சிறப்புக் களம்

ஸ்டார்ட் அப் இளவரசிகள்-26: இ-காமர்ஸ் துறையில் ஜொலிக்கும் காத்தியா பவுச்சம்!

webteam

இணைய போக்குகளை மேம்போக்காக கவனிப்பவர்கள் கூட, சந்தா அடிப்படையில் உறுப்பினர்களுக்கு மாதந்தோறும் குறிப்பிட்ட பொருட்களை அனுப்பி வைக்கும் இணைய நிறுவனங்கள் அதிகரித்திருப்பதை உணரலாம். சொல்லப்போனால் இணையத்தில் இப்போது உறுப்பினர் சேவை அல்லது சந்தா பெட்டி சேவை அலை வீசிக்கொண்டிருப்பதாக கருதலாம். சந்தா பெட்டி சேவை நிறுவனங்கள் தொடர்பான தகவல்களை அளிப்பதற்காக என்றே மை சப்ஸ்கிர்ப்ஷன் அடிக்‌ஷன் (mysubscriptionaddiction.com) எனும் இணையதளமும் இருக்கும் அளவுக்கு இந்த பிரிவில் எண்ணற்ற நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.

இருப்பினும் புதுப்புது எண்ணங்களுடன் புதிய சந்தா பெட்டி சேவை நிறுவனங்கள் அறிமுகம் ஆகின்றன. போட்டியை சமாளிக்க முடியாமல் பல சந்தா பெட்டி சேவை நிறுவனங்கள் காணாமல் போய் கொண்டிருந்தாலும், டாலர் ஷேவ் கிளப், இப்ஸி, பார்க் பாக்ஸ், ஸ்டிச்பிக்ஸ் (இந்த தொடரில் ஏற்கனவே அறிமுகமான நிறுவனம்) ஷூ டேஸில் போன்ற நிறுவனங்கள் இந்த பிரிவில் சர்வதேச அளவில் முன்னணியில் திகழ்கின்றன. இந்திய அளவிலும் கூட பல நிறுவனங்கள் சந்தா பெட்டி சேவையை வழங்கி வருகின்றன.

உறுப்பினர் சேவை

இந்த அலையை துவக்கி வைத்த நிறுவனங்களில் ஒன்றாக கருதப்படும் பிர்ச்பாக்ஸ் (Birchbox) சேவையை துவக்கிய காத்தியா பவுச்சம் (Katia Beauchamp) மற்றும் அவரது தோழி ஹேலே பார்னா (Hayley Barna) பற்றி இந்த வாரம் பார்க்கலாம்.

சந்தா அல்லது உறுப்பினர் சேவை என்பது வர்த்தக உலகில் பிரபலமாக இருக்கும் பழைய உத்தி தான். குறிப்பிட்ட ஒரு சேவையில் கட்டணம் செலுத்தி உறுப்பினராக இணைந்தால், மாதம் அல்லது வார அடிப்படையில் அந்த சேவையை தொடர்ந்து பெறலாம். உதாரணத்திற்கு, தங்கள் அபிமான பத்திரிகையை தவற விடாமல் தொடர்ந்து வாங்க விரும்புகிறவர்கள் சந்தா சேவையை நாடுவது வழக்கம். இன்னும் பல துறைகளில் சந்தா சேவை பின்பற்றப்பட்டு வருகிறது.

இணைய யுகத்திற்கு ஏற்ற வகையில் இந்த உறுப்பினர் சேவை முறையை பயன்படுத்திக் கொள்வதற்கான யோசனையில் உதித்தவை தான், ஸ்டிச்பாக்ஸ், ரெண்ட் தி ரன்வே போன்ற சேவைகள். இதே வரிசையில் தான் பிர்ச்பாக்ஸ் வருகிறது. ஸ்டிச்பிக்ஸ் எப்படி உறுப்பினர்களுக்கு அவர்கள் விரும்பி தேர்வு செய்வதற்கான புதிய பேஷன் ஆடைகளை அனுப்பி வைக்கிறதோ, ரெண்ட் தி ரன்வே எப்படி கட்டண அடிப்படையில் புதிய ஆடைகளை வாடகை முறையில் பயன்படுத்த அனுமதிக்கிறதோ அதே போல பிர்ச்பாக்ஸ் நிறுவனம், கட்டண அடிப்படையில் உறுப்பினர்களுக்கு அழகு சாதன பொருட்களின் மாதிரியை அனுப்பி வைக்கிறது.

விற்பனையை இலக்காக கொண்டு வாடிக்கையாளர்களுக்கு வர்த்தக நிறுவனங்கள் அழகு சாதன பொருட்களின் மாதிரியை இலவசமாக அளிக்கும் வழக்கமான உத்தியை பிர்ச்பாக்ஸ் நிறுவனர்கள் மிகவும் புத்திசாலித்தனமாக கட்டணச் சேவையாக மாற்றி வெற்றியும் பெற்றுள்ளனர்.

எளிய யோசனை

பிர்ச்பாக்ஸ் சேவையின் அடிப்படை எண்ணம் மிகவும் எளிமையானது. அழகு சாதன பொருட்களை பயன்படுத்துபவர்கள் மாதம் பத்து டாலர் செலுத்தி உறுப்பினராக இணைய வேண்டும். அதன் பின் அவர்களுக்கு நிறுவனம் மாதந்தோறும் வாரத்தில் நான்கு முறை தேர்வு செய்த அழகு சாதன பொருட்களின் மாதிரியை அழகாக ஒரு பெட்டியில் அனுப்பி வைக்கும். பெட்டியில் உள்ள அழகு சாதனப் பொருட்களை பயன்படுத்திப்பார்த்து உறுப்பினர்கள் தங்களுக்கு தேவையானதை பின்னர் வாங்கிக் கொள்ளலாம்.

அழகு சாதன பொருட்களை பயன்படுத்தும் ஆர்வம் பெரும்பாலான பெண்களுக்கு உண்டென்றாலும், அவற்றில் உள்ள ரகங்களை பார்த்து பரிசீலித்து தேர்வு செய்யும் பொறுமையும், நேரமும் எல்லோருக்கும் இருப்பதில்லை. அதிலும் குறிப்பாக அழகு சாதன உலகில் புதுப்புது பிராண்டுகளும், ரகங்களும் அறிமுகம் ஆகிக்கொண்டிருக்கும் நிலையில் இது இன்னும் சவாலானது. மேலும் புதிய பொருட்களை வாங்கி முயற்சிப்பது பல நேரங்களில் செலவு மிக்கதாகவும் இருக்கலாம். தவிர, புதிய பொருட்கள் பொருத்தமாக இருக்கும் என்பதையும் உறுதியாக சொல்வதற்கில்லை.

இந்த சிக்கல்களுக்கு எல்லாம் தீர்வாக அமைகிறது பிர்ச்பாக்ஸ் சேவை. இதன் உறுப்பினர்கள் மிக குறைந்த கட்டணத்தில் மாதத்தோறும் புதிய அழகு சாதனை பொருட்களை பெறலாம். ஆனால் இலவசமாக கிடைக்கும் மாதிரிகளை கட்டணச் சேவையாக வழங்கலாம் எனும் எண்ணமும், அதை செயல்படுத்துவதற்கான துணிவும் இதன் நிறுவனர்களுக்கு எப்படி ஏற்பட்டது என்பதை பார்க்கலாம்.

பிர்ச்பாக்ஸ் நிறுவனர்கள் காத்தியா மற்றும் ஹேலே இருவரும் ஹார்வர்டு வர்த்தக பள்ளியில் ஒன்றாக நிர்வாகம் பயின்றவர்கள். படிப்பின் இறுதி ஆண்டில்தான் இருவருக்கும் சொந்தமாக வர்த்தகத்தை துவக்கி பார்க்க வேண்டும் எனும் உண்டானது. நிர்வாக படிப்பில் தாங்கள் பயின்றதை எல்லாம் நடைமுறையில் பயன்படுத்தி பார்க்க விரும்பி பலவிதமான வர்த்தக எண்ணங்களை யோசித்து அலசிக்கொண்டிருந்தனர்.

லெகின்ஸை பெண்கள் மட்டும் தான் அணிய வேண்டுமா எனும் கேள்வியோடு ஆண்களுக்கான லெகின்ஸை உருவாக்குவது உள்ளிட்ட பல புதுமையான யோசனைகள் மனதில் அலைமோதிய நிலையில், அழகு சாதன பொருட்கள் விற்பனையை தேர்வு செய்தனர்.

அழகு சாதன பொருட்கள்

அழகு சாதன பொருட்களையும், இ-காமர்சையும் இணைப்பது அவர்கள் நோக்கமாக இருந்தது. வாடிக்கையாளர்களில் பலரும் ஆன்லைனுக்கு மாறிக்கொண்டிருப்பதை கவனித்தனர். இ-காமர்ஸ் வழியே பலரும் பலவித பொருட்களை வாங்கினாலும் அழகு சாதன பொருட்களில் ஒருவித இடைவெளி இருப்பதாக உணர்ந்தனர். அழகு சாதன பொருட்களை வாங்க விரும்புகிறவர்கள் அதற்கு முன் பொருட்களை பயன்படுத்தி பார்க்க விரும்புவதை அறிந்திருந்தனர். மேலும், அழகு சாதன பொருட்கள் சந்தையில் குவிந்து கிடக்கும் நிலையில் தங்களுக்கு ஏற்ற ரகத்தை வாடிக்கையாளர்களால் தீர்மானிக்கவும் முடியாமல் இருந்தது. இந்த புள்ளிகளை எல்லாம் இணைக்கும் வகையில் தான் மாதிரி பொருட்களை கட்டண அடிப்படையில் அனுப்பி வைக்க தீர்மானித்தனர்.

இந்த எண்ணம் பளிச்சிட்டதும் அதை இறுதி செய்தி அதற்கான முயற்சியில் இறங்கிவிட்டனர். இலவசமாக கிடைக்கும் பொருட்களை யாரேனும் இணையத்தில் கட்டணச் சேவை வடிவில் பெற முன்வருவார்களா? என பலரும் சந்தேகம் தெரிவித்தாலும், இருவரும் கவலைப்படாமல் முயற்சியை தொடர்ந்தனர். அந்த அளவுக்கு இந்த எண்ணம் வெற்றி பெறும் என்பதில் அவர்களுக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருந்தது.

தங்கள் சேவைக்கு பிர்ச்பாக்ஸ் எனும் பெயரை தேர்வு செய்து, அதற்கான வர்த்தக திட்டத்தை தயாரித்தனர். அழகு சாதன பிராண்ட்களை தங்கள் பக்கம் ஈர்த்து விட்டால் நிறுவனத்தை துவக்கி விடலாம் என நினைத்தவர்கள், இதற்காக அதிரடி உத்தியை கையாண்டனர். தங்கள் திட்டத்தை விளக்கும் இமெயிலை முன்னணி அழகு சாதன பிராண்டுகளுக்கு எல்லாம் அழையா விருந்தாளியாக அனுப்பி வைத்தனர். பிராண்ட்களிடம் இருந்து சாதகமான பதில்கள் வரவே, நிறுவனத்திற்கான இணையதளத்தை அமைத்து சேவையை துவக்கினர்.

ஆரம்ப சவால்

நிறுவனத்திற்கான நிதி திரட்டுவது போன்றவற்றில் சவால்களை எதிர்கொண்டாலும், நிறுவன கட்டணச் சேவைக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது, பத்து டாலர் கட்டணத்தில் புதிய அழகு சாதன பொருட்கள் வீடு தேடி பெட்டியில் வரும் என்பதை பெண்கள் பலரும் விரும்பி வரவேற்றனர். அதிலும் குறிப்பாக வேலைக்கு செல்லும் பெண்கள் இந்த சேவையை மிகவும் விரும்பினார். பிராண்ட்களும் இந்த சேவையை விரும்பின. அழகு சாதன பொருட்கள் பிரிவில் ஆன்லைனில் இன்னும் மேம்பட்ட சேவை தேவை எனும் நம்பிக்கையே பிர்ச்பாக்ஸ் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது. அழகு சாதன உலகில் நிறுவனங்கள் புதிய ரகங்களை அறிமுகம் செய்வதன் மூலம் வாடிக்கையாளர்களை கவர நினைக்கின்றன. இப்படி குவியும் லட்சக்கணக்கான பொருட்களை தேர்வு செய்வது என்பது சவாலாக அமையும் நிலையில், அழகு சாதனப் பொருட்களை பயனாளிகள் வீட்டிற்கே கொண்டு சேர்க்கும் சேவையாக பிர்ச்பாக்ஸ் அமைந்தது.

வெற்றி நிறுவனம்

மேலும் இணையத்தில் அழகு சாதனப் பொருட்களை வாங்குவது என வரும் போது ஏற்கனவே பயன்படுத்தி வரும் பிராண்ட்களை தொடர விரும்புகிறவர்களுக்கு எந்த சிக்கலும் இல்லை. ஆனால் புதிய பொருட்களை பயன்படுத்தி பார்க்க விரும்புகிறவர்களுக்கு இ-காமர்ஸ் ஏற்றதாக அமையவில்லை. இந்த இடைவெளியை தான் பிர்ச்பாக்ஸ் இட்டு நிரப்பி வெற்றி பெற்றுள்ளது.

2010 ம் ஆண்டு துவக்கப்பட்ட பிர்ச்பாக்ஸ் பெரும் வரவேற்பை பெற்றாலும் இடையே லாபம் ஈட்டுவதில் சிக்கலை எதிர்கொண்டு ஆட்குறைப்பு போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள தள்ளப்பட்டது. எனினும், இ-காமர்ஸ் விற்பனை விரிவாக்கம், நேரடி விற்பனை நிலையங்கள் விரிவாக்கம் போன்ற உத்திகளால் சவால்களை எதிர்கொண்டது. சர்வதேச அளவிலும் விரிவாக்கம் செய்து வளர்ந்து வருகிறது. பிர்ச்பாக்ஸ் நிறுவனத்தின் வெற்றியை தொடர்ந்து மேலும் பல நிறுவனங்கள் இந்த பிரிவில் துவங்கப்பட்டதோடு, வேறு பிரிவுகளிலும் இதே போன்ற கட்டணச்சேவை நிறுவனங்கள் துவக்கப்பட்டன.

இன்று சந்தா பெட்டி சேவை என இந்த பிரிவு பிரபலமாக குறிப்பிடப்படுகிறது. இந்தியாவிலும் கூட, கட்டண அடிப்படையில் பூஜைக்கான ரோஜா மலர்களை அனுப்பி வைக்கும் சேவையை வழங்கும் நிறுவனம் உள்பட பல நிறுவனங்கள் இந்த பிரிவில் செயல்பட்டு வருகின்றன.