சிறப்புக் களம்

தூங்குவதற்கு முன்... ஆரோக்கியத்தில் கோட்டைவிடும் இளம் தலைமுறை... - ஓர் அலர்ட் பார்வை

தூங்குவதற்கு முன்... ஆரோக்கியத்தில் கோட்டைவிடும் இளம் தலைமுறை... - ஓர் அலர்ட் பார்வை

webteam

'நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்' என்பது பரிச்சயமான பழமொழி. ஆனால், தற்போதைய தலைமுறைக்கு இந்த பழமொழி தெரியுமா என்பது கேள்விக்குறியே. அப்படி தெரிந்தாலும், அதன் விளக்கம் புரிந்ததா என்பதை அவர்களைக் கேட்டுதான் தெரிந்துகொள்ள வேண்டும். அபாயகரமான வாழ்க்கை முறையை வாழும் தலைமுறையாக இருக்கிறது இன்றைய தலைமுறை. உணவும், உறக்கமும் ஒரு மனிதனின் ஆரோக்கியத்தையும், ஆயுளையும் தீர்மானிக்கிறது. அதிலிருந்துதான் விலகிச் சென்றுகொண்டிருக்கிறார்கள் இளசுகள். இளம் வயதில் நீரிழிவு, மாரடைப்பு போன்ற பல நோய்கள் இன்றைய தலைமுறையை துரத்துகிறது என்றால் அதற்கு காரணம் அவர்கள்தான்.

நடு இரவில் ஃபேஸ்புக் சாட் பக்கம் சென்று பார்த்தால் ஒரு பெரிய கூட்டமே ஆன்லைனில் இருக்கிறது. அதிகாலை 3 மணி, 4 மணி வரையிலும் இளம் தலைமுறை கண்விழித்து கிடக்கிறது. உறக்கத்தை கலைத்து கண்விழிக்கும் நேரத்தில் ஒரு கூட்டம் தூங்கச் செல்கிறது. ஒளிரும் திரையை உற்று பார்த்துக்கொண்டு இரவை கழித்துக்கொண்டு இருக்கும் இளைஞர்களுக்கு உடல் ஆபத்துகள் வெகு தொலைவில் இல்லை என்பதே உண்மை. உணவு, கேட்ஜெட் ஃப்ரீ, உறக்கம் இது மூன்றும் இரவை சரியாகவும் ஆரோக்கியமாகவும் கழிக்க முக்கியமாகிறது. இது மூன்றிலுமே இளம் தலைமுறை குறை வைப்பதுதான் ஆரோக்கியத்துக்கு வேட்டு வைக்கும் என்கின்றனர் மருத்துவர்கள்.

உணவே மருந்து என்பதுதான் வாழ்க்கை முறை. தரம் மாறும் உணவுகளே வெகுவிரைவில் நம்மை மருந்தையே உணவாக உட்கொள்ள வைக்கின்றன. துரித உணவுகள், பீட்சா, பர்கர் போன்ற உணவுகள்தான் இன்றைய பெரும்பாலான இளைஞர்களின் ஃபேவரைட். ஆரோக்கியமான உணவு வகைகள் இன்று வெறும் உரையாடல்களில் வந்து போகின்றன. அவற்றில் கால்பங்காவது அடுத்த தலைமுறைக்கு செல்லுமா என்பது கேள்விக்குறி. இடையே புகுந்து உணவு கலாசாரத்தை ஆட்கொண்டுள்ளது துரித உணவுகள். அவைதான் இளைஞர்களின் பெரும்பான்மையான உணவாக மாறி வருகிறது. பேசத் துவங்கும் குட்டி குழந்தைக்கும் பீட்சா என்பதை பழக்கப்படுத்துகின்றனர் சில பெற்றோர்கள். அதன் தாக்கம் அதன் எதிர்காலத்தையே பாதிக்கும் என்கின்றனர் மருத்துவர்கள்.

குறிப்பாக, இரவு உணவு என்பது உறக்கத்துக்கு முன்பான உணவு என்பதால், அதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள். எளிதில் செரிக்கக் கூடிய சத்தான உணவுகளை இரவில் உண்ண வேண்டும். இரவு உணவு என்பது அதிகபட்சம் 8 மணிக்குள் இருக்க வேண்டும். அந்த நேரத்தில் சாப்பிட்டால்தான் செரிமானத்திற்கு சரியாக இருக்கும். நடுஇரவில் உண்பது, இரவு உணவாக மாமிச உணவுகளை வெளுத்து வாங்குவது எல்லாம் செரிமானத்தில் பிரச்னையை உண்டாக்கி ஆரோக்கியத்தையே கெடுத்துவிடும். சரியாக கணக்கிட்டால் தூங்குவதற்கும் இரண்டு மணி நேரத்துக்கும் முன்பே சாப்பிடுதல் என்பது ஆரோக்கியமான முறை.

உணவுக்கு அடுத்து இளம் தலைமுறை கவனிக்க வேண்டியது கேட்ஜெட்டுகள். முன்பே பேசியது போல இளம் தலைமுறை கண்விழித்து விடிய விடிய செல்போன் திரையை பார்த்துக் கிடப்பது அபாயத்திலும் அபாயம். இன்றைய தலைமுறைக்கு ’கேட்ஜெட் ஃப்ரீ ’என்பது தான் அத்தியாவசிய தேவையாக இருக்கிறது. உறங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவே டிவி, செல்போன்,லேப்டாப் போன்ற ஒளிரும் திரையில் இருந்து நம்மை விடுவித்துக்கொள்ள வேண்டும் என்பதுதான் மருத்துவர்களின் பிரதான அறிவுரை. இரவு உணவு உண்டுவிட்டு குடும்பத்தினருடன் நேரம் செலவழிப்பது, புத்தகம் படிப்பது, பாடல் கேட்பது போன்ற வேலைகளை செய்துவிட்டு ஒன்றரை முதல் 2 மணி நேரம் கழித்து உறங்கச் செல்வதே ஆரோக்கியமான முறை. தூங்கும் நேரத்தில் ஒளிரும் திரையை நாம் பார்த்தால் அது உறங்கும் திறனை பாதித்து, தூக்கம் தொடர்பான தூண்டுதல் வேலையை செய்ய விடாமல் மூளையை தடுத்துவிடும் என்கிறது ஆராய்ச்சி.

'செல்போனை நோண்டிக்கொண்டே கிடந்தால் தூக்கம் வரவில்லை' என்பதற்கும் இதுதான் காரணம். ஆனால் 'தூக்கம் வரவில்லை அதனால் செல்போன் நோண்டுகிறேன்' என பாய்ன்டை திருப்பிச் சொல்கின்றனர் கேட்ஜெட் இளசுகள். சரியான நேரத்தில் உணவு, கேட்ஜெட் ஃப்ரீ இவையிரண்டையும் சரியாக கையாண்டுவிட்டால் அடுத்து தூக்கம் என்பதில் உங்களுக்கு பிரச்னையே இருக்காது.

அதாவது 8 மணி நேரம் தூக்கம் தேவை என்பதை காலம் காலமாக கேட்டு வருகிறோம். ஆனால் அது ஏதோ எட்டு மணி நேரம் என்பதில் பயனில்லை என்கிறது ஆய்வு. அதாவது இரவு 2 மணிக்கு படுத்து காலை 10 எழுந்தால் 8 மணி நேரம் தானே என்றால் அதுதான் இல்லை. இரவு 10 மணிக்கு முன்பாக படுத்து 8 மணி நேரம் தூக்கம் என்பதே உடல் ஆரோக்கியம் என சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது. நிறைவான உறக்கம், ப்ரெஷான அடுத்தநாள், இதயம் போன்ற உள் உறுப்புகளுக்கு ஆரோக்கியம் போன்ற தேவைகள் பூர்த்தி ஆகவேண்டுமென்றால் இரவு 10 மணிக்கு முன்பே படுக்கைக்குச் சென்று உறங்கிவிட வேண்டும் என்பதுதான் ஆய்வின் சாராம்சம். ஆனால் 10 மணிக்கு மேல் உணவு, அதற்கு மேல் கேட்ஜெட்டுகள் நடுஇரவில் உறக்கம், அடுத்த நாள் முன்பகலில் விழிப்பு என்பதெல்லாம் நம் உடலை குழப்பும் வேலை. பணி சார்ந்து கண்விழித்தல், எப்போதாவது தேவைக்காக கண் விழித்தல் என்பதைத் தாண்டி எந்த தேவையுமின்றி இரவெல்லாம் கண் விழித்துக்கிடப்பது நோயை விலைகொடுத்து வாங்கும் செயல் என்கின்றனர் மருத்துவர்கள்.

சரியான நேரத்தில் சரியான உணவு, உடற்பயிற்சி, அதற்கு பின் கேட்ஜெட்டுகளுக்கு விடுப்பு, சரியான நேரத்தில் படுக்கை இவைகளை பின்பற்றினால் தான் இன்றைய தலைமுறை ஆரோக்கியத்தில் பாஸ் ஆகலாம். நிலைமையை உணர்ந்து இளம் தலைமுறை விழித்துக்கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.