சிறப்புக் களம்

கமலின் ட்விட்டர் பக்கத்தில் ஓவியா ஆர்மி செய்யும் அலப்பறைகள்

கமலின் ட்விட்டர் பக்கத்தில் ஓவியா ஆர்மி செய்யும் அலப்பறைகள்

webteam

சமூக வலைத்தளங்கள் முழுக்க வியாபித்திருக்கும் ஓவியா ரசிகர்கள், பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளரான கமல்ஹாசனின் ட்விட்டர் பக்கத்தில், ஓவியாவுக்கு ஆதரவாக பல்வேறு கருத்துகளை எழுதி வருகின்றனர்.

40 நாட்களுக்கு முன்பு வரை ஓவியா என்ற தமிழ் நடிகை பெரிதாக யாரும் கவனிக்கப்படாதவர். அவர் பெரிதாக கலைத்துறையில் சாதனை படைத்தவரோ அல்லது பல வெற்றிப்படங்களில் நடித்த முன்னணி நடிகையோ இல்லை. ஆனால் பிக்பாஸ் என்ற நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராகக் கலந்து கொண்ட நாள் முதல் அவருக்கு மக்கள் ஆதரவும், ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பும் கிடைத்துள்ளதை சமூக வலைத்தளங்கள் மூலமாகவே அறியலாம்.

அந்த வரவேற்பு எந்த அளவுக்கு செல்கிறது என்றால், சமூக வலைத்தளங்களான ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்அப் ஆகியவற்றில் ஓவியாஆர்மி, சேவ் ஓவியா, ஓவியா புரட்சிப் படை, ஓவியா பேரவை என்று எண்ணற்ற ஃபேஸ்புக் பக்கங்கள், ட்விட்டர் அக்கவுன்ட்கள், வாட்ஸ்அப் குரூப்கள் உருவாகி ஓவியாவை புகழ்ந்தும், மற்ற பிக்பாஸ் போட்டியாளர்களை வறுத்தெடுத்தும் வருகின்றனர். ஓவியாவின் ஒவ்வொரு அசைவும், மக்களால் ரசிக்கப்படுகிறது. அதனால்தான் ஒவ்வொரு வாரமும் பிக்பாஸ் வீட்டுக்குள் இருப்பவர்கள் ஓவியாவை வெளியேற்றத் துடித்தாலும், பொதுமக்களின் கோடிக்கணக்கான வாக்குகளால் தடைகளைத் தாண்டி நிலைத்து நிற்கிறார், ஓவியா.

ஓவியாவின் ரசிகர்கள் அவருக்கு ஓட்டுப் போடுவதோடும், சமூக வலைத்தளங்கள் மூலம் அவருக்கு ஓட்டுக் கேட்பதோடும் நிற்பதில்லை. அவர்கள், சமீபகாலமாக ட்விட்டர் தளத்தில் தீவிரமாக இயங்கிவரும் கமல்ஹாசனை, தங்களுடைய வீடியோ மீம்ஸ், போட்டோ மீம்ஸ், கமென்ட்கள் மூலம் இம்சித்து வருகிறார்கள். கமல் போடும் ஒவ்வொரு ட்விட் செய்திக்கும் கீழே கமென்ட்டில் அவரை ‘டாக்’ செய்து பிக்பாஸ் தொடர்பாக பல்வேறு கருத்துகளைப் போட்டு அலப்பறை செய்கிறது, ஓவியாஆர்மி.

உதாரணமாக, சிவாஜி சிலை மாற்றப்பட்டது தொடர்பாக கமல் போட்ட ட்விட் செய்திக்கு கீழே, “ஆண்டவரே எல்லாரும் காயத்ரி உங்க ஆளுங்கன்னு தான் நீங்க கண்டிக்க மாட்டேங்கறீங்கன்னு சொல்றாங்க, உண்மையா?”, “நம்ம ஏன் ஓவியாவுக்கு ஒரு சிலை வைக்கக் கூடாது ஆண்டவரே”, “ஆண்டவரே, ஓவியாவுக்கு போட்டியா பிந்து மாதவிய அனுப்பினது, ஆடி காரோட ரேஸ் விட ஆட்டோவ அனுப்பினது மாதிரி”, “ஓவியாவ அங்க டார்ச்சர் பண்ணிட்டு இருக்கானுக ஆண்டவரே”, “ஆண்டவரே இந்த வாரம் ஜூலி வெளிய போகலனா... போறது விஜய் டிவி மேல உள்ள நம்பிக்கை மட்டும் இல்ல. உங்க மேல உள்ள நம்பிக்கையும் தான்” என்பது போன்ற பல்வேறு கமென்ட்களை போட்டுவருகிறார்கள்.

இந்த கமென்ட்களில் அவர்கள் கமலையும் விமர்சிக்கத் தயங்குவதில்லை. குறிப்பாக, அவர்கள் திரும்ப திரும்ப சுட்டிக்காட்டுவது, ‘சேரி பிஹேவியர்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தி பல்வேறு சமூக ஆர்வலர்கள் மற்றும் அரசியல் இயக்கங்களின் விமர்சனத்துக்கு ஆளான காயத்ரி ரகுராமை கண்டிக்காமல், ஓவியாவின் தவறுகளை மட்டுமே கமல் பேசுகிறார் என்பது ஓவியா ரசிகர்களின் குற்றச்சாட்டு.

ஓவியாஆர்மியின் குற்றச்சாட்டுகளுக்கும், விமர்சனங்களுக்கும், கமென்ட்களுக்கும் எந்த ரியாக்‌ஷனும் காட்டாமல் அமைதியாக அனைத்தையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார், ஆண்டவர்.