ஒரு கற்பனைக் காட்சி: தீபாவளிக்குக் குடும்பத்துடன் சொந்த ஊர் செல்கிறீர்கள். முன்னால் செல்லும் கார் திடீரென வேகத்தைக் குறைக்க, நீங்கள் பிரேக் மிதிப்பதற்குள் காரே பிரேக் பிடிக்கிறது. காரில் இனிப்புப் பெட்டிகள்; பின்னிருக்கையில் தூங்கும் குழந்தை. காரே உதவிவிட்டால், உங்கள் கவனத்துக்கும் விடுமுறை கொடுக்கலாமா?
அடுத்த சில கிலோமீட்டர்களில் வேகத்தைக் கட்டுப்படுத்தவும் சாலைத் தடத்தின் நடுவில் செல்லவும் அமைப்புகள் உதவுகின்றன. அப்போது கைப்பேசி ஒலிக்கிறது. அதைப் பார்க்கத் தோன்றும் அந்த நொடிதான், உதவி கிடைப்பதையும் ஓட்டுதலை ஒப்படைப்பதையும் வேறுபடுத்த வேண்டிய தருணம்!
குடும்பப் பயணத்தில் கிடைக்கும் கூடுதல் பாதுகாப்பும், நீண்டதூர ஓட்டுதலில் குறையும் பணிச்சுமையும் வரவேற்கத்தக்கவை. அதேநேரத்தில், உதவியின் எல்லையை அறிந்தால்தான் நிம்மதி நிலைக்கும். மேம்பட்ட ஓட்டுநர் உதவி அமைப்புகள் என்பதன் ஆங்கிலச் சுருக்கமே ADAS — Advanced Driver Assistance Systems. இவற்றின் ஒவ்வோர் அம்சமும் குறிப்பிட்ட பணிக்காக வடிவமைக்கப்படுகிறது; முழுப் பயணத்தையும் ஏற்றுக்கொள்ளும் திறன் அதனால் தானாக வந்துவிடாது.
அவசரத் தானியங்கி பிரேக் அமைப்பு (Automatic Emergency Braking — AEB), மோதல் நெருங்குவதை உணர்ந்தால் பிரேக் பிடித்து விபத்தைத் தவிர்க்கவோ, அதன் தீவிரத்தைக் குறைக்கவோ உதவுகிறது. ஒவ்வொரு தடையையும் எல்லா வேகங்களிலும் சமாளிக்கும் உத்தரவாதம் அதற்கு இல்லை.
மணிக்கு 90 கிலோமீட்டர் வேகத்தில் கார் ஒரு நொடியில் 25 மீட்டர் நகரும். இது நிறுத்தத் தூரமல்ல. பிரேக் பிடிக்கத் தொடங்கிய பிறகும் வாகனம் நிற்கக் கூடுதல் தூரம் தேவை; அது வேகம், டயர்கள், பிரேக் மற்றும் சாலைப் பிடிமானத்தைப் பொறுத்தது.
ஒரு விபத்தில் முதல் மோதலுடன் ஆபத்து முடிந்துவிடுவதில்லை. மோதிய கார் தொடர்ந்து நகர்ந்து, அருகிலுள்ள வாகனத்திலோ சாலைத் தடுப்பிலோ மீண்டும் மோதக்கூடும். அந்தத் தருணத்திலும் உதவுவதற்குச் சில கார்களில் ஒரு வசதி இருக்கிறது: மோதலுக்குப் பிந்தைய தானியங்கி பிரேக். ஆங்கிலத்தில், Multi-Collision Brake (MCB).
ஹூண்டாய் IONIQ 5 N (2026) வாகனத்தின் உரிமையாளர் கையேட்டின்படி, பாதுகாப்புக் காற்றுப்பை விரியும் விபத்தில், குறிப்பிட்ட நிபந்தனைகள் பூர்த்தியானால், மோதலுக்குப் பிந்தைய தானியங்கி பிரேக் அமைப்பு (MCB) தானாகப் பிரேக் பிடித்து வேகத்தைக் குறைக்க உதவுகிறது. ஏற்கெனவே பார்த்த AEB, மோதலைத் தவிர்க்கவோ அதன் தீவிரத்தைக் குறைக்கவோ உதவுகிறது. MCB-யின் கவனம், முதல் மோதலைத் தொடர்ந்து ஏற்படக்கூடிய அடுத்த மோதலின் ஆபத்தைக் குறைப்பதில் இருக்கிறது. ஓட்டுநர் அதிகமாகப் பிரேக் மிதித்தால், அவரது பிரேக் செயலுக்கே முன்னுரிமை கிடைக்கும்.
MCB இரண்டாவது மோதலை முற்றிலும் தடுக்கும் உத்தரவாதமல்ல. மின்னணுக் கோளாறுகளால் செயல்பாடு பாதிக்கப்படலாம்; வாகனம் நின்றதும் அதன் பிரேக் கட்டுப்பாடு முடியும். இது எல்லா ADAS கார்களிலும் கிடைப்பதில்லை.
அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல் (Adaptive Cruise Control — ACC), முன்வாகனத்துடன் தேர்ந்தெடுத்த இடைவெளியைப் பராமரிக்க வேகத்தை மாற்றுகிறது. சாலைத் தடத்தை (Lane) விட்டு விலகும்போது திருத்தும் உதவியும், தடத்தின் நடுவே தொடர்ந்து செலுத்தும் உதவியும் வேறுவேறு. எச்சரிக்கும் ஒலி கேட்டவுடனே கார் தானாகத் திருத்திவிடும் என்றும் எண்ணக்கூடாது. இந்த வேறுபாடுகளை அமெரிக்க சாலைப் பாதுகாப்பு அமைப்பான NHTSA தெளிவுபடுத்துகிறது.
ACC பயன்படுத்தும்போது முன்வாகனம் வழிவிட்டால், கார் ஏற்கெனவே நிர்ணயித்த வேகத்தை நோக்கி மீண்டும் வேகமெடுக்கக்கூடும். ஹூண்டாயின் கையேடு இதை விளக்குகிறது. ஆகவே, முன்னால் இருந்த கார் விலகியதும் நமது காரின் பதில் எப்படி இருக்கும் என்பதைப் புரிந்திருப்பது அவசியம்.
குடும்பத்தில் காரை இருவர் பகிர்ந்து ஓட்டும்போது ACC அமைப்புகளைச் சரிபார்ப்பது அவசியம். ஹூண்டாயின் 2026 இணையக் கையேட்டின்படி, வாகனத்தை மீண்டும் இயக்கும்போதும் முன்பு தேர்ந்தெடுத்த இடைவெளி அமைப்பு தொடரலாம். எனவே, ஓட்டுநர் மாறும்போது அந்த அமைப்பைச் சரிபார்க்க வேண்டும்.
பாண்டியராஜன் நடித்த ‘ஆண் பாவம்’ (1985) படத்தின் கார் ரிவர்ஸ் காட்சி நினைவிருக்கிறதா? மோதிய பிறகே தகவல் சொல்லும் அந்தக் காட்சி இன்றும் சிரிக்கவைக்கும். அன்று சினிமாவில் சிரிக்கவைத்த ரிவர்ஸ்… இன்று தொழில்நுட்பத்துக்கே ஒரு சவால்! இப்போது கார்களில் கேமரா, சென்சார், பார்க்கிங் உதவி எனப் பல வசதிகள் வந்துவிட்டன. ஆனால், கார் உதவினால் ஓட்டுநர் கண்ணை மூடிக்கொள்ளலாமா? சில மாடல்களில் பார்க்கிங் உதவி ஸ்டீயரிங்கை மட்டுமே இயக்கும்; வேகத்தையும் பிரேக்கையும் ஓட்டுநரே கட்டுப்படுத்த வேண்டும். பார்க்கிங் உதவி இருந்தாலும், சுற்றிலுள்ள மனிதர்களையும் தடைகளையும் ஓட்டுநரே தொடர்ந்து கவனிக்க வேண்டும். பார்க்கிங் உதவி இருக்கலாம்… பார்வைக்கு விடுமுறை கிடையாது!
வாகனத் துறைத் தரநிர்ணய அமைப்பான SAE International, ஓட்டுதல் தானியக்கத்தை 0 முதல் 5 வரை ஆறு நிலைகளாக வகைப்படுத்துகிறது.
• நிலை 0 - ஓட்டுதல் மனிதரிடம் : தொடர்ச்சியான ஓட்டுதல் தானியக்கம் இல்லை. ஸ்டீயரிங், வேகம், பிரேக் மற்றும் சாலைக் கண்காணிப்பு உள்ளிட்ட ஓட்டுதல் பணிகளை மனிதரே மேற்கொள்ள வேண்டும்.
• நிலை 1 - ஒரு கட்டுப்பாட்டில் உதவி : ஸ்டீயரிங் அல்லது வேகக் கட்டுப்பாட்டில் ஒன்றில் அமைப்பு தொடர்ந்து உதவும். மற்ற இயக்கப் பணிகளையும் சாலைக் கண்காணிப்பையும் ஓட்டுநரே மேற்கொள்ள வேண்டும்.
• நிலை 2 - இரு கட்டுப்பாடுகளிலும் உதவி : ஸ்டீயரிங், வேகக்கட்டுப்பாடு இரண்டிலும் அமைப்பு ஒரே நேரத்தில் உதவும். ஓட்டுநர் தொடர்ந்து சாலையைக் கவனித்து, தேவைப்படும்போது உடனடியாகக் கட்டுப்பாட்டை ஏற்க வேண்டும்.
• நிலை 3 - அமைப்பு ஓட்டும்; மனிதர் தயாராக இருப்பார் : வரையறுக்கப்பட்ட சூழலில், சாலைக் கண்காணிப்பு உட்பட முழு ஓட்டுதல் பணியையும் அமைப்பு மேற்கொள்ளும். கட்டுப்பாட்டை ஏற்குமாறு கோரிக்கை வந்தாலோ, வெளிப்படையான வாகனக் கோளாறு ஏற்பட்டாலோ மனிதர் மீண்டும் ஓட்ட வேண்டும்.
• நிலை 4 - ஓட்டுதலும் மாற்று நடவடிக்கையும் அமைப்பிடம் : வரையறுக்கப்பட்ட சூழலுக்குள் ஓட்டுதலையும், தேவைப்பட்டால் ஆபத்தைக் குறைக்கும் மாற்று நடவடிக்கையையும் அமைப்பே மேற்கொள்ளும். இதற்காக மனிதர் மீண்டும் ஓட்ட வருவதை அது சார்ந்திருக்காது.
• நிலை 5 - முழுமையான ஓட்டுதல் தானியக்கம் : மனிதர் ஓட்டக்கூடிய அனைத்து சாலை மற்றும் சுற்றுச்சூழல் நிலைகளிலும் அமைப்பே முழு ஓட்டுதல் பணியையும் மேற்கொள்ளும். மனிதர் ஓட்டவோ கட்டுப்பாட்டை மீண்டும் ஏற்கவோ தேவையில்லை.
இந்த நிலைகள் வேலைப்பகிர்வை விளக்குகின்றன. இங்கே ஒரு சுவாரஸ்யம்: நிலை 0-இல்கூட AEB போன்ற அவசரத் தலையீடு இருக்கலாம். ஆபத்து நேரத்தில் சில நொடிகள் பிரேக் பிடிப்பதும், ஓட்டுதலைத் தொடர்ந்து மேற்கொள்வதும் வேறுவேறு. அதேபோல், தானியக்க எண் உயர்ந்திருப்பது மட்டுமே ஒட்டுமொத்தப் பாதுகாப்புக்கான சான்றிதழாகாது. SAE வகைப்பாடு ஒரு பாதுகாப்புத் தரமதிப்பீடு அல்ல. ஆகவே, ‘எந்த நிலை?’ என்ற பதிலை வைத்து, அந்தக் காரின் எல்லாப் பாதுகாப்புத் திறன்களையும் முடிவுசெய்துவிட முடியாது.
உதாரணமாக, Ford BlueCruise குறிப்பிட்ட நெடுஞ்சாலைகளில் கைகளை எடுக்க அனுமதிக்கிறது; சாலையில் கவனம் தொடர வேண்டும், தேவைப்பட்டால் ஓட்டுநர் கட்டுப்பாட்டை ஏற்க வேண்டும். உங்கள் காரிலும் இதே அனுமதி இருப்பதாகக் கருதாமல், அதன் கையேட்டைப் பாருங்கள்.
சாலையில் பிறர் அடுத்து என்ன செய்யக்கூடும் என்பதை மதிப்பிடுவது மேம்பட்ட தானியங்கி இயக்க அமைப்பின் பணி. நகரும் திசை, வேகம், சாலைச் சூழல் ஆகியவை இதற்கு உதவுகின்றன. இது மனதை வாசிப்பதல்ல; சாத்தியங்களின் அடிப்படையிலான கணிப்பு.
விளக்கத்துக்கு ஓர் உதாரணம்: முன்னால் செல்லும் ஆட்டோ, பயணியை இறக்க ஓரமாக நிற்கலாம்; தொடர்ந்து செல்லவும் செய்யலாம். இரு சாத்தியங்களையும் கருதி வேகத்தையும் இடைவெளியையும் திட்டமிடுவது, திடீர் நகர்வுக்குப் பதிலளிக்க உதவும். Waymo தனது விளக்கத்தில், பிறரின் பல சாத்தியமான நகர்வுகளைக் கணித்து இயக்கத்தைத் திட்டமிடுவதாகக் கூறுகிறது. ஒவ்வொரு ADAS அம்சத்துக்கும் இந்த விரிவான திறன் இருப்பதாக எடுத்துக்கொள்ளக்கூடாது.
இங்கே ‘பாதைத் திட்டமிடுதல்’ என்பது சென்னையிலிருந்து சேலத்துக்கு எந்த நெடுஞ்சாலை என்று தேர்ந்தெடுப்பது மட்டும் அல்ல. அடுத்த சில மீட்டர்களில் எவ்வளவு விலகிச் செல்லலாம், எப்போது மெதுவாகலாம், எங்கே நின்று காத்திருக்கலாம் என்பதற்கான உடனடி இயக்கத் திட்டமும் அதில் அடங்கும். சூழல் மாற மாற அந்தத் திட்டம் திருத்தப்படுகிறது.
திட்டமிட்ட முடிவை வாகன இயக்கமாக மாற்றுவது அடுத்த பணி. ஸ்டீயரிங்கைத் திருப்பும் இயக்கி, பிரேக் அமைப்பு, இயந்திரம் அல்லது மின்மோட்டாரின் விசைக்கட்டுப்பாடு இணைந்து செயல்படுகின்றன. மென்பொருள் ‘வேகத்தைக் குறை’ என்று முடிவெடுத்தாலும், சக்கரங்கள்வரை சரியான செயல் சென்றுசேர வேண்டும்.
பேருந்தில் திடீரென பிரேக் பிடித்தால் பயணிகள் தடுமாறுவார்கள். அதுபோல, தானியங்கி இயக்கத்தில் தேவையற்ற திடீர் வேகமாற்றங்களையும் திருப்பங்களையும் குறைப்பது பயண வசதிக்கு முக்கியம். ஆனால், அவசரத்தில் மோதலைத் தவிர்க்க வலுவான பிரேக்கிற்கே முன்னுரிமை.
ஓர் அமைப்பு இயங்குவதற்காக வரையறுக்கப்பட்ட சாலை வகை, பகுதி, வேகம், வானிலை போன்ற நிபந்தனைகளின் தொகுப்பை இயக்கச் சூழல் வரம்பு (Operational Design Domain — ODD) என்பார்கள். குறிப்பிட்ட நெடுஞ்சாலைக்கான திறனை, கூட்டமான சந்தைத் தெருவுக்கும் பொருத்திவிட முடியாது.
நம் சாலைகளில் குறுக்கே வரும் இருசக்கர வாகனம், மறைந்துபோன சாலைத் தடக்கோடு, தற்காலிகச் சாலைப்பணித் தடுப்பு போன்றவை கூடுதல் சிக்கலை உருவாக்கலாம். மகிந்திராவின் உரிமையாளர் கையேடு, கனமழை, மோசமான பார்வைத்திறன், வழுக்கும் சாலை போன்ற சூழல்களில் ACC-ஐ பயன்படுத்த வேண்டாம் எனக் குறிப்பிடுகிறது. உங்கள் மாடலுக்கான கட்டுப்பாடுகளைத் தனியாக அறிந்திருக்க வேண்டும்.
சாலைப்பணிகளின்போது பழைய தடக்கோடுகளும் தற்காலிகத் தடுப்புகளும் முரண்படலாம். அப்போது சாலைத் தட உதவி மட்டுமே போதாது; சூழலைப் புரிந்துகொள்ளும் திறனும் தேவை. சில நேரங்களில் அமைப்பு உதவ மறுப்பதே அதன் செயல்பாட்டு வரம்பைக் காட்டும்.
எல்லையை அடைந்தாலோ, கோளாறு ஏற்பட்டாலோ என்ன நடக்கும் என்பதும் வடிவமைப்பின் முக்கியப் பகுதி. அமைப்பு எச்சரிக்கலாம், உதவியை நிறுத்தலாம், மனிதரிடம் கட்டுப்பாட்டைக் கோரலாம். எல்லா ADAS கார்களும் தாமாகச் சாலையோரம் ஒதுங்கி நிற்கும் என எதிர்பார்க்கக்கூடாது.
ஓட்டுநரே இல்லாதபோது பிரேக் அமைப்பில் கோளாறு வந்தால்? இதற்கான பதில், வாகனத்தின் அடிப்படை வடிவமைப்பிலும் இருக்க வேண்டும். Waymo தனது தானியங்கி வாகனங்களில் கூடுதல் பிரேக் அமைப்பு, மாற்று ஸ்டீயரிங் இயக்கி, தனித்த மின்வழங்கல் போன்ற ஏற்பாடுகளை விளக்குகிறது. இப்படியான கூடுதல் மாற்று அமைப்புகளை வைத்திருப்பதே ‘Redundancy’. கோளாறை அடையாளம் கண்டு, தேவையான மாற்று நடவடிக்கையைச் செயல்படுத்தும் மென்பொருளுடன் இவை இணைந்து செயல்பட வேண்டும்.
Waymo விளக்கும் இந்த வடிவமைப்பு உதாரணத்திலிருந்து, ஓட்டுநரிடம் மீண்டும் கட்டுப்பாட்டைக் கோரும் அமைப்புகளுக்கான விதிமுறையைப் பார்ப்போம். ஐ.நா. ஐரோப்பிய பொருளாதார ஆணையத்தின் (UNECE) UN Regulation No. 157, தானியங்கி தட இயக்க அமைப்புகளுக்கான (Automated Lane Keeping Systems — ALKS) விதிமுறை. குறிப்பிட்ட சூழலில் முழு ஓட்டுதல் பணியை ஏற்கும் இந்த அமைப்பை, சாதாரண சாலைத் தட உதவியுடன் குழப்பிக்கொள்ளக்கூடாது.
கட்டுப்பாட்டை ஏற்குமாறு அமைப்பு கோரியும் ஓட்டுநர் பதிலளிக்காதபோது, வாகனத்தை நிறுத்தும் ஆபத்தைக் குறைக்கும் நடவடிக்கையை (Minimum Risk Manoeuvre) இந்த விதிமுறை குறிப்பிடுகிறது. நிறுத்தும் இடமும் முறையும் அமைப்பு மற்றும் சூழலைப் பொறுத்தவை. ‘ஆபத்தைக் குறைத்தல்’ என்றால் ‘ஆபத்தே இல்லாத நிலை’ என்று பொருளல்ல.
• அமெரிக்காவின் 22 மாநில விபத்துத் தரவுகளை (2010–2014) ஆய்வு செய்த IIHS (2017), FCW மற்றும் AEB வசதியுள்ள வாகனங்களில், அவை இல்லாத அதே மாடல்களைவிட முன்வாகனத்தைப் பின்புறம் மோதும் விபத்து விகிதம் 50% குறைவாக இருந்ததைக் கண்டறிந்தது. இது இந்திய மதிப்பீடு அல்ல.
• Euro NCAP-ன் ஓட்டுநர் உதவி மதிப்பீடும் நட்சத்திரப் பாதுகாப்பு மதிப்பீடும் தனித்தனியானவை.
• ஒரே காரின் SAE நிலை, அந்த நேரத்தில் செயல்படும் தானியக்க அம்சத்தைப் பொறுத்து மாறலாம்.
பேருந்துகளுக்கான ADAS கொள்முதல் ஒப்பந்தத்தில் வழித்தடச் செயல்விளக்கம், ஓட்டுநர் பயிற்சி, அளவுத்திருத்தம், பராமரிப்புப் பொறுப்பு ஆகியவை இடம்பெற வேண்டும். செயல்திறன் கண்காணிப்பும் ஓட்டுநருக்கான உரிய ஓய்வும் அவசியம்.
• வாங்கும்முன் ஒவ்வொரு வசதியும் எச்சரிக்குமா, பிரேக் பிடிக்குமா, ஸ்டீயரிங்கை இயக்குமா என அறியுங்கள்.
• அமைப்பின் தயார் நிலை, செயல்பாடு, செயலிழப்பைக் காட்டும் திரைக் குறியீடுகளைப் புரிந்துகொள்ளுங்கள்.
• நிலை 2-இல் சாலையைக் கவனியுங்கள்; ஸ்டீயரிங் தொடர்பான தயாரிப்பாளர் வழிமுறைகளைப் பின்பற்றுங்கள்.
• AEB-யைச் சோதிக்க மனிதர்களையோ வாகனங்களையோ தடையாக நிறுத்தாதீர்கள்.
• ஓட்டுநர் மாறும்போது ACC வேகத்தையும் முன்வாகன இடைவெளி அமைப்பையும் சரிபாருங்கள்.
1. எச்சரிக்கை, அவசரத் தலையீடு, தொடர்ச்சியான ஓட்டுநர் உதவி — மூன்றும் வெவ்வேறு.
2. கணிப்பும் திட்டமிடலும் வாகன இயக்கத்துக்கு வழிகாட்டுகின்றன.
3. ஒவ்வோர் அமைப்புக்கும் செயல்பாட்டு வரம்புகள் உண்டு.
உதவி தொடங்குவதுபோலவே, அது விலகுவதையும் கார் தெளிவாக அறிவிக்க வேண்டும்.
புதிய தொழில்நுட்பம் குறித்த பயணியின் சந்தேகத்தை அலட்சியப்படுத்தாதீர்கள். ஓட்டுநரின் உற்சாகத்தைப் போலவே பயணியின் நிம்மதியும் முக்கியம். கேள்விகளுக்கு இடமளிக்கும் பயணத்தில்தான் நம்பிக்கை பிறக்கும்!
பின்னிருக்கையில் குழந்தை இன்னும் தூங்குகிறது. சொந்த ஊருக்கான தீபாவளிப் பயணம் தொடர்கிறது. கைப்பேசி ஒலித்தாலும், உங்கள் பார்வை சாலையிலேயே இருக்கிறது. வீட்டில் காத்திருக்கும் உறவுகளிடம் பத்திரமாகச் சென்றுசேர்வதே இப்போதைய இலக்கு. “காரின் புத்திசாலித்தனம் ஓட்டுநரின் அலட்சியத்துக்கு அனுமதிச்சீட்டு ஆகிவிடக்கூடாது.”
15-வது பகுதியை எட்டியுள்ள இத்தொடரின் வாசகர்களுக்கும் ஆதரவாளர்களுக்கும் புதிய தலைமுறை ஆசிரியர் குழுவுக்கும் நெஞ்சார்ந்த நன்றி. தமிழக மக்கள் அனைவருக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
— முனைவர். வளவன். அமுதன்
பொதுப் போக்குவரத்து | ஆட்டோமொபைல் | மொபிலிட்டி | மின்சார வாகனங்கள் | சாலைப் பாதுகாப்பு நிபுணர்
ஆசிரியரைப் பற்றி அறிந்துகொள்ள: Dr. V. Amudhan – Portfolio
ஆதாரங்கள்:
NHTSA, SAE J3016, IIHS (2017), Hyundai, Ford, Waymo, Mahindra, UNECE, Euro NCAP. விரிவான ஆதாரங்கள் ஆசிரியர் குழுவுக்கு வழங்கப்பட்டுள்ளன.
அடுத்த வாரம்...
வாகனம் மட்டும் புத்திசாலியாக இருந்தால் போதுமா? சாலையும் சிக்னல்களும் போக்குவரத்துச் சேவைகளும் இணைந்து செயல்பட்டால் பயணம் எப்படி மாறும்? ரோபோடாக்ஸி முன்பதிவு முதல் அவசர உதவி, பொதுப் போக்குவரத்து இணைப்பு வரை… பயணத்துக்கான புதிய கூட்டணியை அடுத்த வாரம் பார்ப்போம்!