சிறப்புக் களம்

காந்தி காலத்தில் இருந்து தொடங்கிய கருப்புக் கொடி போராட்டம்: ஒரு கோபேக் ஸ்டோரி

காந்தி காலத்தில் இருந்து தொடங்கிய கருப்புக் கொடி போராட்டம்: ஒரு கோபேக் ஸ்டோரி

webteam

கருப்புச்சட்டை, கருப்பு பலூன் போராட்டத்தில் மும்முரமாக ஈடுப்பட்டு வருகிறது தமிழகம். மோடியின் வருகைக்கு எதிராக கருப்பு நிறம் ஒரு போராட்ட வடிவமாக தலை தூக்கியுள்ளது. இதற்கு முன்பு கருணாநிதி அக்டோபர் 2012 அன்று ஒரு கருப்புச்சட்டை போராட்டத்தை தொடங்கினார். ஜெயலலிதாவின் ஆட்சிக்கு எதிராக அந்த அஸ்திரத்தை அவர் கையில் எடுத்திருந்தார். “தமிழகத்தில் நடைபெறும் அதிமுக அரசின் அராஜகப் போக்கை கண்டித்து, இனிமேல் கருப்புச்சட்டையே அணிவேன்” என்று அவர் சபதம் ஏற்றிருந்தார். அன்று அவர் வெளியிட்ட அறிக்கையில் சில விஷயங்களை சுட்டிக் காட்டி அதற்காகவே நான் கருப்புச் சட்டை உடுத்த முடிவெடுத்திருக்கிறேன் என்றார். திமுக தலைவர் கருணாநிதியின் அறிக்கை சில விஷயங்களை வலியுறுத்திருந்தார். 

“கடுமையான மின் தடை, குடிநீர் பஞ்சம், சட்டம் ஒழுங்கு சீர்குலைவு உள்ளிட்ட பல்வேறு கொடுமைகளை எல்லாம் சுட்டிக்காட்டி ஆளுங்கட்சியின் அராஜகப் போக்கைக் கண்டித்து, அமைதியாக அறவழியில் கருப்பு உடை அணிந்து மனிதச்சங்கிலி அணிவகுப்பு நடத்தப்போகிறோம் என்று கழக செயற்குழுவிலே முடிவெடுத்துள்ளோம். அதன் அடையாளமாகவே நான் கருப்புச் சட்டை அணிந்துள்ளேன்” என்றார். ஆனால் திமுக நடத்துவதாக இருந்த கருப்புச் சட்டை மனிதசங்கிலிக்கு அனுமதி தரப்படவில்லை என்றும் வருத்தம் தெரிவித்தார். மேலும் மலரும் நினைவாக அவர் தனது திக தொடக்கக் கால சம்பவங்களை பகிர்ந்து கொண்டார். 

“திராவிட விடுதலைப்படை என்பதாக ஒரு தொண்டர் படை திராவிடர் கழகத்துக்கு தேவை என்று திருச்சி மாநாட்டில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பெரியார் ஈரோடு திரும்பியதும், அதைப்பற்றி மேலும் சிந்தித்து, 1945 செப்டம்பர் 29ம் நாள் "குடிஅரசு'' இதழில், கருப்புச் சட்டைப் படை அமைப்பு என்பதாக ஓர் அறிவிப்பு வெளியிட்டார். ஈ.வி.கே.சம்பத், கவிஞர் கருணானந்தம் ஆகிய இருவரும் அதன் தாற்காலிக அமைப்பாளர்கள் என்று கூறும் அறிவிப்பு 22-12-1945 "குடிஅரசு'' இதழ் வரையில் தொடர்ந்து வெளியானது.

தந்தை பெரியார் விரும்பி அமைத்த அந்த கருப்புச் சட்டை படையின் முதல் தொண்டராக அப்போது ஈரோட்டில் பதிவு செய்து கொண்டது யார் தெரியுமா? இதே மு.கருணாநிதிதான். அந்த மு.கருணாநிதிதான், மனித சங்கிலி ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்குவதாக அறிவித்தேன். ஆம் நாளைய தினம் கறுப்பு சட்டை அணிந்து மனித சங்கிலியில் கலந்து கொள்வதாக இருந்தேன். அதற்கு இந்த அரசு அனுமதி கொடுக்கவில்லை. பரவாயில்லை, இன்று முதலே இந்த ஆட்சியின் அவலங்களை எதிர்த்து கருப்பு சட்டை அணிவேன், இன்றே அணிவேன்; இனி என்றும் அணிவேன்!” என்று குரல் கொடுத்திருந்தார் கருணாநிதி. 

அரசியல் வாழ்க்கையில் கருணாநிதி ஆரம்பக் காலங்களில் சிகப்பு கலர் சால்வையைதான் பயன்படுத்தி வந்தார். அதன்படி அவரது டிரெஸ் கோட் வெள்ளை வேட்டி வெள்ளை சட்டை சிகப்புத் துண்டாக இருந்தது. அந்த உடையில் திமுக மூத்த தொண்டர்களின் வீடுகளில் கருணாநிதியின் புகைப்படத்தை பார்க்கலாம். அதன்பின் அவர் மஞ்சள் துண்டு வெள்ளை வேட்டி சட்டைக்கு மாறினார். அந்த உடையை அவர் மாற்றியது 2012ல்தான். அந்த மாற்றம் கருப்புச்சட்டை போராட்டத்திற்கானது என்பது முக்கியம். ஆனால் அவரது கொள்கையை அவரே நெடுநாளைக்கு கடைப்பிடிக்கவில்லை.

அவரது அறிவிப்பு வெளியான சில தினங்களிலேயே மீண்டும் மஞ்சள் துண்டி வேட்டியில் அறிவாலயம் வந்தார் கருணாநிதி. அதற்கான காரணம் என்ன? என விசாரித்த போது திருமண போன்ற சுபக்காரியங்களில் பங்கேற்கும் அபசகுணமாக இருக்கும் என சிலர் எடுத்துக் கூறவே உடையை அவர் மாற்றிக் கொண்டதாக தெரிய வந்தது. ஆனால் இந்த உடை மாற்றத்திற்கு உரிய விளக்கத்தை அவர் வெளியிட்டதாகத் தெரியவில்லை. 

அரசியல் வரலாற்றில் கருணாநிதி ஆக்டிவ் ஆக இருந்த காலத்தில் அவர் அறிவித்த இறுதிக் கருப்புச்சட்டை போராட்டம் அதுதான். அதன் பின் இன்று அவர் கருப்புச்சட்டை அணிந்திருக்கிறார். ஆனால் அந்த மாற்றம் அவரது மகன் ஸ்டாலின் அரசியல் தலைமையேற்புக்குப் பிறகு நடைபெற்றும் போராட்டம். வீடியோவில் அவர் கருப்பு உடையோடு உட்கார்ந்திருப்பது காட்சியில் பதிவாகியிருக்கிறது. ஆனால் அவரது கருத்து என்னவாக இருக்கும் என்பதை அறிய முடியவில்லை. அந்தளவுக்கு அவர் முதுமை அடைந்துள்ளார். அவரது பேரன் உதயநிதி அவரது காது அருகில் சென்று “கடலூரில் இருந்து ஸ்டாலின் வந்து கொண்டிருக்கிறார்” என்பதைபோல சில வார்த்தைகளை சொல்கிறார். அவர் இறுதியாக உதயநிதியின் பேச்சுக்கு சைகை மட்டுமே காட்டுகிறார்.   

ஆனால் வெளியில் திமுக உள்ளிட்ட கட்சிகளின் போராட்டம் உச்சத்தை எட்டி இருக்கிறது. ‘கோபேக்மோடி’ எனும் ஹேஷ்டேக் உலக அளவில் ட்ரெண்ட்டில் முதலிடத்தை பிடித்துள்ளது. இந்திய அரசியல் வரலாற்றில் குறிப்பிடத்தக்க திமுகவின் கருப்புக் கொடி போராட்டங்கள் மொத்தம் மூன்று. முதன்முறையாக திமுகவினர் பண்டிதர் ஜவர்ஹர்லால் நேருக்கு எதிராக 1953ல் ஒரு கருப்புக் கொடி போராட்டத்தை நடத்தியது.

1953ல் ஜூலை 13 அன்று கூடிய திமுக செயற்குழு கூட்டத்தில் நேருவின் இந்தி திணிப்புக்கு எதிராக கருப்புக் கொடி காட்டுவது என முடிவானது. அதன் படி 15 ஆம் தேதி ரயில் மற்றும் விமானநிலையம் முற்றுகையிடப்பட்டது. அன்று டால்மியாபுரம் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டு கருணாநிதி கைதானார். “இந்திய அரசியல் அமைப்புச்சட்டத்திற்கு எதிரானவர்கள் இந்த நாட்டிற்கே எதிரானவர்கள்” என நேரு கண்டிக்கும் அளவுக்கு  விஷயம் விவகாரமானது. இதையொட்டி ராஜாஜி தமிழகம் வரும்போதெல்லாம் கருப்புக் கொடி மறியலுக்கு அவர் ஆளானார்.

இதே இந்தி திணிப்புக்கும் எதிராகவும் ‘வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது’ என்ற கருத்திற்கு வலுசேர்க்கும் விதத்தை காட்டவும் அண்ணாவும் மத்திய அமைச்சர்கள் வரும்போதெல்லாம் கருப்புக் கொடி போராட்டத்தை முன்னெடுத்திருக்கிறார். அதனையொட்டி மத்திய தகவல் ஒலிப்பரப்புத்துறை அமைச்சர் ரங்கநாத் ராமச்சந்திர திவாகருக்கு எதிராக அண்ணா காலத்தில் கருப்புக் கொடிக் காட்டப்பட்டது. 

நேருக்கு கருப்புக் கொடி காட்டிய திமுக அவரது மகள் இந்திராவையும் விட்டு வைக்கவில்லை. 1977ல் அவர் சென்னை வந்தபோது அவருக்கு எதிராக ஒரு கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் அரங்கேற்றப்பட்டது. மிசாவை எதிர்த்தும் நெருக்கடி நிலை பிரகடணத்தை எதிர்த்தும் தங்களின் எதிர்ப்பை பதிய வைக்கவே இப்போராட்டம் நடத்தப்பட்டது. அன்றுதான் மதுரையில் இந்திரா திமுகவினரால் தாக்கப்பட்டார். அன்று காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளராக இருந்த பழ நெடுமாறன் அந்த ஆபத்தில் இருந்து இந்திராவைக் காப்பாற்றி அனுப்பி வைத்தார். அந்தச் அம்பவம் நெடுமாறன் அரசியல் வரலாற்றில் அழியாத சுவடாக பதிவானது. 

இந்தச் சம்பவம் குறித்து நெடுமாறன் “மதுரை ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற இந்திரா வந்திருந்தார். நான் உட்பட சில கட்சித் தலைவர்கள் இந்திராவின் திறந்தக் காரில் வந்துக்கொண்டிருதோம். அப்போது அங்கே ஏராளமான திமுகவினர் கருப்புக் கொடியுடன் திரண்டனர். அங்கிருந்த வரவேற்பு பதாகைகளை கீழே தள்ளினர். நாங்கள் தெற்கு முக்கிய சாலையை அடைந்தபோது, திமுக தொண்டர் ஒருவர் இந்திராவை  தாக்கினார். அவரைக் காப்பாற்ற நாங்கள் எவ்வளவோ முயன்றோம். ஆனால் போராட்டக்காரர்கள் தாக்கியதில் இந்திரா காந்திக்கு காயம் ஏற்பட்டது” என்று கூறியிருந்தார்.

அன்று இந்திராவை திமுக கருப்புக் கொடி போராட்டத்தில் இருந்து காப்பாற்றிய பழ நெடுமாறன் இன்று அதே திமுக அறிவித்திருக்கும் கருப்புக் கொடி போராட்டத்திற்கு ஆதரவாக கருப்புச்சட்டை அணிந்து வந்து கலந்து கொண்டிருக்கிறார். ஆக, வரலாறு திரும்பி இருக்கிறது. ஆனால் நெடுமாறன் தன் தேசிய அரசியல் மனநிலையை விட்டுவிலகி இன்று தமிழ்த்தேசிய அரசியல் கொள்கையை ஏற்றுக் கொண்டிருக்கிறார். அன்று நெடுமாறனுக்கு எதிரான அரசியலில் நின்று இந்திராவை எதிர்த்த வைகோ இன்று மோடியை நெடுமாறன் உடன் இணைந்து எதிர்த்து வருகிறார். 

இன்று ‘கோபேக்மோடி’ என்ற பாதாகைகள் தமிழகம் முழுவதும் தட்டுப்பட்டு வருகின்றன. இந்திய அரசியலில் இந்த ‘கோபேக்’ என்ற குரல் முதன்முதலாக ஒலித்தது காந்தி காலத்தில்தான். இந்தியாவில் பிரிட்டீஷ் இரட்டை ஆட்சி முறை இருந்த காலத்தில் அதற்கு எதிராக களத்தில் குதித்தார் காந்தி. இந்தியாவை ஆளும் முழு உரிமையையும் கேட்டு 1919ல்  சைமன் குழுவுக்கு எதிராக போராட வேண்டும் என்று முடிவெடுத்தார். அதன்படி  ஹர்த்தால் செய்ய சொல்லி அறைகூவல் விடுத்தார். 1923 பிப்ரவரி 3 ஆம் நாள் பாம்பே வந்திறங்கிய சர் ஜான் சைமன் குழுவை எதிர்த்து நாடு முழுவதும் புரட்சி வெடித்தது. 1928 அக்டோபர் 30 ஆம் நாள் லாகூரில் லாலா லஜபதிராய் தலைமையில் சைமன் குழு எதிர்ப்பு போராட்டம் நடைபெற்றது. அப்போது நடைபெற்ற போலீஸ் தடியடியில் லஜபதிராய் படுகாயமடைந்தார். ஒரு மாதம் கழித்து அவர் உயிர் பிரிந்தது. இன்று தமிழகத்தில் நடைபெற்ற கருப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தில் விழுப்புரம்  மின்சார ரயில் மீது ஏறி அடிபட்டிருக்கிறார். ஈரோட்டில் பொம்மை விற்கும் தொழிலாளி ஒருவர் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.

அன்றைக்கு தமிழகம் வந்த சைமனை எதிர்த்து ‘கோபேக்சைமன்’ கோஷமும் கருப்புக் கொடி போராட்டமும் வெடித்தது. ஆக, கருப்புக் கொடி போராட்டத்தை இந்தியாவில் தொடங்கி வைத்ததில் காந்தியே முன்னோடி. சைமனில் தொடங்கிய தீப்பொறி இன்று மோடி வரைக்கும் வளர்ந்து வந்து கொண்டிருக்கிறது. ஆனால் இந்த அரசியல் வரலாற்றில் ஒரு சிறு முரண் இருக்கவே செய்கிறது. தமிழகத்தில் காட்டப்பட்ட ஒவ்வொரு கருப்புக் கொடி போராட்டத்திற்கும் மத்திய அரசின் ஆட்சிப் பொறுப்பில் இருந்தவர்கள் எதிர்வினை ஆற்றியிருக்கிறார்கள். அது சைமன் ஆனாலும் சரி நேரு ஆனாலும் சரி இந்திரா ஆனாலும் சரி. ஆனால் இந்திய அரசியலில் முதன்முறையாக ஒருவிதிவிலக்கு ஏற்பட்டிருக்கிறது. மோடிக்கு எதிராக வலுத்துள்ள போராட்டம் ஐபிஎல் போட்டிகளை புனேவிற்கு மாற்றும் அளவுக்கும் வலுப்பெற்றுள்ளது. ஆனால் மோடி மட்டும் வாய்த்திறக்கவே இல்லை. பலரும் குறிப்பிட நினைக்கும் விதிவிலக்கும் அதுதான்.