சிறப்புக் களம்

"ரஜினி போன்றவர்கள் பொறுப்பாக நடந்துகொள்ள வேண்டும்"- அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கை-முழுவிவரம்

webteam

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக அப்போதைய ஆட்சியர் உட்பட 17 பேர் மீது நடவடிக்கை எடுக்க அருணா ஜெகதீசன் ஆணையம் தமிழக அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.

தூத்துக்குடியில் 2018 ஆம் ஆண்டு மே 22 ஆம் தேதி நடைபெற்ற ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். இது தொடர்பாக விசாரணை நடத்தி வந்த ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலையில் அமைக்கப்பட்ட ஒருநபர் விசாரணை ஆணையம், விசாரணையை முடித்து அது தொடர்பான கோப்புகளை தமிழக அரசிடம் ஒப்படைத்துவிட்டது.

துப்பாக்கிச் சூடு குறித்து எச்சரிக்கை செய்யவில்லை:

துப்பாக்கிச்சூடு நடத்துவதற்கு முன் போராட்டக்காரர்களை Public Addressing System அல்லது நன்றாக கேட்கக்கூடிய மெகா போன் மூலமாக எச்சரிக்கை செய்யவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களின் பின்னந்தலை வழியாக குண்டு துளைத்து முன் வழியாக உள்ளுறுப்புகளை சிதைத்து குண்டு வெளியே வந்திருக்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிலருக்கு முதுகின் பின் பகுதியிலும், குண்டு துளைத்து இதயம் போன்ற முக்கிய பகுதியை சிதைத்து, மார்பின் முன்பகுதி வழியாக வெளியேறியது , ஓடிக்கொண்டிருந்தவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு இருக்கிறது என்பதை காட்டுவதாகவும், மேலும் இடுப்புக்கு கீழே யாரையும் சுடவில்லை என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புத்திசுவாதினம் இல்லாதவர் போல 17 ரவுண்ட் சுட்ட காவலர் சுடலைக்கண்ணு:

மேலும், காவல்துறையை சேர்ந்த சுடலைக்கண்ணு என்பவர் மட்டும் 17 ரவுண்ட் சுட்டிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. ஒரே காவலரை 4 இடங்களில் சுட வைத்ததன் மூலம், அவரை அடியாள் போல காவல்துறை பயன்படுத்தியுள்ளதாகவும் அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. காட்டில் வேட்டையாடுவதுபோல் காவலர் சுடலைக்கண்ணு செயல்பட்டிருப்பதாகவும் சத்தியமங்கலம் பயிற்சியில் கலந்துகொண்டதால் அப்படி சுட வேண்டும் என்ற எண்ணம் சுடலைக்கண்ணுவுக்கு ஏற்பட்டிருக்கலாம் என்றும் ஆணைய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புத்திசுவாதீனம் இல்லாதவர் போல் இப்படி நடந்துகொள்ள ஆசைப்படுவது அனுமதிக்கத்தக்கதல்ல என்றும் ஆணைய அறிக்கையில் இடித்துரைக்கப்பட்டுள்ளது.

ஆட்சியர் உட்பட 17 பேர் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை:

அப்போதைய தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் வெங்கடேஷ் கடமையிலிருந்து தவறியதும், அவரது அலட்சியமான நடவடிக்கையே போராட்டம், துப்பாக்கிச்சூட்டில் முடிய அடித்தளமாக இருந்ததாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சூழலில், அப்போதைய தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மற்றும் தென்மண்டல ஐ.ஜி. சைலேஷ் குமார் யாதவ், நெல்லை சரக டி.ஐ.ஜி, தூத்துக்குடி எஸ்.பி மகேந்திரன் உள்பட 17 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆணையம் அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. மேலும், துப்பாக்கிச்சூட்டில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு 50 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு ரூ.10 லட்சமும் வழங்க அருணா ஜெகதீசன் ஆணையம் பரிந்துரையும் செய்துள்ளது.

ரஜினி போன்ற பிரபலங்கள் பொறுப்பாக நடந்துகொள்ள வேண்டும்:

மேலும் ஆணையத்தின் அறிக்கையில், “சமூக விரோதிகளால் தான் கலவரம் உண்டானது என்று தான் கூறியதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை என ரஜினி கூறினார். ரஜினிகாந்த போன்ற பிரபலம் ஒரு கருத்தைத் தெரிவிக்கும்போது அவர் கூறும் தகவலின் ஆதாரத்தை உறுதி செய்திருக்க வேண்டும். பிரபலங்கள் பொறுப்பாக நடந்துகொள்ள வேண்டும்” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு சந்தோஷம் இல்லை - ஸ்னோலின் தாயார்:

இதுகுறித்து துப்பாக்கி சூட்டில் பலியான ஸ்னோலின் தாயார் வனிதா கூறுகையில், “துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 17 போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பரிந்துரை செய்யப்பட்டுள்ளது வரவேற்கதக்கது என்றாலும் அதில் முழுசந்தோசம் இல்லை. ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக அகற்ற வேண்டும் என்பதற்காகத்தான் போராடினோம். ஆதலால் ஆலையை நிரந்தரமாக அகற்ற வேண்டும்” என்றார்.

கொலை வழக்கு பதிவு செய்க - ஸ்டெர்லைட் எதிர்ப்புக்குழு:

ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்குழுவை சார்ந்த கெபிஸ்டன் கூறுகையில், “துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் தொடர்புடைய 17 போலீசார் மீது பணிநீக்கம் செய்து கொலை வழக்குப்பதிவு செய்ய வேண்டும். தேர்தல் வாக்குறுதியில் திமுக கூறியது போல் ஆலையை நிரந்தரமாக அகற்ற வேண்டும். துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும்” என்றார்.

- ரமேஷ், ராஜன், கார்த்திகா, ச.முத்துகிருஷ்ணன்.