்கு வளர்ச்சி. இந்த மாற்றத்தின் வேகம் விலையுயர்ந்த கார்களில் மட்டும் இல்லை. இருசக்கர வாகனங்கள், ஆட்டோக்கள், டெலிவரி வாகனங்கள், வாடகைக் கார்கள் மற்றும் பேருந்துகளில்தான் மிகப்பெரிய வாய்ப்பு உள்ளது; காரணம், அவை தினமும் அதிகத் தொலைவு இயக்கப்படுகின்றன. PM E-DRIVE திட்டத்தில் 14,028 மின்சாரப் பேருந்துகளுக்காக ₹4,391 கோடியும், பொது சார்ஜிங் கட்டமைப்புக்காக ₹2,000 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் மானியம் மட்டும் நீண்டகால வெற்றியைத் தராது. நம்பகமான வாகனங்கள், தரமான மின்கலங்கள், பயிற்சி பெற்ற தொழில்நுட்பப் பணியாளர்கள், பரவலான சேவை வசதி மற்றும் வெளிப்படையான உத்தரவாதம் ஆகியவை ஒன்றாக வளர வேண்டும்.

ஒரு சார்ஜில் எவ்வளவு தூரம்?

EV வாங்க நினைப்பவர்களின் முக்கியக் கவலை, பயணத்தின் நடுவில் சார்ஜ் தீர்ந்துவிடுமோ என்ற அச்சம். நிறுவனம் தெரிவிக்கும் தொலைவு கட்டுப்படுத்தப்பட்ட சோதனையில் பெறப்பட்டதாக இருக்கலாம். நடைமுறையில் வேகம், நெரிசல், சாலை ஏற்றம், பயணிகள் எடை, குளிர்சாதனப் பயன்பாடு, வானிலை மற்றும் ஓட்டும் முறை ஆகியவை தொலைவை மாற்றும். தினமும் 40 கிலோமீட்டர் பயணம் செய்பவருக்கு 400 கிலோமீட்டர் திறன் கட்டாயமில்லை. ஆனால் நகரங்களுக்கு இடையே அடிக்கடி பயணம் செய்பவருக்கு அதிகத் திறனும் நம்பகமான விரைவு சார்ஜிங் வலையமைப்பும் தேவை.

சார்ஜிங் நிலையம்... புதிய பயணக் கட்டமைப்பு!

வீட்டுச் சார்ஜிங் தினசரிப் பயணத்திற்கு வசதியானது; நெடுஞ்சாலை மற்றும் வணிகப் பயணங்களுக்கு விரைவு சார்ஜிங் தேவை. எல்லா சார்ஜர்களும் எல்லா வாகனங்களுக்கும் பொருந்தாது. எனவே இணைப்பு வகை, சார்ஜிங் திறன், பாதுகாப்பான மின் வசதி மற்றும் பயணப் பாதையில் செயல்படும் நிலையங்கள் உள்ளனவா என்பதை வாங்கும் முன்பே சரிபார்க்க வேண்டும்.

இந்தியாவில் நிறுவப்பட்டுள்ள EV சார்ஜிங் நிலையங்கள்: முன்னிலையில் எந்த மாநிலங்கள்?

2026 ஜூலை நிலவரப்படி, இந்தியாவில் 52,718 பொது EV சார்ஜிங் நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளன. அவற்றில் 3,839 நிலையங்களுடன் தமிழ்நாடு நான்காவது இடத்தில் உள்ளது.

இந்த எண்ணிக்கை முக்கிய முன்னேற்றம். ஆனால் அடுத்த கட்டச் சவால் எண்ணிக்கையை மட்டும் உயர்த்துவது அல்ல; பெருநகரங்களுக்கு வெளியே, மாவட்டங்கள் மற்றும் நெடுஞ்சாலை வழித்தடங்களிலும் செயல்படும், எளிதில் அணுகக்கூடிய சார்ஜர்களை உருவாக்குவதுதான். எண்ணிக்கை வளர்வது முன்னேற்றம்; தேவைப்படும் இடத்தில், தேவைப்படும் நேரத்தில் சார்ஜர் இயங்குவதுதான் பயனரின் நம்பிக்கை!=

மின்சார வாகனம் முழுமையாக மாசற்றதா?

EV-யில் நேரடி புகைக்குழாய் வெளியேற்றம் இல்லை. ஆனால் அதைச் சார்ஜ் செய்யும் மின்சாரம் எங்கிருந்து வருகிறது என்பதும் முக்கியம். நிலக்கரியிலிருந்து தயாரிக்கப்படும் மின்சாரத்திற்கும், சூரிய அல்லது காற்றாலை மின்சாரத்திற்கும் சுற்றுச்சூழல் தாக்கம் ஒன்றல்ல. வாகனங்களை மட்டும் மின்சாரத்திற்கு மாற்றிவிட்டு, மின்சாரத்தைப் பெருமளவில் நிலக்கரியிலிருந்து உற்பத்தி செய்தால் EV-களின் முழுச் சுற்றுச்சூழல் பலனைப் பெற முடியாது. நகரச் சாலைகளில் நேரடி புகை குறைந்தாலும், மாசின் ஒரு பகுதி மின் நிலையங்களுக்கு இடம்பெயரும். எனவே வாகன மின்மயமாக்கலுடன் சூரியசக்தி, காற்றாலை போன்ற புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியும் வளர வேண்டும். வாகனமும் அதை இயக்கும் மின்சாரமும் தூய்மையாகும்போதுதான் உண்மையான, நீடித்த மாற்றம் உருவாகும். மின்கலத்திற்குத் தேவையான லித்தியம், நிக்கல் போன்ற கனிமங்களின் சுரங்கம் மற்றும் உற்பத்தியிலும் தாக்கங்கள் உள்ளன. பயன்பாட்டு ஆயுள் முடிந்த மின்கலங்களைப் பாதுகாப்பாகச் சேகரித்து மறுசுழற்சி செய்ய வேண்டும். ஒரு வாகனத்தின் சுற்றுச்சூழல் கணக்கை புகைக் குழாயில் மட்டும் தேடாமல், உற்பத்தியிலிருந்து மறுசுழற்சி வரையிலான முழுப் பயணத்திலும் பார்க்க வேண்டும். காரின் புகைக் குழாயை அகற்றுவது முதல் படி; அதை இயக்கும் மின்சாரத்தின் புகையையும் குறைப்பதே உண்மையான இலக்கு!

பாதுகாப்பில் அலட்சியம் வேண்டாம்!

“எல்லா EV-களும் தீப்பற்றும்” என்பதும் தவறு; “எந்த அபாயமும் இல்லை” என்பதும் தவறு. தரமற்ற மின்கலம், தவறான சார்ஜர், சேதமடைந்த மின் இணைப்பு, அதிக வெப்பம், விபத்துச் சேதம் மற்றும் அங்கீகரிக்கப்படாத மாற்றங்கள் அபாயத்தை அதிகரிக்கலாம். மின்கலத்தின் ஒரு செல்லில் உருவாகும் அதிக வெப்பம் அருகிலுள்ள செல்களுக்கும் பரவுவது “தொடர் வெப்பப் பரவல்” எனப்படுகிறது. தரமான செல்கள், வெப்பக் கண்காணிப்பு மற்றும் பேட்டரி மேலாண்மை அமைப்பு இதைத் தடுப்பதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. புகை, எரிந்த மணம் அல்லது அசாதாரண வெப்பம் ஏற்பட்டால் வாகனத்திலிருந்து விலகி, தீயணைப்பு மற்றும் அவசர உதவியை உடனடியாக அழைக்க வேண்டும். அபாயத்தை மறுப்பது பாதுகாப்பல்ல; அது உருவாகும் முன்பே தடுப்பதுதான் பாதுகாப்பு!

மின்சாரக் கார் வந்துவிட்டால்... போக்குவரத்து நெரிசல் மறைந்துவிடுமா?

மின்சாரக் கார் நேரடி புகைக்குழாய் CO₂ வெளியேற்றமின்றி ஓடலாம்; ஆனால் அது சாலையில் எடுத்துக்கொள்ளும் இடம் மாறுவதில்லை. டீசல் காரை மின்சாரக் காராக மாற்றுவது நேரடி உமிழ்வைக் குறைக்கலாம்; நெரிசல், பார்க்கிங் பற்றாக்குறை மற்றும் பயண நேர இழப்பை மட்டும் தீர்க்காது. இதை 50 பேரின் பயணம் தெளிவாகக் காட்டுகிறது. அவர்கள் டீசல் அல்லது மின்சாரக் கார்களில் பயணித்தாலும், வாகனத் தடப் பரப்பு பெரிதாக மாறுவதில்லை. அதே பயணிகளை ஒரே பேருந்தில் நகர்த்தும்போது சாலை இடத் தேவை கணிசமாகக் குறைகிறது. அதுவே மின்சாரப் பேருந்தாக இருந்தால், நேரடி புகைக்குழாய் CO₂ வெளியேற்றமும் இல்லாமல், குறைந்த இடத்தில் அதிகமான மக்களை நகர்த்த முடியும். இதுதான் மின்மயமாக்கலுக்கும் நிலையான நகரப் போக்குவரத்துக்கும் உள்ள வேறுபாடு: மின்சாரக் கார் நேரடி உமிழ்வைக் குறைக்கிறது; மின்பேருந்து உமிழ்வுடன் சாலை இடத் தேவையையும் குறைக்கிறது. எனவே நாளைய நகரங்களுக்கு அதிகமான EV-கள் மட்டும் போதாது. தரமான மின்பேருந்துகள், மெட்ரோ–பேருந்து ஒருங்கிணைப்பு, பாதுகாப்பான நடைபாதைகள், மிதிவண்டிப் பாதைகள் மற்றும் கடைசி மைல் இணைப்பும் ஒன்றாக வளர வேண்டும். தனியார் வாகனத்தின் எரிபொருளை மாற்றுவது தொழில்நுட்ப மாற்றம்; மக்கள் பயணிக்கும் முறையையே மாற்றுவது உண்மையான போக்குவரத்துப் புரட்சி.

குறிப்பு: CO₂ மற்றும் வாகனத் தடப் பரப்பு மதிப்புகள் விளக்கத்திற்கான அனுமானங்கள். வாகனத் தடப் பரப்பு என்பது வாகனங்களின் நீளம் × அகலம் அடிப்படையிலான மதிப்பீடு; இயக்க மற்றும் பாதுகாப்பு இடைவெளிகளும் சாலை வடிவமைப்பும் இதில் சேர்க்கப்படவில்லை. உண்மையான மதிப்புகள் வாகன வகை, பயணிகள் எண்ணிக்கை மற்றும் இயக்கச் சூழலுக்கு ஏற்ப மாறலாம்.

EV-கள் நேரடி உமிழ்வைக் குறைக்கலாம்; நெரிசலையும் சாலை இடத் தேவையையும் குறைக்கத் திறமையான பொதுப் போக்குவரத்து அவசியம்.

நகரத்தை மாற்றும் மின்சாரப் பேருந்துகள்

நகரப் பேருந்துகள் தினமும் நீண்ட நேரமும் அதிகத் தொலைவும் இயக்கப்படுகின்றன. எனவே நகரப் போக்குவரத்தின் மின்மயமாக்கல் பெரிய சமூக மற்றும் சுற்றுச்சூழல் தாக்கத்தை உருவாக்கக்கூடியது. மின்சாரப் பேருந்தை வாங்குவது தொடக்கம் மட்டுமே; அதைத் தினமும் பாதுகாப்பாகவும் நம்பகமாகவும் இயக்குவதுதான் வெற்றி! வழித்தடம், பயணிகள் சுமை, மின்கலத் திறன், சார்ஜிங் அட்டவணை, மின்சார விநியோகம், தீப்பாதுகாப்பு, ஓட்டுநர் பயிற்சி மற்றும் பணிமனைப் பராமரிப்பு ஆகியவை ஒருங்கிணைக்கப்பட வேண்டும். நம்பகமான நேர அட்டவணை, பயணிகள் தகவல் மற்றும் பாதுகாப்பான சேவை இருந்தால்தான் மக்கள் தனிநபர் வாகனத்திலிருந்து பொதுப் போக்குவரத்திற்கு மாறுவார்கள்.

உங்களுக்குத் தெரியுமா?

• EV நிறுத்தப்பட்டிருக்கும்போது மின்மோட்டார் தொடர்ந்து இயங்க வேண்டியதில்லை; நகர நெரிசலில் இது ஆற்றல் வீணாவதைக் குறைக்கிறது.

• நடைமுறைப் பயணத் தொலைவு வானிலை, வேகம், சாலை ஏற்றம், பயணிகள் எடை மற்றும் குளிர்சாதனப் பயன்பாட்டால் மாறக்கூடும்.

நிபுணரின் பார்வை

மின்சார வாகனத்தின் வெற்றியை விற்பனை எண்ணிக்கையால் மட்டும் அளவிட முடியாது. வாங்கிய பிறகு நம்பகமான சார்ஜிங், தரமான சேவை, மின்கலப் பாதுகாப்பு மற்றும் பொறுப்பான மறுசுழற்சி கிடைக்கிறதா என்பதே உண்மையான அளவுகோல். தனிநபர் EV பயன்பாட்டுடன் மின்சாரப் பேருந்துகள், ஆட்டோக்கள் மற்றும் பகிர்வு வாகனங்களுக்கு முன்னுரிமை அளித்தால், முதலீட்டின் சமூகப் பலன் மேலும் அதிகரிக்கும்.

இந்த வாரம் கற்றுக்கொண்டவை

• பெரிய மின்கலம் மட்டுமே சிறந்த வாகனத்தின் அடையாளமல்ல; பயன்பாட்டிற்கு ஏற்ற திறனே முக்கியம்.

• விளம்பரத்தில் கூறப்படும் பயணத் தொலைவும் நடைமுறையில் கிடைக்கும் தொலைவும் மாறுபடலாம்.

• EV-யின் சுற்றுச்சூழல் பலனை அதன் முழு வாழ்க்கைப் பயணத்தின் அடிப்படையில் மதிப்பிட வேண்டும்.

• மின்சாரப் பொதுப் போக்குவரத்து நகரங்களுக்கு பெரிய சமூகப் பலனை வழங்க முடியும்.

• எல்லா மின்சார வாகனங்களும் ஒரே தொழில்நுட்பத்தில் இயங்குவதில்லை; BEV, HEV, PHEV மற்றும் FCEV ஆகியவற்றின் இயக்க முறைகள் வேறுபடுகின்றன.

வாசகர்களுக்கான 5 முக்கிய குறிப்புகள்

✓ நடைமுறைப் பயன்பாட்டில் கிடைக்கக்கூடிய பயணத் தொலைவை விசாரியுங்கள்.

✓ வீடு அல்லது குடியிருப்பில் பாதுகாப்பான சார்ஜர் அமைக்க முடியுமா என்பதை உறுதிப்படுத்துங்கள்.

✓ மின்கலம் மற்றும் வாகனத்திற்கான உத்தரவாத நிபந்தனைகளைத் தனித்தனியாகப் படியுங்கள்.

✓ அங்கீகரிக்கப்பட்ட சேவை மையம் அருகில் உள்ளதா எனச் சரிபாருங்கள்.

✓ சார்ஜிங் இணைப்பு வகை மற்றும் நீண்ட பயணப் பாதைகளில் கிடைக்கும் நிலையங்களை அறிந்துகொள்ளுங்கள்.

முடிவில்... மாற்றமா? புரட்சியா?

மின்சாரக் கார்கள் நகரத்தின் புகையை குறைக்கலாம்; ஆனால் அவை மட்டும் நெரிசலைக் குறைக்காது. மின்சாரப் பேருந்துகள் வந்தாலும் சேவை நம்பகமாக இல்லையெனில் மக்கள் பொதுப் போக்குவரத்திற்கு மாறமாட்டார்கள். மின்கலங்களை உற்பத்தி செய்துவிட்டு மறுசுழற்சியை மறந்துவிட்டால், இன்றைய தீர்வு நாளைய கழிவாக மாறலாம்.

“வாகனத்தின் சக்தி மூலத்தை மட்டும் மாற்றுவது—மாற்றம். மனிதர்கள் பயணிக்கும் முறையையே பாதுகாப்பாகவும் தூய்மையாகவும் மாற்றுவது—புரட்சி.” அந்தப் புரட்சியின் சுவிட்ச் தொழில்நுட்பத்தின் கையில் இருக்கலாம்; ஆனால் அதை இயக்கும் பொறுப்பு நம் கையில்தான்!

Behind the Wheels Insight

நாளைய பயணத்தை மாற்றுவது அதிகமான மின்சாரக் கார்கள் அல்ல; குறைந்த மாசில், குறைந்த சாலை இடத்தில், அதிகமான மக்களைப் பாதுகாப்பாக நகர்த்தும் அறிவார்ந்த போக்குவரத்து அமைப்பே!

— முனைவர் . வளவன் . அமுதன்

பொதுப் போக்குவரத்து | ஆட்டோமொபைல் | மொபிலிட்டி | மின்சார வாகனங்கள் | சாலைப் பாதுகாப்பு நிபுணர்

ஆசிரியரை பற்றி அறிந்து கொள்ள : Dr. V. Amudhan – Portfolio

அடுத்த வாரம்...

வீட்டுச் சார்ஜரும் விரைவு சார்ஜரும் எவ்வாறு வேறுபடுகின்றன? AC, DC சார்ஜிங் என்றால் என்ன? எல்லா connector-களும் எல்லா EV-களுக்கும் பொருந்துமா? பாதுகாப்பான சார்ஜிங் நிலையத்தின் பின்னால் என்ன நடக்கிறது? — EV சார்ஜிங் உலகத்தை அடுத்த கட்டுரையில் பார்க்கலாம்.

தரவு மூலம்: BHEL Public Charging Portal; ஜூலை 2026-ல் அணுகப்பட்ட தரவுகளின் ஆசிரியர் தொகுப்பு.

இந்தக் கட்டுரையின் முந்தைய தொகுப்பைப் படிக்க: சக்கரங்கள் சொல்லும் கதை - 4 |வாகனத்தை வாங்குவது எளிது.. சரியாகத் தேர்வு செய்வது எப்படி?

(சக்கரங்கள் சுழலும்...)