சிறப்புக் களம்

விளையாடுவதற்கு அல்ல; வானிலை அறிக்கை!

விளையாடுவதற்கு அல்ல; வானிலை அறிக்கை!

webteam

இரண்டு நாட்களுக்கு முன்னர் இந்திய வானிலை ஆய்வு மையம் தமிழகம், புதுவை மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களுக்கு "சிவப்பு எச்சரிக்கை" விடுத்திருந்தது. இன்று சில மாவட்டங்களை "சிவப்பு எச்சரிக்கை" யிலிருந்து விடுவித்து இருக்கிறது. 

"சிவப்பு எச்சரிக்கை" என்பது அதி கனமழை பொழிய அதிக வாய்ப்பு இருக்கும். அதனால் இடையூறுகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கவும், அதிக சேதத்தில் இருந்து தப்பித்துக் கொள்ளவும், முன்கூட்டியே வரும் சூழலுக்குத் தயார் படுத்திக்கொள்ளவும் விடுக்கப்படும் எச்சரிக்கை ஆகும்! அதிகனமழை என்பது ஏறத்தாழ கணித்தப் படியே பொழியும். 

சிலர் "சிவப்பு எச்சரிக்கை" அறிவிப்பால் ஏற்பட்ட அச்சத்தைப் போக்குவதற்காக எண்ணி சமூக வலைத்தளங்களில் சிவப்பு எச்சரிக்கைப் பற்றிக் கவலைப் படத் தேவையில்லை. பல நேரங்களில் அவ்வாறு நடப்பது இல்லை. ஆகையால் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்ற தொனியில் எழுதுகிறார்கள்.

இன்று சிவப்பு எச்சரிக்கை பல மாவட்டங்களில் திரும்பப் பெற்றப்போதும் சமூக வலைத்தளங்களில் கேலியும், கிண்டலும் செய்கிறார்கள்.

வானிலை ஆய்வு மையங்கள் சமூக வலைத்தளங்களில் சொல்லப்படுவது போல ஏனோ தானோ என்று அறிக்கைகள் சொல்வதில்லை. அவர்கள் ஒவ்வொரு நொடி மாற்றத்தையும் அறிவியல்பூர்வமாக அணுகுகிறார்கள். ஒவ்வொரு நொடி மாற்றத்தையும் கவனத்தில் எடுத்துக் கொண்டு விளைவுகளை கணிக்கிறார்கள். 

புயலைப் பொறுத்த மட்டில் காற்றின் திசையைப் பொறுத்தும், வேகத்தைப் பொறுத்தும் மாற வாய்ப்புள்ளதால் வானிலை ஆய்வு மையத்தினர் துல்லியமாக கணித்தால் கூட, அவர்கள் அதை உறுதியாக சொல்ல மாட்டார்கள். உதாரணமாக ஹூட் ஹூட் புயலின் போது உலகில் உள்ள மற்ற வானிலை மையங்கள் கணிப்பை விட இந்திய வானிலை மையம் அப்புயல் கடக்கும் தூரத்தையும், வேகத்தையும் துல்லியமாக கணித்து சொல்லியிருந்தனர்.

இந்திய வானிலை மையமும் தன்னிச்சையாக இயங்காது. உலகளவில் இருக்கும் பல வானிலை மையங்களிலிருந்து பெறும் தகவல்களை உள்ளீடாகக் கொண்டு இங்கு சோதனைக்குட்படுத்தி கணிக்கத் தொடங்குவார்கள். மற்ற நாடுகளின்  அறிக்கைகளுடனும், தாக்கத்துடன் ஒப்பீட்டுத் தான் இங்கு அறிக்கை வழங்குவார்கள். அவர்கள் பணி அளப்பரியது.

கேரள மழையையும், ஒக்கி புயலையும் முன்கூட்டியே அறிவிக்காததன் விளைவையும், இழப்புகளையும் நாம் அறிவோம். 

முன்கூட்டியே அறிவிப்பு வருவது நம்மை அச்சப்படுத்தல்ல! நம்மை ஆற்றுப்படுத்த! 

தயவு செய்து விளையாட்டாக கையாளாதீர் வானிலை அறிக்கைகளை! விளையாடுவதற்கு அல்ல வானிலை அறிக்கை!