உத்தரபிரதேசத்தில் 7 கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், முதல் கட்ட தேர்தல் இன்று நடைபெறுகிறது. இந்த தேர்தல் பற்றிய சுவாரஸ்யங்களை பார்ப்போம்...
- முதல் கட்டமாக உத்தரப்பிரதேசத்தின் 11 மாவட்டங்களில் உள்ள 58 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இந்த மாவட்டங்கள் அதிகளவில் விவசாயிகள் நிரம்பிய பகுதியாக உள்ளது.
- உத்தரபிரதேசத்தில் மொத்தம் 403 தொகுதிகள் உள்ளன, இந்தியாவிலேயே அதிகளவில் சட்டமன்ற தொகுதிகளை கொண்ட மாநிலமாக இது உள்ளது.
- உ.பி.,யில் மொத்த தொகுதிகளில் 86 சட்டசபை இடங்கள், பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் 84 தொகுதிகள் பட்டியல் இனத்தவரும், 2 இடங்களில் பழங்குடியினருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.
- தேர்தல் ஆணையம் சட்டசபை தேர்தல் வேட்பாளர்களுக்கான செலவு வரம்பை ரூ.40 லட்சம் வரை உயர்த்தியுள்ளது. இது முன்பு ரூ. 28 லட்சமாக இருந்தது.
- தற்போதைய உ.பி சட்டமன்றத்தின் பதவிக்காலம் மே 14, 2022 அன்று முடிவடைகிறது. உ.பி சட்டசபையில் பெரும்பான்மைக்கு 202 இடங்களை ஒரு கட்சி பெற வேண்டும்
- 2017ஆம் ஆண்டு உ.பி சட்டசபை தேர்தலில் மொத்தமுள்ள 403 இடங்களில் பாஜக 312 இடங்களில் வெற்றி பெற்றது.
- 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, உத்தரப்பிரதேசத்தில் இதர பிற்படுத்தப்பட்ட மக்கள்(obc) 40%, பட்டியல் இனத்தவர்கள் (SC) 20.8%, பழங்குடியினர் (ST) 0.8%, முஸ்லிம்கள் 23%, மற்றவர்கள் 0.9% உள்ளனர்
- முதல் கட்ட தேர்தலில் 623 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர், முதல் கட்ட தேர்தலில் 2.27 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
- தற்போது தேர்தல் நடைபெறும் 58 இடங்களில், 2017 ஆம் ஆண்டு 53 இடங்களை பாஜக கைப்பற்றியது. சமாஜ்வாடி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிக்கு தலா இரண்டு இடங்களிலும், ஆர்எல்டி ஒரு இடத்திலும் வென்றது. இது விவசாயிகள் நிறைந்த பகுதி என்பதால், 3 வேளாண் சட்டங்களால் கடும் அதிருப்தி நிலவியது. எனவே தற்போதைய தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என நாடே உற்றுநோக்கும் தொகுதிகளாக இவை உள்ளன.
- பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி, உத்தரப் பிரதேசத்தில் முழுமையாக ஐந்தாண்டு பதவிக் காலத்தை முடித்த முதல் முதல்வர் என்ற பெருமையைப் பெற்றார். அதன்பின்னர் சமாஜ்வாதி கட்சியின் அகிலேஷ் யாதவ் தனது பதவிக் காலத்தை முழுமையாக நிறைவு செய்தார். தற்போது மூன்றாவது நபராக பாஜகவின் யோகி ஆதித்யநாத் தனது பதவி காலத்தை நிறைவு செய்துள்ளார்.