சிறப்புக் களம்

'ஆப்' இன்றி அமையா உலகு 11: Bynge - தமிழில் வாசிப்பை சுவாசமாக கொண்டோருக்கான செயலி!

EllusamyKarthik

வாசிப்பை தங்களது சுவாசமாக கொண்டுள்ள தமிழ் வாசகர்களுக்கான செயலிதான் Bynge மொபைல் ஃபோன் அப்ளிகேஷன். இந்த செயலி குறித்து இந்த அத்தியாயத்தில் சற்றே விரிவாகப் பார்ப்போம்.

கொரோனா பெருந்தொற்று அச்சு ஊடகத்தை ரொம்பவே முடக்கிப் போட்டுவிட்டதாக ஆய்வு முடிவுகள் சொல்கின்றன. இத்தகைய இக்கட்டான சூழலில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் துணையுடன் இன்றைய ஸ்க்ரோலிங் யுகத்தில் வசிக்கும் வாசகர்களை கவரும் முயற்சிகளை பல்வேறு நிறுவனங்கள் மேற்கொண்டு வருகின்றன. இதில், சில நிறுவனங்கள் இலவசமாகவும், சில நிறுவனங்கள் சந்தா செலுத்தும் பயனர்களுக்கு மட்டுமே அக்செஸ் என்ற ரீதியிலும் இயங்குகின்றன. அப்படிப்பட்ட முயற்சியைத்தான் முன்னெடுத்துள்ளது Bynge. அதுவும் தனது சேவையை தன் பயனர்களுக்கு இலவசமாக கொடுத்து வருகிறது. 

இ-காமர்ஸ் நிறுவனங்களில் உலக அளவில் பிரபலமாக உள்ள நிறுவனங்கள் கூட சில புத்தகங்களை மட்டும்தான் இலவசமாக தரவிறக்கம் (டவுன்லோட்) செய்து படிக்க அனுமதிக்கிறது. ஆனால், இந்த Bynge அப்ளிகேஷன் அனைத்தையும் இலவசமாக தன் பயனர்களுக்கு அளித்து வருகிறது. சென்னையை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் புத்தக வெளியீட்டு நிறுவனமான 'நோஷன் பிரஸ்' பதிப்பகம்தான் Bynge செயலியின் தாய் நிறுவனம். 

இந்த செயலியை பயன்படுத்தி என்னென்ன வாசிக்கலாம்?

"BYNGE என்பது தொடர்களுக்காக பிரத்யேகமாக தமிழில் ஆரம்பிக்கப்பட்டிருக்கும் செயலி. இதில் நீங்கள் இந்தியா முழுவதிலும் உள்ள பிரபல மற்றும் புதிய எழுத்தாளர்களின் கதைகளையும், எண்ணங்களையும் படித்து ரசிக்கலாம்" என்பது Bynge செயலி தங்களைக் குறித்த தன்னிலை விளக்கத்தில் விவரித்துள்ளது. 

அதாவது, தமிழில் மிகவும் பிரபலமாக அறியப்படும் எழுத்தாளர்களான பெருமாள்முருகன், இந்திரா செளந்தர்ராஜன், பட்டுக்கோட்டை பிரபாகர், மனுஷ்ய புத்திரன், சாரு நிவேதிதா, ராஜேஷ்குமார், அ.வெண்ணிலா முதலானோரின் படைப்புகளை Bynge செயலியில் வாசிக்கலாம். 

காலம் சென்ற எழுத்தாளர்களான கல்கி, வடுவூர் துரைசாமி, உ.வே.சாமிநாதையர், சாவி, நா.பார்த்தசாரதி முதலானோரின் படைப்புகளையும் வாசிக்கலாம். அதேபோல வளர்ந்து வரும் எழுத்தாளர்களின் படைப்புகளையும் படித்துப் பார்க்க வழிவகுத்துக் கொடுக்கிறது இந்த செயலி. 

சரித்திரம், த்ரில்லர், யதார்த்தம், சமூகக் கதைகள், நகைச்சுவை, அமானுஷ்யம், Bynge ஒரிஜினல், காதல் கதைகள், பெண்ணியக் கதைகள், டிரெண்டிங் கதைகள் என பல்வேறு ஜானர்களில் வெளியாகி உள்ள தொடர்கள் மட்டுமல்லாது சிறுகதைகளையும் இந்த செயலியில் வாசித்து மகிழலாம். கல்கியின் 'பொன்னியின் செல்வன்' மற்றும் அவரது சிறுகதைகளையும் இந்த செயலியை கொண்டு படிக்கலாம். 

படித்த பின் கதைகளை விவாதிக்கவும், வாசகர்கள் தங்கள் கருத்தை தெரிவிக்கவும் இந்த செயலி அனுமதிக்கிறது. அதோடு வாசகர்களை வெறுமனே வாசகர்களாக மட்டுமே நிறுத்தி விடாமல் அவர்களது படைப்புகளையும் வெளியிட இந்த செயலி உதவுகிறது. இதற்கு வாசகர்கள் 'எழுத' என உள்ள டேப் மெனுவை சொடுக்கி அதில் கேட்கப்படும் தகவல்களை கொடுத்து விண்ணப்பிக்கலாம். அதனை பரிசீலனை செய்யும் Bynge குழு அது குறித்த தகவலை சில நாட்களில் தெரிவிக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால் வாசிப்பை 'கொலப்பசியாக' கொண்டிருக்கும் வாசகர்களுக்கு செமயான விருந்து கொடுக்கிறது இந்த செயலி. பயனர்கள் தாங்கள் நினைத்த நேரத்தில் இந்த செயலியில் உள்ள கதைகளை படித்து மகிழலாம்.  

இந்த செயலியை பயன்படுத்துவது எப்படி?

ஆண்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் iOS என இரண்டு விதமான இயங்கு தளம் கொண்ட ஃபோன்களிலும் இந்த செயலியை இலவசமாக இன்ஸ்டால் செய்து பயன்படுத்தலாம். பயனர்கள் வேண்டுமானால் தங்களது சுய விவரங்களை கொடுத்து லாக்-இன் செய்து கொண்டு பயன்படுத்தலாம். இதன்மூலம் தங்களுக்கு விருப்பமான நூல்களை 'என் நூலகம்' என்ற மெனுவின் கீழ் கொண்டு வரலாம். 

இப்போதைக்கு இந்த செயலியின் மூலம் தமிழ் மற்றும் இந்தி மொழி படைப்புகளை வாசகர்கள் படிக்கலாம். எதிர்வரும் நாட்களில் இந்தியாவின் மற்ற மாநில மொழிகளிலும் Bynge செயலி தனது சேவை கரங்களை விரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Made with ❤️ in Bharat என்ற வாசகத்துடன் Bynge தளத்தின் முகப்பு பக்கம் முற்று பெறுகிறது.