சிறப்புக் களம்

காங்கிரஸ் கட்சி தன் இயல்பை இழக்கக்கூடாது – தமாகா துணைத்தலைவர் பி.எஸ். ஞானதேசிகன் பேட்டி!

காங்கிரஸ் கட்சி தன் இயல்பை இழக்கக்கூடாது – தமாகா துணைத்தலைவர் பி.எஸ். ஞானதேசிகன் பேட்டி!

sharpana

சோனியா காந்தியின் ’இடைக்கால’ காங்கிரஸ் தலைவர் பொறுப்பு முடிவடைந்ததையடுத்து காங்கிரஸ் கட்சியின் தலைவர் யார்? என்பதில் சர்ச்சை வெடித்திருக்கிறது. இந்நிலையில், தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவராக இருந்தவரும், தமிழ் மாநிலக் காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவருமான ஞான தேசிகனிடம் பேசினோம்,

கொரோனா சூழலில் என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள்?

கொரோனா எல்லோரையும் முடக்கிப்போட்டுவிட்டது. அதனால், அரசியல் செயல்பாடுகள் இல்லை. வழக்கறிஞர் என்பதால் எனது அலுவலகத்தில் இரண்டு மணிநேரம் வந்து பணிகளைப் பார்க்கிறேன்.

முன்னாள் காங்கிரஸ் தலைவராக இருந்ததால் கேட்கிறேன். காங்கிரஸ் தலைவர் பதவி, இப்போது சர்ச்சையாகியிருப்பதை எப்படி பார்க்கிறீர்கள்?

யார் தலைவர் என்பதை அந்தக் கட்சியினர்தான் முடிவு செய்யவேண்டும். கட்சியில் இல்லாத நான் கருத்துக் கூறுவது நாகரீகமாக இருக்காது. ஆனால், காங்கிரஸ் ஒரு தேசியக் கட்சி. அது தன்னுடைய இயல்பை இழக்காமல் இந்திய அரசியலில் பணியாற்றுவது ஜனநாயகத்துக்கு நல்லது.

ட்சியில் இருக்கும் வரை காங்கிரஸில் இருந்துவிட்டு, ஆட்சியில் இல்லாதபோது தமாகாவை ஆரம்பித்த வாசனும் அவரோடு இணைந்த நீங்களும் செய்தது சுயநலமாகாதா?

வி.பி சிங், ஜெயப்பிரகாஷ் நாராயணன், மம்தா பானர்ஜி, சரத்பவார் என நிறையப் பேர் காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியில் சென்றுள்ளனர். சிலர் விரும்பி வந்திருக்கிறார்கள். சிலர் கூட்டணி வைத்திருக்கிறார்கள். சிலருக்கு நிரந்தர பிரிவாகவும் உள்ளது. அதேபோல, தி.கவிலிருந்து திமுக பிரிந்தது. திமுகவிலிருந்து அதிமுக உருவானது. அதனால், காலத்திற்கேற்றபடி சில மாறுதல்கள் வருகின்றன. மாற்றங்கள் அரசியலில் தவிர்க்க முடியாதது. நான் மூப்பனாருக்காகத்தான் தமாகாவிற்கு வந்தேன். வேறொன்றும் இல்லை.

ஆனால், தமாகாவுக்கு மக்களிடத்தில் வரவேற்பு இல்லையே?

வரவேற்பு என்பது சிலக் கட்சிகளுக்கு உடனே வரும். சிலக் கட்சிகளுக்கு தாமதமாக வரும். அரசியல் என்பது பீட்சா மாதிரி. எப்படி வரும் என்பது காலம்தான் முடிவு செய்யும். ஆனால், எங்கள் கட்சி பலகீனமாக இல்லை என்பதை மட்டும் சொல்வேன். தமாகாவை சட்டமன்ற எண்ணிக்கையை வைத்து முடிவு செய்ய முடியாது. ஆனால், கட்சியில் நிர்வாகிகள், தொண்டர்கள், முன்னாள் சட்டமன்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் மாவட்ட அளவில் நல்ல முறையில் பணியாற்றிக்கொண்டிருக்கிறார்கள்.  எங்கள் கட்சி இன்னும் அதிகமாக பணியாற்றவேண்டும் என்பதை நான் ஒத்துக்கொள்கிறேன். ஆனால், பலகீனமாக இருப்பது என்பதை மட்டும் ஏற்றுக்கொள்ள் மாட்டேன்.

காங்கிரஸில் இருக்கும்போது பாஜகவை எதிர்த்தீர்கள். இப்போது, அதே கூட்டணியில் இருக்கிறீர்களே?

நாங்கள் அதிமுக கூட்டணியில் இருக்கிறோம். பாஜகவும் கூட்டணியில் இருக்கிறது. அவ்வளவுதான். திமுகவும்தான் பாஜகவுடன் ஆட்சியிலும் அதிகாரத்திலும் இருந்தார்கள். இப்போது, காங்கிரஸில் இருக்கிறார்கள். வாஜ்பாய்காகத்தான் பாஜக கூட்டணியில் இருந்தோம் என்று திமுக சொல்லும் காரணத்தை ஏற்றுக்கொள்ள முடியுமா? அரசியல் என்பது காலத்திற்கேற்ப சூழ்நிலைக்கேற்ப பல்வேறு நிகழ்வுகளுக்கு ஏற்ப மாறுதல்களுக்கு உட்பட்டது. இந்திய அரசியலில் மாறுதல் நடந்துகொண்டேதான் இருக்கிறது. 1969 ஆம் ஆண்டு காங்கிரஸில் இந்திரா காந்தி, காமராஜர் தனித்தனி ஆனார்கள். அதனால், பிரிவுகள் என்பது காங்கிரஸ் கட்சிக்கு புதிதல்ல.

- வினி சர்பனா