(கோப்பு புகைப்படம்)
யாசகர்களின் வாழ்வியலைச் சுக துக்கங்களோடு தத்ரூபமாக படம் பிடித்திருக்கும், இயக்குநர் சசி படைப்பில் உருவான ‘பிச்சைக்காரன்’ திரைப்படம்.
பெரும்பாலும் மக்கள் அதிகம் கூடுகின்ற இடங்களிலேயே இவர்களுக்கு வேலை இருக்கும். தற்போது கொரோனாவினால் பொது இடங்களில் மக்கள் கூடுவது தவிர்க்கப்பட்டு வரும் சூழலில் அவர்களை நம்பியே தனது வயிற்றுப் பசியை ஆற்றி வரும் மக்கள் பெரிதும் சிரமப்பட்டுள்ளனர். இந்நிலையில் புதுச்சேரி, மிஷன் வீதியில் அமைந்துள்ள மாதா கோவில் அருகில் உள்ள நடைபாதையில் தங்கியிருக்கும் யாசகர் ஒருவரிடம் பேசினோம்….
“தம்பி என் பேர் சுப்பிரமணி. சொந்த ஊர் ராமேஸ்வரம். எழுபது வயசாகுது. கல்யாணம் ஆகிடுச்சு. இருந்தாலும் அது மனசுக்கு நிறைவா இல்லாததுனால பிரிஞ்சிட்டோம். ஒரு கட்டத்துல எனக்கு வாழ்க்கையே வெறுமையா போகிடுச்சு. உடனே வீட்ட விட்டு கிளம்பிட்டேன். இந்தியா பூரா நாடோடியா பயணம் செய்திருக்கேன். டெல்லி வர போயிருக்கேன். தமிழ் மட்டும் தான் தெரியும். பாண்டிச்சேரிக்கு வந்து நாலு வருஷம் ஆகுது. வயிற்றுப் பசிக்காக தான் இதை செய்யுறேன். ஒரு கால் லேசா வராது. தினமும் காலையில இருந்து பொழுது சாயுற வரை, கோயில் வாசல்ல இருப்பேன். அங்க வர்றவங்க எதாவது தர்மம் பண்ணுவாங்க. அதுல கிடைக்குற நாலு காசுல சாப்பிடுவேன். அது போக அந்த சில்லறை காசையே தூங்கும் போது தலைக்கு வெச்சு தூங்குவேன்.
கொரோனா கட்டுப்பாட்டுனால கோயிலுக்கு ஆள் வர்றது இல்ல. ஆரம்பத்துல கொஞ்ச நாளைக்கு என்ன மாதிரி இருக்குற ஒரு அறுபது பேர தங்க வெச்சு சாப்பாடு கொடுத்தாங்க. இப்போ அதுவும் இல்ல. பாண்டிச்சேரியில கோயில் எல்லாம் திறந்திருக்கு. இருந்தாலும் பழையபடி கூட்டம் இல்ல. ஆனா ஒன்னு தம்பி இந்த நேரத்துல எங்களையும் இந்த சமுதாயத்துல சக மனுஷனா மதிச்சு சில நல்லுள்ளம் படச்சவங்க எங்களுக்கு செய்த உதவிய மறக்க முடியாது” என்றார்.
இவரைப் போலவே மேலும் பலர் கொரோனாவினால் சொல்ல முடியாத துயரங்களைச் சந்தித்து வருகின்றனர். அவர்களுக்கு அடைக்கலம் கொடுக்க அரசாங்கம் தகுந்த முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும்.