காவிரி ஆற்று நீர்ச் சிக்கலுக்கு தீர்வு காண்பதற்காக அமைக்கப்பட்ட நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை எதிர்த்து மாநிலங்கள் தொடர்ந்த வழக்கில் (16/02/2018) தீர்ப்பளித்திருக்கிறது உச்ச நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு.
தமிழகத்திற்கு ஆண்டொன்றிற்கு 192 டி.எம்.சி.தண்ணீரை கர்நாடகம் வழங்கிட வேண்டும் என்று நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு சொல்லிய நிலையில், தற்போது உச்ச நீதிமன்றம் 177.25 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும் என்று அளித்துள்ள தீர்ப்பு டெல்டா விவசாயிகளுக்கு அதிர்ச்சியையே தந்துள்ளது. தமிழகம் இழந்திருக்கும் 14.75 டி.எம்.சி தண்ணீரால் சில லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிப்பைச் சந்திக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்த இடத்தில் இந்தத் தீர்ப்பு சில கேள்விகளையும் எழுப்பியுள்ளது.
1. 264 டி.எம்.சி கேட்ட தமிழகத்திற்கு 192 டி.எம்.சி தண்ணீர் என்று சொல்லப்பட்ட நடுவர் மன்றத் தீர்ப்பே தமிழகத்திற்கு பாதகமானது என்ற நிலையில், தற்போது அது 177.25 டி.எம்.சி ஆக குறைக்கப்பட்டுள்ளதால் தமிழகத்திற்கு ஏற்படப்போகும் இழப்புகள் என்னென்ன
2. தற்போது தீர்ப்பளிக்கப்பட்டுள்ள 177.25 டி. எம்.சி தண்ணீரையாவது கர்நாடகம் உறுதியாக தமிழகத்திற்கு தருமா என்ற கேள்வி தொடர்ந்து எழுப்பப்பட்டுக் கொண்டே இருக்கிறது ?
3. நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் படி கர்நாடக அரசு தமிழகத்திற்கான தண்ணீரைத் தரவில்லை எனில் அதைக் கண்காணிக்க வேண்டிய பொறுப்பும், சட்ட ரீதியில் தண்டிக்க வேண்டிய பொறுப்பும், தமிழகத்திற்கான இழப்பைப் பெற்றுத் தர வேண்டிய பொறுப்பும் யாருடையது ?
4. காவிரி மேலாண்மை வாரியம் என்ற வார்த்தையை நேரடியாகக் குறிப்பிடாததன் காரணமாக காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் மேலும் தாமதம் ஏற்படுமோ என்ற அச்சத்திற்கான விடை என்ன ?
5. சட்ட ரீதியாக தீர்ப்பாயம் முன் வைத்த திட்டங்களை ஆறு வாரங்களுக்குள் மத்திய அரசு செயல்படுத்திட வேண்டும் என்பது காவிரி மேலாண்மை வாரியத்தைத்தான் குறிக்கிறது எனில், மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்திடுமா ?
6. காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கும் அதிகாரம் நாடாளுமன்றத்திற்குத்தான் என்று ஏற்கனவே மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் சொல்லி விட்ட நிலையில் , மேலாண்மை வாரியம் அமைக்கப்படாமல் கர்நாடகம் திறந்து விடும் நீரின் அளவை யார் ஆய்வு செய்வது ?
7.பாசனப்பரப்பை பெருக்கக்கூடாது என்ற நடுவர் மன்றத்தின் தீர்ப்பிற்கு மாறாக கர்நாடகம் தனது பாசனப்பரப்பை அதிகரித்துள்ளதாக எழுந்துள்ள வாதங்கள் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளனவா ?
8. இந்தத் தீர்ப்பின் மீது மேல் முறையீடு செய்ய முடியாது என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ள அதே சமயம், இந்தத் தீர்ப்பு 15 ஆண்டுகளுக்குப் பொருந்தும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. எனில் 15 ஆண்டுகள் கழித்து ஏற்படப்போகும் காலநிலை மாற்றம் இயற்கை மாற்றத்திற்கு ஏற்றவாறு நதி நீரைப் பங்கிட்டுக் கொள்வதில் சிக்கல் ஏற்பட்டால் அதைத் தீர்ப்பது எவ்வாறு ?
9. மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டால் அந்த ஆணையமே இதுபோன்ற சிக்கல்களுக்கு 15 ஆண்டுகளுக்குப் பிறகும் அதன் பிறக வரும் காலங்களுக்கும் தீர்வு காண வேண்டும் எனில், உச்ச நீதிமன்றம் விதித்துள்ள ஆறு வார கெடுவுக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைப்பதில் மத்திய அரசுக்கு என்ன சிக்கல்கள் இருக்கின்றன ?
10. இந்தியாவின் இன்னபிற மாநிலங்களுக்கிடையில் நிலவும் நதிநீர் பிரச்னைகள் அனைத்தையும் ஒன்றிணைத்து ஒரே மேலாண்மை வாரியத்தை அமைத்திட மத்திய அரசு முயற்சிப்பதாக வரும் தகவல்கள் தமிழகத்திற்கு எந்த அளவிற்கு சாதகமானவை ?
எழுப்பப்பட்டுள்ள இதுபோன்ற கேள்விகளுக்கு பதில் தர வேண்டிய பொறுப்பு மைய அரசுக்குத்தான் அதிகமாக இருக்கிறதெனில், மத்திய அரசு இதில் மவுனம் சாதிக்கிறதா என்ற கேள்வியும், காங்கிரஸ் உள்ளிட்ட தேசியக் கட்சிகள் இதுபோன்ற பிரச்னைகளில் மாநிலங்களுக்கு ஏற்றவாறு தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்வது தேர்தல் அரசியலுக்காகத்தான் எனில், மாநிலங்களுக்கிடையில் எழும் இதுபோன்ற பிரச்னைகளுக்கு நிரந்தரத் தீர்வு என்ன என்ற கேள்விகள் விடையறியும் ஆவலோடு விடையாறியாமலேயே தொக்கி நிற்கின்றன.