‘காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமையுங்கள்’ இந்த முழக்கத்தோடு நாடாளுமன்றத்தை கடந்த 10 நாட்களுக்கு மேலாக அதிமுகவின் எம்.பிக்கள் முடக்கி வருகிறார்கள். இதுதான் தினமும் அரங்கேறி வருகிறது. நாடாளுமன்றத்திற்கு வெளியேயும் இந்த முழக்கத்தோடு பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் அவர்கள் ஈடுபடுகிறார்கள். ஆனால், நாடாளுமன்றத்தில் இதுவரை மத்திய அரசு எந்த உறுதிமொழியும் தரவில்லை. உச்சநீதிமன்றம் விதித்த காலக்கெடு முடிவடைய இன்னும் 5 நாட்களே உள்ளது.
உச்சநீதிமன்ற தீர்ப்பு வெளியான நாளில் இருந்து தற்போது வரை எல்லோருமாக சேர்ந்து ஒரு எண்ணத்தை தமிழக விவசாயிகள், மக்கள் மத்தியில் விதைத்துவிட்டார்கள். அது ஒன்றுமில்லை, இவர்கள் எது அமைய வேண்டும் என்று முழக்கமிட்டு கொண்டிருக்கிறார்களோ, அது நிச்சயம் அமைய வாய்ப்பில்லை என்ற எண்ணத்தை எப்படியோ உருவாக்கிவிட்டார்கள். தீர்ப்பு வெளியான நாளில் இருந்து காவிரி மேலாண்மை வாரியம் அமையாது என்பதற்கான சமிக்ஞைகளை மத்திய அரசு அவ்வவ்போது வெளிப்படுத்திக் கொண்டே இருந்தது. அவர்கள் வைத்த முக்கியமான வாதம், தீர்ப்பில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பதை உறுதியாக சொல்லவில்லை என்பதுதான். ‘ஸ்கீம்’ என்ற வார்த்தை தான் உள்ளது என்றும் சொன்னார்கள். வல்லுநர்கள் பலரும் தீர்ப்பை ஆராய்ந்து பல கருத்துக்களை சொன்னார்கள். ஓட்டுமொத்தமாக பார்க்கையில் தொடர்ந்து குழப்பமே மிஞ்சியது.
உருவாகிறது புதிய அமைப்பு
தற்போது அந்தக் குழப்பத்தை உறுதி செய்யும் வகையில் ஒரு தகவலும் வெளியாகியுள்ளது. காவிரி விவகாரத்தில், மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் 9 பேர் கொண்ட காவிரி மேற்பார்வை ஆணையத்தை உருவாக்க அரசு திட்டமிட்டுள்ளது என்ற தகவல் கசிந்துள்ளது. மத்திய அரசின் நீர்வளத்துறையில் இருக்கும் அதிகாரி ஒருவரே இந்தத் தகவலை கூறியுள்ளதாக தெரிகிறது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றல் அது காவிரி மேலாண்மை வாரியம் என்ற பெயரில் இருக்காது என்பதுதான். மத்திய நீர்வளத்துறை உருவாக்கியுள்ள அந்த வரைவு விரைவில் மத்திய அமைச்சரவைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது. வரைவு அறிக்கை தற்போது, மத்திய சட்ட அமைச்சகத்துக்கும், உள்துறைக்கும் அனுப்பியிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த வரைவு அறிக்கை மீது இரு அமைச்சகங்களின் ஒப்புதல் பெறப்பட்டு, அமைச்சரவை குறிப்பு தயாரிக்கப்படும் என்றும், அந்த அமைச்சரவை குறிப்பு வரும் புதன்கிழமை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, ஒப்புதல் அளிக்கப்படுமென்றும் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக மத்திய நீர்வளத்துறை அதிகாரி தெரிவித்துள்ளதாக சில தகவல்களை ஹிந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. “மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் நீர் பங்கீடு அமைப்பு ஒன்றை உருவாக்குவதை தவிர மத்திய அரசுக்கு வேறு வழியில்லை” என அந்த அதிகாரி கூறியுள்ளார்.
காவிரி மேற்பார்வை ஆணையம் எப்படி இருக்கும்?
காவிரி மேற்பார்வை ஆணையம் குறித்து அந்த அதிகாரி கூறுகையில், “புதிதாக அமைக்கப்படும் ஆணையம், தனிநபர் தலைமையிலான அமைப்பாக இருக்க வாய்ப்புள்ளது, அவர் ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரியாகவோ, தொழில்நுட்ப நிபுணராகவோ இருக்கலாம். காவிரி நீர் தீர்ப்பாயத்தில் பரிந்துரை செய்யப்பட்டுள்ள படி ஒரு தலைமை பொறியியலாளராக அவர் இருக்க வேண்டிய அவசியமில்லை” என்று தெரிவித்திருக்கிறார்.
மேலும், “மத்திய அரசால் நியமிக்கப்பட்ட ஒரு தலைமை அதிகாரி உள்ளிட்ட 5 முழு நேர உறுப்பினர்கள் மற்றும் நான்கு தொழில்நுட்ப வல்லுநர்கள் கொண்ட அமைப்பாக இருக்கலாம். அதில், காவிரியுடன் தொடர்புடைய 4 மாநிலங்களின் பிரநிதிகள் பகுதி நேர உறுப்பினராக இருக்க வாய்ப்புள்ளது” என்று கூறினார்.
காவிரி மேற்பார்வை ஆணையம் எத்தனை நாட்களுக்குள் அமையும்?
காவிரி மேற்பார்வை ஆணையம் அமைப்பதற்கான காலக்கெடு என்ன என்பதை அந்த அதிகாரி கூற மறுத்துவிட்டார். “உச்சநீதிமன்ற தீர்ப்பை மார்ச் 29 ஆம் தேதிக்குள் நடைமுறைப்படுத்தாமல் இருக்கலாம். நீதிமன்ற தீர்ப்பு 2007ம் ஆண்டு வந்திருக்கிறது. தற்போது தான் நடைமுறைபடுத்தப்படுகிறது. உச்சநீதிமன்ற அளித்த காலக்கெடுவுக்குள் அமைப்பை அமைக்காவிட்டால் எதுவும் மாறப்போவதில்லை” என்றார்.
தீர்ப்பாயத்தின்படி காவிரி மேலாண்மை வாரியம் எப்படி அமையும்?
காவிரி மேலாண்மை வாரியத்தில் மத்திய அரசால் நியமிக்கப்பட்ட ஒரு ஆணையர் மற்றும் இரண்டு உறுப்பினர்கள் இருப்பார்கள். தீர்ப்பாயம் வழங்கியுள்ள தீர்ப்பின்படி, நீர் மேலாண்மை துறையில் 20 ஆண்டுகளுக்கு குறையாமல் அனுபவமுள்ள தலைமை பொறியாளர் அந்தஸ்தில் உள்ள வேளாண் பொறியாளர் ஆணையராக இருப்பார். இரண்டு உறுப்பினர்களில் ஒருவர், தலைமை பொறியாளர் அந்தஸ்துக்கு குறையாத வேளாண் பொறியாளராக இருப்பார். மற்றொருவர், வேளாண்துறை நிபுணராக இருப்பார். காவிரி மேலாண்மை வாரியத்தில் உள்ள இரண்டு பகுதி நேர உறுப்பினர்கள் மாநில அரசின் பிரதிநிதிகளாக மத்திய அரசால் நியமிக்கப்படுவார்கள்.
கர்நாடகா, கேரளா என்ன நிலைப்பாடு?
நீர்மின் திட்டத்திற்கு 30 டிஎம்சி நீர் வழங்க வேண்டும் என்ற தங்களது கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்படாதது தொடர்பாக சீராய்வு மனு தாக்கல் செய்ய கேரளா திட்டமிட்டுள்ளது. காவிரி மேலாண்மை வாரியத்தை எதிர்க்கும் கர்நாடக அரசு, தீர்ப்புக்கு எதிராக சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டாம் என்று முடிவு செய்துள்ளது. உச்சநீதிமன்ற தீர்ப்பில் கர்நாடகத்திற்கு கூடுதலாக 14.75 டி.எம்.சி. நீரை ஒதுக்கீடு செய்தது. இருப்பினும், காவிரி மேலாண்மை வாரியம் அமைந்தால், காவிரி அணைகளை கட்டுப்படுத்தும் உரிமை தங்களுக்கு இருக்காது என கர்நாடக அரசு நினைக்கிறது.
காவிரி மேலாண்மை வாரியத்திற்கு பதிலாக காவிரி தீர்ப்பு அமலாக்கக் குழுவை அமைக்க வேண்டும் என்று கர்நாடகா வலியுறுத்துகிறது. மத்திய நீர் வளத்துறை அமைச்சகத்தால் நியமிக்கப்பட்ட 6 உறுப்பினர்கள் அந்த அமலாக்கக் குழுவில் இருப்பார்கள். மேலும், அந்தக் குழுவின் கீழ் இயங்கும் கண்காணிப்பு அமைப்பில் 11 உறுப்பினர்கள் இருப்பார்கள்.
தமிழகம் என்ன செய்யப்போகிறது?
காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்தே தீர வேண்டும் என்று மத்திய அரசுக்கு தமிழ்நாடு அரசு அழுத்தம் கொடுத்து வருகிறது. தமிழக அரசியல் கட்சிகளும் இதை வற்புறுத்தி வருகின்றன. தமிழ்நாடு அரசும் சட்டசபையில் இதுகுறித்து தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியுள்ளது. ஆனால் தற்போது காவிரி மேலாண்மை வாரியம் அமையாது என்ற தகவல் வெளியாகியுள்ளது. அப்படி காவிரி மேலாண்மை வாரியம் அமையவில்லை என்றால், இவ்வளவு நாள் அதிமுக கொடுத்த அழுத்தம் அர்த்தமில்லாமல் போய்விடும். கசிந்துள்ள தகவல் உண்மையாகும் பட்சத்தில் தமிழக அரசு அடுத்த என்ன செய்யப் போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது. அதோடு, மற்ற அரசியல் கட்சிகளும், தமிழக விவசாயிகள் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதையும் யோசிக்க வேண்டும்.
காவிரி மேலாண்மை வாரியம் அல்லாது வேறு எந்தவொரு அமைப்பை உருவாக்கப்பட்டாலும் அதனை தமிழகம் எதிர்ப்பதற்கு நியாயமான காரணம் உண்டு. அதாவாது காவிரி நதிநீர் பங்கீடு விவகாரத்தில் பிரச்னைகள் தீர்க்கும் அளவிற்கு அதிக அதிகாரம் கொண்ட அமைப்பாக காவிரி மேலாண்மை வாரியம் மட்டும் இருக்கும் என்பதுதான்.