தமிழ் சினிமா வட்டாரத்தில் கமல் ஒரு அறிவுஜீவியாக அடையாளம் காணப்படுகிறார். ஆம். அவர் பலரை விட அதிகமாக புத்தகம் படிக்கிறார் என்பது உண்மை. மேலும் பல மனிதர்களையும் படிக்கிறார். அதை தாண்டி ஒரு புதிய தொழில் நுட்பத்தையும் அவரால் படித்து வைக்க முடிந்திருக்கிறது. அவரது பல படங்களின் அந்த வாசனையை நாம் பார்க்க முடியும். ஆனால் அதில் சில தழுவல்கள் இருப்பது வெளிப்படை. எந்த ஒரு கலையும் ஒன்றை ஒன்று கடன் வாங்கிக் கொண்டு வெளியேறுவதுதான்.
உலகின் எங்கோ ஒரு மூலையில் ஒட்டிக் கொண்டிருக்கும் ஒரு பொருளை தேடிப்பிடித்து கொண்டு வந்து இந்திய சினிமாவில் அவரால் ஒட்ட வைத்துவிட முடியும். அவ்வை சண்முகிக்காக அவர் மேக் அப் போடுவதற்கு முன்பே பல ஒப்பனை சாதனங்களை வெளிநாட்டில் இருந்து வரவழைத்து அவர் ஒத்திகைப் பார்த்து கொண்டிருந்தார். அந்த விஷயம் பலருக்கும் தெரியாது.
ஹாலிவுட் படங்களை பற்றி அதிகம் அலசும் மதன் போன்ற எழுத்தாளர்கள் உலகை எழுத்தால் வாசித்து கொண்டிருந்தபோது, கமல் அதை ஒரு பொருளாக மாற்றி அதற்கு ஒரு உருவம் கொடுத்து கொண்டிருந்தார். அதை மதனே பலமுறை குறிப்பிட்டுப் பேசியிருக்கிறார். அவர் அவ்வை சண்முகிக்கு செய்த ஒப்பனை ஒத்திகையை மணிக்கணக்காக உட்கார்ந்து பார்த்து ரசித்தவர் மதன். அந்தளவுக்கு கமல் தேடல் மிகுந்தவர். அந்தத் தேடல் மூலம் சில அதிநவீன தொழில்நுட்பங்களை அவர் தருவித்து அதனை சினிமாவில் பயன்படுத்தி பார்த்திருக்கிறார்.
கமலால் இந்தியாவின் ஒரு பழைய பாரம்பர்ய விஷயத்தை தேடிக் கொண்டு வந்து சினிமாவில் புகுத்த முடியும். அதே போல ஒரு புதிய விஷயத்திற்கு உருவம் கொடுத்து காண்பிக்க முடியும். ஆனால் அதற்கு கமலை சுற்றி நிறைய நண்பர்கள் தேவை. அதனை சரியாக கண்டறிந்து அந்த நபர் உட்கார்ந்திருக்கும் ஒரு குக்கிராமத்திற்கே போய் தனக்கு வேண்டிய இடத்திற்கு கூட்டிக் கொண்டு வந்துவிடுவார் கமல். ஆரம்ப காலங்களில் சாதாரண சப்பாணியாக அவர் நடிக்க முடிவெடுத்தும் இந்தத் தைரியதால்தான். பாரதிராஜா ஸ்டியோவை விட்டு வெளியே வருவதற்கு முன்னாலேயே கமல் ஸ்டியோவை விட்டு வந்து ஷூட்டிங் நடத்திக் கொண்டிருந்தார் அதான் உண்மை. ஆனால் அந்த உண்மை உலகத்திற்கு முறையாக போய் சேரவில்லை. கமலால் ஒரு அறிவாளியை விரைவில் கண்டுபிடித்துவிட முடியும்.
கமலிடம் எப்போதும் ஒரு திறமை உண்டு. அரை மணிநேரம் அவர் அறையில் யார் உட்கார்ந்திருந்தாலும் அவர்களை அப்படியே கிரக்கித்து அவர் போலவே பிறகு உருமாறி விடுவார். சினிமாவிற்கு இந்த உன்னிப்பான கவனிப்புத் தேவைதான். அந்தத் திறமையில்தான் அவரே மெட்ராஸ் பாஷை பேசுகிறார். அவரே திருநெல்வேலி ஸ்லாங் பேசுகிறார். அவரால் தெலுங்கு பல்ராம் நாயுடுவாக மாற முடிகிறது. உடனே அவரால் அரசியல்வாதியாகவும் மாற முடிகிறது. குணா போல குரூரம் பேச முடிந்த அவரால் குருதிப்புனல் போல புலனாய்வு கதையிலும் சோபிக்க முடியும். வேட்டையாடவும் முடியும் வேட்டையை முடிக்கவும் முடியும். இந்தப் பன்முக போர்வைதான் அவரை பொதுவெளியில் ஒரு பொதுவான மனிதன் என்கிற அடையாளத்தை மீறி தள்ளி நிறுத்தி வைத்திருக்கிறது.
அவர் எது பேசினாலும் புரியவில்லை என பலரால் குறிப்பிடப்படுகிறது. தமிழிசை போன்ற ஒரு மாநில தலைவர் கமல் பேச்சுக்கு கோனார் உரை போடவேண்டும் என்கிறார். அன்றாடம் ஒரு மொழிக்குள் புழங்கும் தமிழிசை போன்றவர் இப்படி கூறுவதை கமல் கவனிக்கிறாரா? அதான் தெரியவில்லை. அவர் நமக்கு இருக்கும் அறிவுஜீவி அடையாளத்திற்கு இது இன்னும் கூடுதல் அந்தஸ்து கொடுக்கும் என்று சந்தோஷம் அடைந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. அங்கேதான் ஆபத்து உள்ளது.
கமல் இன்று இருப்பது தமிழ் பண்டிதர்கள் வாழும் தமிழ்நாட்டில் இல்லை. மிகமிக பாமர மக்கள் வாழும் தாய்நாடு இது. இங்கே நீங்கள் கபிலரை போல கவிதை படிக்கலாம். ஆனால் பொது ஜனங்களுடன் நீங்கள் பாமர மொழியில்தான் பாடம் படிக்க வேண்டும். கவிதை வாசகன் நாலு பேர் என்றால் மேடை பேச்சுக்கு நாலுகோடி பேர் பார்வையாளர்கள். அதை நாம் சொல்லவில்லை. பெரிய பெரிய தலைவர்களே சொல்லி இருக்கிறார்கள். அழகான தமிழில் மேடையை சிறப்பாக்கிய சத்தியமூர்த்தியை அதிக மக்கள் கேட்கவில்லை.’என்ங்கற? சொன்னங்கங்கறன்?’என மிக இயல்பான மொழியில் களமாடிய காமராஜைரைதான் மக்கள் விரும்பினார்கள்.
உலகமே இந்த விஷயங்களை பொது மக்களுக்கு சொல்லி புரிய வைக்க முடியுமா? என முட்டி மோதிக் கொண்டிருந்த காலத்தில் கவலையே படாமல் களத்தில் குதித்தவர் பெரியார். கம்யூனிஸ தத்துவங்களை பொதுமேடையில் போகிறப் போக்கில் உரக்கப் பேசி அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தவர் அவர். பாட சாலையில் புரியாத அறிவியல் கதைகளை பெரியார் பேசினால் புரியும். அந்தளவுக்கு அவர் அறிவை இலகுவாக்கி கொடுத்தார். காந்தியை எடுத்துக் கொள்வோம். அது கமலுக்கு அதிகம் பிடிக்கும் என்பதால் நிச்சயம் சொல்லலாம். காந்தி பொக்கை வாய் தெரிய பேசிய வார்த்தைகள் கேட்பதற்கே தனிக் காதுகள் வேண்டும். அவ்வளவு சன்னமாக பேசுவார் காந்தி. அதேசமயம் அவ்வளவு எளிமையாக பேசுவார். அதனால்தான் அவர் மகாத்மா. அந்த மகாத்மாவே பாமர பாஷையில் பேசியிருக்கும் போது நாம் ஏன் ரோம் மன்னர் போல் பேச வேண்டும். ரோமாபுரி பாண்டியன் போல் பேச வேண்டும்?
கமல் இன்று கலைஞர்தான் தனக்குப் பிடித்த பேச்சாளர் என்கிறார். ஆனால் அவர் அதற்கு முன் ம.பொ.சி.யை மனதார புகழ்ந்தவர். அந்த ம.பொ.சிக்கு அரசியல் களத்தில் அளவான சீடர்கள்தான் இருந்தார்கள். ஆனால் இலக்கிய களத்தில் அவருக்கு அளவுக்கு அதிகமாக பற்றாளர்கள் இருந்தார்கள். இப்போது கமல் போக போவது அரசியல் மேடைக்கா? அல்லது பட்டிமன்ற மேடைக்கா? பட்டிமன்றம் என்றால் மனப்பாடம் செய்த செய்யுள் போதும். அரசியல் மேடை என்றால் பெரிய செவி போதும்.
இதுபோக கமல் புதியதாக பாரதி வேஷம் போடுகிறார். பாரதி பிரபந்தம் படிப்பதற்கு முன்பே அண்ணாமலை ரெட்டியாரின் காவடி சிந்தை படித்தவர். சுப்ரபாதம் கேட்பதற்கு முன்பே சுப்பன் படித்த கும்மி பாட்டை படித்தவர். பாரதி சுதேசமித்திரனில் வேலைக்கு வந்தப் பிற்பாடுதான் அதன் மொழிநடையே மாறியது. அதுவரை பண்டித நடையில் இருந்த ஒவ்வொரு வார்த்தைக்கும் அவர் எளிய வார்த்தைகளை கண்டறிந்தார். இந்தியா பத்திரிகை அதிபர் மண்டயம் ஸ்ரீநிவாசாச்சாரியார் உள்ளிட்ட நண்பர்கள் உட்கார்ந்து மணிக்கணக்காக விவாதம் செய்தார்கள். என்ன விவாதம். புரியாத கடுமையான வார்த்தைக்கு எளிய தமிழ் சொற்களை கண்டுப்பிடித்து. அதை பத்திரிகையில் பயன்படுத்துவது. அதன் மூலம் பாமரனையும் பத்திரிகை படிக்க செய்வது. அப்படிதான் அவர் புதிய உலகம் கண்டார். சொல்புதிது, சுவை புதிது என்று மேலே சென்றார்.
அந்தக் காலத்தில் பாரதியின் பாடல்களை பண்டிதர்கள் ஏற்கவில்லை. ஆனால் அவர் அதை குறித்து கவலை கொள்ளவில்லை. பாரதிக்கு எளிய பதம் தேவை. எவன் எதை சொன்னாலும் அவருக்கு மனக் கசப்பு இல்லை. தமிழ், தமிழ் என வாழ்ந்தவன் பாரதி. காசியில் இருந்து மனைவிக்கு கடிதம் போட்ட பாரதி, ‘நீ தினமும் தமிழ் படித்தால் மகிழ்வேன்’ என்றான். தமிழச்சியைக் காட்டிலும் பிறர் அழகாக இருந்தால் மனம் வலிக்கிறது என்றான். அவனது தம்பி சி.விஸ்வநாத ஐயருக்கு ‘இனிமேல் எனக்கு இங்கிலீஷ் காகிதம் எழுதாதே, நாலு வார்த்தை என்றாலும் தமிழில் போடு. அது கொச்சையாக இருந்தாலும் நான் மகிழ்வேன்’என்றான்.
அந்தளவுக்கு தமிழ்ப் பித்து பிடித்தவன் பாரதி. அந்தத் தமிழ்ப் பித்து எளிமயாக இருக்க வேண்டும். ஆனால் பாரதி வேஷம் போட்டுக் கொண்டு கமல் பரிமேலழகரை போல தமிழ் எழுத முயற்சிப்பதுதான் கவலை அளிக்கிறது. அதோடு அவர் போடும் ஒவ்வொரு பதிவிலும் அத்தனை எழுத்து பிழை. தமிழ்ப் படித்து சாக வேண்டும் என சொன்னவன் தமிழ்புலவன். அந்த ஊரில் இவர் தவறாக தமிழ் எழுதுவது தகுமா?
பாரதி வேஷத்தில் கமல் இருக்கிறார். ஆனால் பாரதியாராகவே அவர் இருப்பாரா?