new born learning new letters
new born learning new letters DALL·E
சிறப்புக் களம்

நம்புங்கள், குழந்தையாய் இருக்கும்போதே சொற்களை உருவாக்கினீர்கள் !

மகுடேசுவரன்

உறவுப் பெயர்களை அடுத்து குழந்தை அறியும் சொற்கள் யாவும் உணவுப் பொருள்களும் இயற்கைப் பொருள்களுமாம். நிலாவைக் காட்டிச் சோறூட்டும் காட்சி நினைவுக்கு வரவேண்டும். இதற்கிடையே நாவசைத்து ஒலியெழுப்பும் ஆற்றல் கைவரப்பெற்றதும் பொருளற்றுக் குழறுகிறது. தொட்டிலில் தூங்கும் குழந்தை விழித்தவுடன் தானாக எதையோ பேசும் முயற்சியில் ஈடுபடுகிறது. அதன் மழலையைக் கேட்டு ஓடியெடுக்கிறோம். பிறந்தது முதல் ஒரு குழந்தை தொடர்ந்து செய்யும் செயல் கற்றல்தான். கண்ணுக்குத் தெரிவனவற்றையெல்லாம் தீரா விருப்போடு பார்க்கிறது. காதில் படுவனவற்றையெல்லாம் மிக இயல்பான ஆர்வத்துடன் செவிமடுக்கிறது. அதனால்தான் ஒரு தாலாட்டுப் பாட்டு குழந்தையைத் தூங்க வைத்துவிடுகிறது. அன்பின் தீண்டல்கள் அதற்கு இனிதாய் விளங்குகின்றன. பாற்சுவையை விரும்புகிறது. தன் புலன்களின் வழியாக உலகைப் பெறுகிறது அக்குழந்தை.

இளையோர் மொழிக்களம்

குழந்தையின் செவிப்புலனில் படும் ஒலிகள் சொற்களாகப் பிறப்பெடுக்கும் ஓரிடம் உள்ளது. வழக்கமான தொடர் ஒலிகள் ஒருவகையாகக் குழந்தைக்குப் புலப்படும். குயில் கூவுகிறது என்றால் அது நீள்தொடரொலி. மரங்கொத்தி மரத்தைக் கொத்துவது நிறுத்தொலி. தாலாட்டுப் பாடல்களில் இவ்விரண்டும் மாறி மாறி அமையலாம். தாலாட்டும் அன்னை ‘லுலுலுலுலுலுலாயி’ என்று குலவையிடுவது குழந்தையின் செவிகூர்திறனை ஈர்ப்பதாகும். அவ்வொலிகள் குழந்தைக்குள் எதனையோ தூண்டுகின்றன. நீட்டியும் குறுக்கியும் நிறுத்தியும் தொடர்ந்தும் ஒலிக்கும் ஒலிகள் குழந்தையின் ஒலியுணர் திறப்பாட்டைத் திறந்துவிடுகின்றன.

கற்றலின் கேட்டலே நன்று என்பார்கள். அந்தக் கூரறிவு பெறும் திறமை குழந்தையின் இந்தக் கவனிப்புச் செயல்களிலிருந்து தொடங்குகிறது. குழந்தைக்குக் காட்சி வாய்ப்பு மட்டுப்பட்டது. ஆனால், செவியுலகம் ஓயாது இயங்குகிறது. புதிய புதிய ஒலிகளைக் கேட்டு வளர்கிறது.

AI image of newborn listening to music

குழந்தையோடு ஒலிகள் கொள்ளும் தொடர்புதான் அதன் மொழியுலகமாக விரியப் போகிறது. அது செவிமடுக்கும் பெரும்பான்மையான ஒலிகளை இயற்கையே எழுப்புகிறது. ஆனால், இக்காலத்தில் இயற்கை ஒலிகள் குறைந்துபோய்விட்டன. அதற்காகக் குழந்தைக்கு இயற்கையோடு உள்ள தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டது எனக் கூற இயலாது. கட்டுமானக் காட்டிலும் எங்கோ ஒரு பறவை பாடிக்கொண்டுதான் இருக்கிறது.

தான் என்ன கேட்கிறதோ அதனைப்போல் ஒலியெழுப்பவே குழந்தை முயல்கிறது. சிரித்துக் காட்டினால் சிரிக்கப் பார்க்கிறது. பேசிக் காட்டினால் அதன் முதல் அசையை ஒலிக்க வாயெடுக்கிறது. தன் அருகிலுள்ளோரின் வாயசைவுகளை ஊன்றிப் பார்க்கிறது. ஏதேனும் ஒரு வகையில் தன்னை வெளிப்படுத்துவதற்காக ஒலியெழுப்பப் பழகிவிட்டது. மற்றபடி இயல்பாக அதனால் அழ முடியும்.

உறவுப் பெயர்களை அடுத்து குழந்தை அறியும் சொற்கள் யாவும் உணவுப் பொருள்களும் இயற்கைப் பொருள்களுமாம். நிலாவைக் காட்டிச் சோறூட்டும் காட்சி நினைவுக்கு வரவேண்டும். இதற்கிடையே நாவசைத்து ஒலியெழுப்பும் ஆற்றல் கைவரப்பெற்றதும் பொருளற்றுக் குழறுகிறது. தொட்டிலில் தூங்கும் குழந்தை விழித்தவுடன் தானாக எதையோ பேசும் முயற்சியில் ஈடுபடுகிறது. அதன் மழலையைக் கேட்டு ஓடியெடுக்கிறோம்

சொற்களை அறியாமல் பொருளற்றுக் குழறுகிற ஒரு காலகட்டம்தான் குழந்தையின் மொழி மலரும் பொற்பொழுது. உங்கள் குழந்தைப் பருவம் உங்களுக்கு நினைவிருக்கலாம். அல்லது உங்கள் குழந்தைப் பருவச் செயல்களை யாரேனும் நினைவுபடுத்திக் கூறலாம். அப்போது நீங்கள் சொன்ன புதிய சொல்லை வேடிக்கையாகச் சொல்வார்கள் அவர்கள்.

நான் குழந்தையாக இருந்தபோது சொல்போல் முயன்ற சில மழலைத் தொடர்களை என் தாயார் கூறியதைக் கேட்டிருக்கிறேன். அவற்றைச் சொன்ன பொழுதுகள் எனக்கும் மங்கலாய் நினைவுள்ளன. குளம்பி குடிக்கும் குவளையை நான் ‘கட்டங்கெ’ என்று சொல்லிக்கொண்டிருந்தேனாம். எனக்கு இரண்டு குவளையில் ஊற்ற வேண்டும் என்பதற்காக ‘டண்டு கட்டங்கெ’ என்பேனாம். அடுத்து உயரமாக உள்ள இடத்தைக் குறிப்பிட ‘டொய்யங்கே’ என்பேனாம். அப்படிச் சொல்லும்போது அவ்வுயரப் பகுதியை நோக்கிச் சுட்டியவாறு என் கைகள் நீண்டிருக்குமாம்.

ஊர்ப்புற வாழ்வில் இருந்தவர்க்கு நினைவிருக்கும், வீட்டுக் கூரையிடப்பட்ட மரக்கைகளின் இரு முனைக்கும் ஒரு கயிற்றைக் குறுக்காகக் கட்டி அதில்தான் துவைத்து மடித்த துணிகளைத் தொங்கப் போடுவார்கள். ‘துணித் தூக்கு’ என்று அதற்குப் பெயர். எழுபதுகளின் பெண்டிர்க்கு துணித் தூக்கிலிருந்து நிலைப்பேழைக்கு இடம்பெயர்வதுதான் பெருங்கனவு. என் தாயாரும் அத்தகைய கனவாளர். அம்மா கட்டியிருந்த சேலை எங்கே இருக்கு என்று என்னைக் கொஞ்சிக் கேட்கும்போது அந்தத் தூக்கினைக் காட்டி ‘டொய்யங்கே’ என்பேனாம். வீட்டிற்கு வந்தோரிடம் இம்மழலைச் சொற்களைச் சொல்ல வைத்துச் சிரிப்பது தவறாது. கட்டங்கெ, டொய்யங்கெ என்று இருந்த நான்தான் இந்தப் பேச்சு பேசுகிறேனாம். தாயார் போகிற போக்கில் குத்திச் சொல்லுவார். நீங்களும் இதனை எண்ணிச் சிரிக்க இடமுண்டு.

இதனை இங்கே குறிப்பிடுவதற்குக் காரணம் இருக்கிறது. ஒவ்வொருவரின் குழந்தைப் பருவத்திலும் ஒரு சொல்லுலகம் முகிழ்த்திருக்கும். அவற்றில் உதிர்த்த மழலைச் சொற்கள் அவர்களே உருவாக்கியவை. வாயசைத்து ஒலிக்கும் ஒலிகளின் இளமைத் தோன்றல்கள். ஆழ்ந்து எண்ணினால் அவற்றில் சிலவற்றை உங்களால் நினைவுபடுத்த இயலும். அன்றேல் பெற்றோர் உறவினர்களால் குறிப்பிட முடியும்.

ஒவ்வொருவரும் பொதுப்படையான மொழிக்கு வருவதற்கு முன்னர் உலவிய தனி மொழியுலகம் அதுதான். ஒன்றைச் சொல்கிறோம், அது ஒன்றைக் குறிக்கிறது, குறிக்க வேண்டும் என்கின்ற பேருலகினை அடைவதற்கான முதல் எட்டுவைப்பு.

தொடரும்...