சிறப்புக் களம்

சிப்ஸ் சாப்பிடுவதை நிறுத்தமுடியவில்லையா? - என்ன சொல்கின்றனர் நிபுணர்கள்

Sinekadhara

நொறுக்குத்தீனி அதிகம் சாப்பிடுவது இப்போது பொதுவாக நீறையப்பேரிடம் காணப்படக்கூடிய பழக்கங்களில் ஒன்று. சிப்ஸ், பிஸ்கட், சாக்லெட் என எந்த பாக்கெட்டை பிரித்தாலும் முழுவதும் சாப்பிடமால் பாக்கெட்டை கீழே வைக்க மனம் வருவதில்லை. சிலருக்கு ஸ்நாக்ஸின் மீதான ஈர்ப்பு ஒரு பாக்கெட், இரண்டு பாக்கெட் என நீண்டுகொண்டே செல்லும். ஆனால் அதீத ஈர்ப்பு எதனால் ஏற்படுகிறது என்று தெரியுமா? இதுகுறித்து ஜப்பானிய ஆராய்ச்சியாளர்கள் ஆய்வில் ஈடுபட்டனர். அதில், ஒரு மரபணு தான் சாப்பிடு, மேலும் சாப்பிடு என்று மூளையை தூண்டுகிறதாம். CREB-Regulated Transcription Coactivator 1 (CRTC1) என்று சொல்லப்படுகிற மரபணுவானது மனிதர்களின் உடல் பருமனுடன் தொடர்புடையது.

மூளையில் உள்ள அனைத்து நியூரான்களிலும் CRTC1 வெளிப்படுகிறது என்கின்றனர் நிபுணர்கள். இருப்பினும், உடல் பருமன் அபாயத்தை குறைப்பது அவரவர் கையிலிருக்கிறது என்கின்றது FASEB இதழ்.

CRTC1 மற்றும் உடல் பருமன் ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பை அறிந்துகொள்ள, ஒசாகா மெட்ரோபாலிட்டன் பல்கலைக்கழகத்தின் வல்லுநர்கள் மெலனோகார்டின்-4 ஏற்பியை (MC4R) வெளிப்படுத்தும் நியூரான்களை ஆய்வுக்கு உட்படுத்தினர். அதிலிருந்து, MC4R-எக்ஸ்பிரஸ்ஸிங் நியூரான்களில் உள்ள CRTC1 வெளிப்பாடானது உடல் பருமனுக்கு காரணமானது என்று கருதுகின்றனர். அதிக கலோரி உணவுகளான சர்க்கரை, கொழுப்பு மற்றும் எண்ணெய் போன்றவை சுவையை கொடுத்தாலும், அவை அதிகமாக சாப்பிடத் தூண்டுவதுடன், உடல் பருமனுக்கும் வழிவகுக்கிறது.

அதிகப்படியான உணவுப்பழக்கத்தை கட்டுப்படுத்துவது எப்படி?

அதிகப்படியான உணவு உண்ணுதல் தீங்கு விளைவிக்காததுபோல் இருந்தாலும், அது பல்வேறு உடல்நல பிரச்னைகளுடன் தொடர்புடையது. அதிகம் உண்ணுதல் எடையை அதிகரிக்கிறது, ரத்த அழுத்தம் மற்றும் கொழுப்பு அளவில் ஏற்ற தாழ்வுகளை ஏற்படுத்துகிறது மற்றும் டைப் 2 டயாபட்டில்ஸ் அபாயத்தை அதிகரிக்கிறது.

அதீத உணவு சாப்பிடுவதை கீழ்க்கண்ட வழிகளை பின்பற்றுவதன்மூலம் குறைக்கலாம்.

1. மூன்றுவேளை உணவையும் தவிர்க்கக்கூடாது
2. மெதுவாக சாப்பிடவும்
3. குறைந்தது 8 தம்ளர் தண்ணீர் தினசரி குடிக்கவும். எப்போதும் நீரேற்றத்துடன் இருக்கவும்.
4. அதிக நார்ச்சத்து உணவுகளை உண்ணவும்.
5. ஆரோக்கியமான புரதங்களை சேர்த்துக்கொள்ளவும்.
6. உண்ணும் உணவின் அளவை கருத்தில்கொள்ளவும்
7. உணவை கொஞ்சம் கொஞ்சமாக பிரித்து உண்ணவும்.
8. பசிக்கும்போது மட்டும் சாப்பிடவும்.