இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் உலகின் ஏழு நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்குள் வரத் தடை விதித்த அதிபர் டொனால் ட்ரம்ப்பின் உத்தரவுக்கு பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களும் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். அதேபோல அகதிகளை ஏற்பதிலும் ட்ரம்ப் விதித்துள்ள கட்டுப்பாடும், எதிர்ப்புகளை சம்பாதித்திருக்கிறது.
இந்தநேரத்தில் அமெரிக்காவின் அடையாளமாகிப் போன பல்வேறு துறைகளைச் சேர்ந்த முன்னோடிகள் வெளிநாட்டு பின்புலம் கொண்டவர்களே என்ற கருத்தும் வலுவாக முன்வைக்கப்படுகிறது. அவர்களில் சிலர் குறித்து பார்க்கலாம்.
ஸ்டீவ் ஜாப்ஸ் (ஆப்பிள் நிறுவனர்):
உலகின் மதிப்புமிக்க நிறுவனங்களில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படும் ஆப்பிள் நிறுவனத்தின் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸின் தந்தை சிரியாவில் இருந்து அமெரிக்காவுக்கு இடம் பெயர்ந்தவர். தொழில்நுட்பத் துறையில் முன்னோடியான ஸ்டீவ் ஜாப்ஸ் இல்லாமல் ஆப்பிள் நிறுவனம் உருவாகியிருக்க வாய்ப்பில்லை.
ஜோசப் புலிட்சர் (பத்திரிகையாளர்):
இதழியல் துறையின் உயர்ந்ததாகக் கருதப்படும் புலிட்சர் பரிசு இவரது பெயராலேயே ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. ஹங்கேரியில் பிறந்த இவர் தந்தை மறைவுக்குப் பிறகு தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக அமெரிக்க ராணுவத்தில் பணிக்கு சேர்ந்தார். பின்னர் பத்திரிகை துறையில் நுழைந்த இவர், அந்த துறையில் தனது பெயரை அழுத்தமாகப் பதிவு செய்தார். இதழியல் துறையின் வரலாற்றை இவரது பெயரைத் தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலக அளவில் இதழியல் படிப்பினை வழங்கும் கல்விநிறுவனங்களில் முக்கியமான இடத்தைப் பிடித்துள்ள கொலம்பியா இதழியல் கல்வி நிறுவனம் இவரால் தொடங்கப்பட்டதே.
ஜெர்ரி யாங் (யாஹூ நிறுவனர்):
தைபேயில் பிறந்த ஜெர்ரி யாங்க்குக்கு எட்டு வயதாக இருக்கும்போது அமெரிக்காவின் கலிபோர்னியாவுக்கு அவரது குடும்பம் இடம்பெயர்ந்தது. ஷூ (Shoe) என்ற ஒற்றைச் சொல்லைத் தவிர வேறெந்த ஆங்கில வார்த்தையும் தெரியாமல் அமெரிக்காவுக்குள் காலடி எடுத்து வைத்தை ஜெர்ரி, உலகின் பிரபலமான யாஹூ தேடுபொறியைக் கடந்த 1995ம் ஆண்டு வடிவமைத்தார்.
சுந்தர் பிச்சை (கூகுள் நிறுவன தலைமை செயலதிகாரி):
சென்னையில் பிறந்த இவர், தனது அபார திறமையால் உலகின் மிகப்பெரிய இணைய தேடுபொறி வசதியை வழங்கி வரும் கூகுள் நிறுவனத்தின் தலைமை செயலதிகாரியாக இன்று பணியாற்றி வருகிறார். மேல்படிப்புக்காக அமெரிக்கா சென்ற சுந்தர், பல்வேறு கலாசார அடையாளங்களைக் கொண்டவர்களின் அடையாளமாகத் திகழும் கூகுளின் முகமாக உலக அளவில் முன்னிறுத்தப்படுகிறார். ட்ரம்ப்பின் உத்தரவு குறித்து தனது நிறுவன ஊழியர்களுக்கு எழுதிய கடிதத்தில் வருத்தத்தினையும் பதிவு செய்துள்ளார்.
இந்திரா நூயி (பெப்சி நிறுவனத்தின் தலைமை செயலதிகாரி):
குளிர்பான உலகில் கோலோச்சும் பெப்சி நிறுவனத்தின் தலைமை செயலதிகாரியான இந்திரா நூயி, சுந்தர் பிச்சையைப் போலவே சென்னையைச் சேர்ந்தவர். கடந்த 1994ம் ஆண்டில் பெப்சி நிறுவனத்தில் இணைந்த நூயி, தனது கடின உழைப்பால் 2001ம் ஆண்டு அந்த நிறுவனத்தின் தலைமை செயலதிகாரியாக உயர்ந்தார். வணிகரீதியிலான கொள்கைகளை வகுக்கும் 19 பேர் கொண்ட குழுவில் இடம்பெற்றுள்ள ஒரே இந்திய-அமெரிக்கரான இவர் மட்டுமே. அகதிகள் குறித்த உத்தரவு குறித்து கருத்து எதுவும் கூறாததற்கும் இதுவே காரணமாக அறியப்படுகிறது.
செர்ஜி பிரின் (கூகுள் நிறுவனர் மற்றும் அதன் தாய் நிறுவனமான ஆல்பபெட் நிறுவனத்தின் தலைவர்)
உலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் கூகுள் நிறுவனத்தின் தானியங்கி கார்கள் மற்றும் கூகுள் க்ளாஸ் ஆகியவற்றின் வடிவமைப்பில் முக்கிய பங்குவகிக்கும் செர்ஜி பெரினின் முன்னோர்கள் சோவியத் ரஷ்யாவில் இருந்து அமெரிக்காவுக்கு கடந்த 1979ம் ஆண்டு இடம்பெயர்ந்தவர்கள். ட்ரம்ப்பின் உத்தரவு குறித்து கருத்து தெரிவித்த பிரின், நான் ஒரு அகதி என்பதாலேயே இங்கு இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.
ஜான் கோவும் (வாட்ஸ் அப் நிறுவனத்தின் இணை நிறுவனர்):
சமூக வலைதளங்களில் முன்னணியில் இருக்கும் வாட்ஸ் நிறுவனத்தை உருவாக்கியதில் முக்கிய பங்குவகித்த ஜான் கோவுமின் பெற்றோர் வறுமை காரணமாக உக்ரைனிலிருந்து அமெரிக்காவுக்கு இடம்பெயர்ந்தவர்கள்.