சிறப்புக் களம்

காடுகளின் காப்பான்: பட்டாம்பூச்சிகள், வண்ணத்துப்பூச்சிகள்... வேறுபாடு என்ன?

PT WEB

கவிதை எழுதும் கவிஞர்கள் ஒருமுறையாவது பட்டாம்பூச்சிகளின் அழகை வர்ணித்து கவிதை எழுதிவிடுவார்கள். ஏழு வண்ண நிறங்கள் மட்டுமில்லாமல் பல நிறங்களை ஒரே இனத்தில் காண வேண்டும் என்றால், கட்டாயம் பட்டாம்பூச்சிகளை பார்க்கலாம். ஒரு காட்டில் பட்டாம்பூச்சிகளின் வரத்தும், அதன் பெருக்கமும் அதிகமாக இருந்தால் அந்த இடம் வளமானதாக இருப்பதாக அர்த்தம்.

மலர்களுக்கு நறுமணம் கொடுத்து தேனை எடுத்து வாழ்கிறது அந்த சின்னஞ்சிறு இனங்கள். இவை அழகின் மறு உருவம் எனலாம். சட்டென்று பறந்து நமது கண்களில் விளையாடக் கூடியவை. முட்டையில் இருந்து குடம்பி நிலையில் புழுவாக மாறுகிறது. பிறகு கூட்டுப் புழு என்ற நிலைக்கு சென்று சிறிது காலங்களில் அழகான பட்டாம்பூச்சியாக இந்த உலகத்திற்கு திரும்புகிறது. இவை பொதுவாக விஷம் உள்ள செடிகள் மீதுதான் முட்டைகளை இடுகின்றன. அந்த தாவரத்தின் இலைகளை உணவாக எடுத்துக்கொள்வதால் விஷத்தன்மை வாய்ந்ததாக காணப்படும். இதன் மூலம் முதிர்ந்த பட்டாம்பூச்சியின் உடலில் விஷத்தன்மை குறைவாக காணப்படும். இவற்றில் மிகப் பெரிய பட்டாம்பூச்சி பப்புவா நியூகினி நாட்டில் வாழும் குயின் அலெக்ஸ்சாண்ட்ரா ஆகும்.

இதன் இறக்கைகள் விரித்திருக்கும் பொழுது நீளம் 28 செ.மீ நீளம் ஆகும். மிகவும் சிறிய பட்டாம்பூச்சி அமெரிக்காவில் வாழும் மேற்கு குட்டிநீலம் ஆகும். இதன் இறக்கைகளின் நீளம் 1 செ.மீ ஆகும். வலசை செல்லும் பட்டாம்பூச்சிகள் வியப்பூட்டும் விதமாக ஒரு நாளைக்கு 3000 கிலோ மீட்டரை எளிதாக கடந்து விடுகிறது.

பட்டாம்பூச்சிக்கும் மற்றும் வண்ணத்துப்பூச்சிக்கும் வேறுபாடுகள் உள்ளது. நாம் பார்க்கும் அனைத்தும் பட்டாம் பூச்சிகளும் அல்ல; வண்ணத்துப்பூச்சிகளும் அல்ல. இவை இரண்டும் செதிலிறகுகள் வகை பூச்சியினங்கள் ஆகும். இந்த இனத்தில் இதுவரை சுமார் 2,00,000 வகை பூச்சிகள் இருக்கின்றன. இதில் 18,000 மட்டுமே வண்ணத்துப்பூச்சிகள் மற்றவையெல்லாம் பட்டாம்பூச்சிகளே!

இறகுகளில் வானவில் வண்ணங்களை கடன் வாங்கி பகலில் பறப்பவை வண்ணத்துப்பூச்சிகள். இவற்றில் சில இறக்கைகளை மடக்கி உடலின் மேற்புறத்தில் வைத்துக்கொள்ளும். வெயில் மற்றும் கோடை காலங்களில் இறக்கைகளை விரித்துக்கொண்டு பறக்கும்போது அவை பார்ப்பதற்கு இரு கண்கள் போதாது. இவற்றின் உணர் நீட்சிகள் மெலிதாக நீண்டு முனையில் சற்று தடித்தும் காணப்படுகிறது. அதேநேரம் பெரும்பாலான பட்டாம்பூச்சிகள் இரவு நேரத்திலும் சுற்றி திரிபவை. அவற்றை இரவாடிகள் என்றும் அழைப்பார்கள். இவை அமரும்போது தனது இறக்கைகளை கிடைமட்டமாக விரித்தும், பறக்கும்போது கொக்கி போன்ற அமைப்பு பின் இறக்கைகளை பிடித்துக்கொள்ளும் வகையில் அமைந்திருக்கும்.

மனிதர்கள் செய்ய வேண்டியவை: தமிழகத்தில் உள்ள மலைத்தொடர்களில் நிலவும் காலநிலை 324 வகையான பட்டாம்பூச்சிகளுக்கு தாயகமாக விளங்குகிறது. சுற்றுச்சூழலில் பெரிதும் உதவியாக உள்ள பட்டாம்பூச்சிகள் தாவரங்களுக்கிடையே உள்ள பரிமாணத்தை ஒன்றோடு ஒன்று இணைக்கிறது. தாவரங்களின் மகரந்த சேர்க்கைக்கு பெரிது உதவியாக இருந்து, அடர்ந்த காட்டினை உருவாக்கும் சுற்றுச்சூழல் காரணிகள் அவை. ஆனால், சில காலமாக அவற்றின் வாழ்விடம் அழிப்பு, அதிகளவு பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லி மருந்து, மக்கள் தொகை, மனித இடர்பாடுகள் என பல்வேறு பிரச்னைகளால் பட்டாம்பூச்சிகள் எண்ணிக்கை குறைந்து வருவதாக ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.

வெகுவாக குறைந்து வரும் பட்டாம்பூச்சிகளின் எண்ணிக்கை மனித குலத்திற்கு எதிரானவை ஆகும். உயிர் வாழ சூழ்நிலை அழிக்கப்பட்டதன் நோக்கம், அவற்றின் வாழ்க்கை போராட்டமாக மாறி இருக்கிறது. இப்போது உள்ள சுற்றுச்சூழல் சீர்கேடுகளால் காலநிலையும், வானிலையும் கணிக்க முடியாத இடத்தில் உள்ளோம். எப்போது மழை பெய்யும், எப்போது அதிக வெயில் அடிக்கும் என கண்டறியும் திறனை இழந்து வருகிறோம். இதற்கு முக்கிய காரணம் காலநிலை மாற்றமே கூறப்படுகிறது. வனவிலங்குகளை பாதுகாப்பது மட்டும் நம் கடமையல்ல, சின்ன சின்ன உயிரிகளை காப்பாற்றவதும் நம் கடமையே ஆகும்.

கட்டுரை: ஆர்.கெளசல்யா | படங்கள் - உறுதுணை: TNBS