சிறப்புக் களம்

வன்முறையில் முடிந்த தலித் அமைப்புகளின் போராட்டம் - வேடிக்கை பார்க்கிறதா மத்திய அரசு?

வன்முறையில் முடிந்த தலித் அமைப்புகளின் போராட்டம் - வேடிக்கை பார்க்கிறதா மத்திய அரசு?

rajakannan

பிரச்னையின் அடிப்படை என்ன?

எஸ்சி, எஸ்டி பிரிவினரை பாதுகாக்கும் வகையிலான வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் யாரேனும் ஒருவர் மீது புகார் தெரிவித்தால், அவர் மீது வழக்குப் பதிவு செய்து, ஜாமீன் இல்லாத பிரிவின் கீழ் உடனே கைது செய்யும் வகையிலான ஷரத்தான் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு முன்பு வரை இருந்தது. அந்த ஷரத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கில் கடந்த மார்ச் 20ம் தேதி உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. 

அந்த உத்தரவில், தீண்டாமை சட்டத்தின் கீழ் யார் மீதேனும் புகார் கூறப்பட்டால், அதனை தீர விசாரித்து முகாந்திரம் இருந்தால் மட்டுமே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. அதாவது, அரசு ஊழியர் மீது புகார் அளிக்கப்பட்டால் நியமன அதிகாரியின் அனுமதி பெற்ற பிறகே கைது செய்ய வேண்டும். அதேபோல், அரசு ஊழியர் அல்லாதவர் மீது புகார் கூறப்பட்டால், மாவட்ட காவல்துறை அதிகாரியின் அனுமதி பெற்று கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். இத்தகைய புதிய கட்டுப்பாடுகள் ஏற்கனவே உள்ள சட்டத்தை முற்றிலும் நீர்த்துப் போகச் செய்யும் என்பதுதான் சமூக ஆர்வலர்கள் மற்றும் தலித் அமைப்புகளின் குற்றச்சாட்டு.

நாடு தழுவிய பந்த்

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு தலித்துகளின் உரிமையில் தலையிடும் உத்தரவு எனக்கூறி, தலித் அமைப்புகள் நாடு தழுவிய அளவில் இன்று போராட்டத்தில் ஈடுபட்டன. போராட்டம் தொடங்கிய போது ஓரளவுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, உத்தரப் பிரதேச முன்னாள் முதலமைச்சரும் பகுஜன் சமாஜ் கட்சி தலைவருமான மயாவதி உள்ளிட்டோர் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர். நாடு முழுவதும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னையில் வடமாநிலங்களில் மட்டும் அதிக அளவில் போராட்டங்கள் நடைபெற்றன. உத்தரப் பிரதேசம், பஞ்சாப், பீகார், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் பலத்த பாதுகாப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. தலித் அமைப்பினர் சாலை மறியல், ரயில் மறியல் உள்ளிட்டவற்றில் ஈடுபட்டனர். 

மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், பீகார், பஞ்சாப், ஜார்கண்ட் உள்ளிட்ட பல மாநிலங்களில் நடந்த போராட்டங்களில் வன்முறை வெடித்தது. போலீசாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே பல இடங்களில் மோதல் ஏற்பட்டது. ராஜஸ்தானின் பல்வேறு பகுதிகளில் வாள், தடிகள் உள்ளிட்டவற்றுடன் வந்தவர்கள் கடைகளை அடைக்குமாறு கூறி கலவரத்தில் ஈடுபட்டனர்.

வன்முறையில் முடிந்த போராட்டம் - 8 பேர் பலி

உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் வெடித்த கலவரத்தில் நான்கு பேர் கொல்லப்பட்டனர். இதற்கு காரணமானவர் என சந்தேகிக்கப்படும் பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் எம்எல்ஏ யோகேஷ் வர்மாவை பிடித்து விசாரித்து வருவதாக மீரட் சிறப்பு காவல் கண்காணிப்பாளர் மன்சில் சைனி தெரிவித்துள்ளார். அசம்கார் என்ற இடத்தில் பேருந்து ஒன்று தீக்கிரையாக்கப்பட்டது. முசாபர் நகரில் சில வாகனங்களுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். இந்தச் சம்பவங்களை அடுத்து உத்தரப்பிரதேசத்திற்கு சிறப்பு அதிரடிப் படையினரை மத்திய அரசு அனுப்பி வைத்துள்ளது. மத்தியப்பிரதேசத்தில் மூண்ட கலவரத்தில் இருவர் கொல்லப்பட்டனர். காவல்துறையினர் பலர் காயமடைந்தனர்.

ஹரியானாவில் கலவரத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் தடியடி நடத்தி விரட்டினர். நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நிகழ்ந்த வன்முறை, கலவரம் தொடர்பாக ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். வன்முறைச் சம்பவங்களில் ஈடுபடுவோர் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி வலியுறுத்தியுள்ளார். போராட்டத்தில் வெடித்த வன்முறை தொடர்பாக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கவலை தெரிவித்துள்ளார். 

மத்திய உள்துறை அமைச்சகம் வேண்டுகோள்

நிலைமைகளை கவனித்து வருவதாகவும் மாநில அரசுகள் கேட்டுக் கொண்டால் மத்திய பாதுகாப்பு படைகள் உடனடியாக அனுப்பி வைக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மாநில அரசுகளுடன் தொடர்ச்சியாக தொடர்பில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநில அரசுகள் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டும் என்று உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வலியுறுத்தியுள்ளார். அதேபோல், பல்வேறு சமூக அமைப்புகள் அமைதி காக்குமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தென்மாநிலங்களில் போராட்டங்கள் இல்லை

தமிழ்நாடு, கேரளா, தெலுங்கானா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய தென் மாநிலங்களில் மிகவும் சிறிய அளவிலே போராட்டங்கள் நடைபெற்றன. அதேபோல், மேற்குவங்கத்திலும் சொல்லும்படியாக போராட்டங்கள் இல்லை. அதாவது பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் போராட்டங்கள் நடைபெறவில்லை. அதனால் இந்தப் போராட்டங்களின் பின்னால் யாரோ இருக்கிறார்கள் என்றும் விமர்சனம் எழுந்துள்ளது. மேலும், இந்த வன்முறை சம்பவங்களுக்கு பல்வேறு அரசியல் கட்சிகளும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். தீர்ப்புக்கு எதிராக உடனடியாக மனு தாக்கல் செய்யாத மத்திய அரசு மீதும் பலர் விமர்சனங்களை முன் வைத்துள்ளனர்.