சிறப்புக் களம்

நீரிழிவு பிரச்னை உள்ளவரா? - இந்த உணவுகள் கட்டாயம் டயட்டில் இருக்கட்டும்!

Sinekadhara

சில உணவுகளை சாப்பிட்டு சில உணவுகளை தவிர்ப்பது ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவும். காய்கறிகள், பழங்கள் மற்றும் புரதச்சத்து நிறைந்த உணவுகள் நீரிழிவு மட்டுமல்லாமல் பல்வேறு பிரச்னைகளிலிருந்து பாதுகாக்கும்.

பொதுவாக சர்க்கரை மற்றும் ஸ்டார்ச் மாவுச்சத்து நிறைந்த உணவுகள் ரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும். ஆனால் அதே உணவுகளை சரியான அளவில் சமச்சீரான டயட்டில் எடுத்துக்கொள்வது கார்போஹைட்ரேட் அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவும். அதிலும் ஒருவருடைய உடலுழைப்பு மற்றும் மருந்துகளின் அளவை பொறுத்து உட்கொள்ளும் உணவுகளின் அளவும் இருக்கவேண்டும். மருத்துவரை அணுகும்போது ரத்த சர்க்கரை அளவை பொறுத்து என்னென்ன உணவுகளை எந்தெந்த அளவுகளில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதை மருத்துவர்கள் பரிந்துரைப்பர்.

பழங்கள் மற்றும் காய்கறிகள், கொழுப்பு குறைந்த புரதங்கள், சர்க்கரை குறைவான உணவுகள், டிரான்ஸ் கொழுப்புகளை தவிர்த்தல் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை மிகக்குறைந்த அளவே எடுத்துக்கொள்ளுதல் போன்றவை நீரிழிவு நோயை கட்டுக்குள் வைக்க உதவும் என்கிறது அமெரிக்க நீரிழிவு அசோசியேஷன்.

நீரிழிவு நோயாளிகள் அதிகம் எடுத்துக்கொள்ளக்கூடிய உணவுகள்:

பச்சை கீரைகள் மற்றும் காய்கறிகள்

பச்சை காய்கறிகள் மற்றும் கீரைகளில் வைட்டமின்கள், மினரல்கள் மற்றும் ஊட்டச்சத்துகள் நிறைந்திருக்கின்றன. மேலும் இது ரத்த சர்க்கரை அளவில் சிறிதளவே தாக்கத்தை ஏற்படுத்தும். கீரைகளில் பொட்டாசியம், வைட்டமின் ஏ மற்றும் கால்சியம் நிறைந்திருக்கிறது. மேலும் அவற்றில் புரதச்சத்தும் நார்ச்சத்தும்கூட நிறைந்திருக்கிறது. பச்சை கீரைகள் மற்றும் காய்கறிகளில் ஆண்டி ஆக்ஸிடண்டுகள் மற்றும் ஸ்டார்ச்சை செரிக்கும் நொதிகள் நிறைந்திருப்பதால் அவை சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்த உணவாக பார்க்கப்படுகிறது.

இது நீரிழிவு நோய்க்கு மட்டுமல்லாமல் உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கவும், ஹைபர் டென்ஷனிலிருந்து விடுபடவும் உதவுகிறது.

முழு தானியங்கள்

முழு தானியங்களில் நார்ச்சத்து மற்றும் ஊட்டச்சத்துகள் அதிகளவில் உள்ளன. நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் நார்ச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துகொள்வது அவசியம். ஏனெனில் நார்ச்சத்து செரிமான செயல்முறையை மெதுவாக நடத்துவதால் ஊட்டச்சத்துகள் உடலில் சேர்வதும் மெதுவாக சீராக நடக்கிறது. இது ரத்த சர்க்கரை அளவை நிலையாக வைத்திருக்க உதவுகிறது. வெள்ளை பிரட் மற்றும் அரிசியுடன் ஒப்பிடுகையில் முழு கோதுமை மற்றும் முழு தானியங்கள் க்ளைசெமிக் குறியீட்டில் குறைந்த அளவிலேயே உள்ளன. ரத்த சர்க்கரை அளவில் குறைந்த தாக்கத்தையே ஏற்படுத்தும் என்பதை இது காட்டுகிறது.

சிவப்பரிசி, முழு தானிய ப்ரெட், முழு தானிய பாஸ்தா, கோதுமை, தினை, சிறுதானியங்கள், உடைத்த கோதுமை மற்றும் கம்பு போன்றவற்றை சிறந்த உணவுகளாக மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

கொழுப்பு மீன்கள்

எந்தவகை டயட்டாக இருந்தாலும் நல்ல கொழுப்பு நிறைந்த மீன்கள் சிறந்த உணவாக பரிந்துரைக்கப்படுகிறது. இந்த மீன்களில் eicosapentaenoic அமிலம் மற்றும் docosahexaenoic அமிலம் போன்ற ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்திருக்கிறது. இதயம் மற்றும் மூளை நன்றாக வேலைசெய்ய நல்ல கொழுப்புகளை உடலில் சேர்த்துக்கொள்வது அவசியம். பாலிஅன்சாச்சுரேட்டட் மற்றும் மோனோஅன்சாச்சுரேட்டட் கொழுப்புகள் அதிகம் உள்ள உணவு, சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரத்த சர்க்கரை கட்டுப்படுத்தி, ரத்த லிப்பிட்களின் அளவை மேம்படுத்தும். சால்மன், கானாங்கெளுத்தி, மத்தி, அல்பாகோர், ஹெர்ரிங் மற்றும் ட்ரவுட் மீன் போன்றவற்றில் நல்ல கொழுப்புகள் நிறைந்திருக்கின்றன. இந்த மீன்களை வறுத்து சாப்பிடுவதற்கு பதிலாக வேகவைத்தோ அல்லது சுட்டோ சாப்பிடலாம். அதிலும் காய்கறிகளுடன் சேர்த்து சாப்பிடுவது இன்னும் சிறந்தது.

பீன்ஸ் வகைகள்

நீரிழிவு நோயாளிகளுக்கு பீன்ஸ் ஒரு சிறந்த உணவு. தாவர உணவாக இவற்றில் புரதம் நிறைந்திருக்கிறது. மேலும் வயிற்றை நிறைத்து பசியின்மையை ஏற்படுத்துவதால் கார்போஹைட்ரேட் அதிகம் சாப்பிடுவதை தடுக்கிறது. க்ளைசெமிக் குறியீட்டு அளவுகோலில் பீன்ஸ் குறைவாகவே இருப்பதால் ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைப்பதில் முக்கியப்பங்கு வகிக்கிறது. மேலும் பீன்ஸ் வகைகள் எடையை குறைத்து ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கவும் உதவுகிறது. பீன்ஸ்களில் இரும்புச்சத்து, பொட்டாசியம் மற்றும் மக்னீசியம் அதிகம் இருக்கிறது.

சிட்ரஸ் பழங்கள்

இந்த பழங்களை சாப்பிடுவது வைட்டமின்கள் மற்றும் மினரல்களை பெறுவதற்கான சிறந்த வழி. இதில் கார்போஹைட்ரேட்டுகள் இருக்காது. ஆரஞ்சு, திராட்சை மற்றும் எலுமிச்சை போன்ற பழங்களை சாப்பிடுவது நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லது. ஹெஸ்பெரிடின் மற்றும் நரிங்கின் எனப்படும் இரண்டு பயோஃப்ளவனாய்டு ஆன்டிஆக்ஸிடன்ட்கள் ஆரஞ்சு போன்ற சிட்ரஸ் பழங்களில் நிறைந்திருப்பதால் நீரிழிவு எதிர்ப்பு விளைவுகளை ஏற்படுத்துகின்றன. இதுதவிர சிட்ரஸ் பழங்களில் வைட்டமின் சி, ஃபோலேட் மற்றும் பொட்டாசியம் போன்றவையும் நிறைந்துள்ளன.

இவைதவிர, வால்நட்ஸ், பெர்ரீ பழங்கள் போன்றவையும் நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்த உணவு. அதேசமயம் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஒயிட் பிரட், குக்கர் சாதம், வெள்ளை அரிசி, ஒயிட் பாஸ்தா, வெள்ளை கிழங்குகள், பூசணிக்காய், பாப்கார்ன், முலாம்பழம் மற்றும் அன்னாசி போன்றவற்றை முடிந்தவரை கட்டுப்படுத்தலாம் அல்லது தவிர்த்துவிடலாம். இதுதவிர, சர்க்கரை, ட்ரான்ஸ் கொழுப்புகள், இனிப்பு பானங்கள், உப்பு அதிகமான உணவுகள், ஆல்கஹால் போன்றவற்றை முற்றிலும் தவிர்த்துவிட வேண்டும்.