சிறப்புக் களம்

PT Web Explainer: ஆஸ்திரேலிய அரசுடன் ஃபேஸ்புக் சமரசம்... நடந்தது என்ன, யாருக்கு வெற்றி?

webteam

கிரிக்கெட், டென்னிஸ் உள்ளிட்ட விளையாட்டிற்கான ஆடுகளங்கள் மூலம் உலகின் கவனத்தை ஈர்த்திருக்கும் ஆஸ்திரேலியா அண்மைக்காலமாக, தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் அரசுக்கு இடையிலான மோதலுக்கான ஆடுகளமாக அமைந்து, சர்வதேச அளவில் பேசுபொருளாகி இருக்கிறது. இந்த மோதலில் எதிர்பாராத திருப்பமாக, 'ஆஸ்திரேலியாவில் செய்திகளை முடக்குவோம்' என வீராப்பு காட்டிய ஃபேஸ்புக் நிறுவனம் அந்த முடிவை மாற்றிக்கொண்டிருக்கிறது. அதேநேரத்தில் ஆஸ்திரேலிய அரசும் தனது நிலையில் கொஞ்சம் இறங்கி வந்ததால்தான் சமசரம் சாத்தியமானதாக சொல்கின்றனர்.

ஆஸ்திரேலிய அரசுக்கும் ஃபேஸ்புக் நிறுவனத்துக்கும் என்ன பிரச்னை? இதில் ஏற்பட்ட சமரசம் என்ன? உண்மையில் இந்த பிரச்னையில் விட்டுக்கொடுத்தது யார்? வெற்றி பெற்றது யார்? - இந்தக் கேள்விகளுக்கான பதில்களை ஒவ்வொன்றாக அலசிப் பார்க்கலாம்.

ஆஸ்திரேலிய அரசுக்கும், ஃபேஸ்புக்கிற்கும் மட்டும் அல்ல பிரச்னை. ஃபேஸ்புக், கூகுள் உள்ளிட்ட தொழில்நுட்ப பெரும் நிறுவனங்களுக்கு எதிராக ஆஸ்திரேலிய அரசுக்கும் இடையிலான பிரச்னை இது. உண்மையில், 'மற்ற நாடுகள் சார்பாக தொழில்நுட்ப நிறுவனங்களுடம் நாங்கள் மல்லு கட்டுகிறோம்' என்கிறது ஆஸ்திரேலியா.

இதற்கு அடிப்படையாக அமைந்திருப்பது ஆஸ்திரேலியாவில் கொண்டு வரப்பட உள்ள புதிய சட்டம். கூகுள், ஃபேஸ்புக் உள்ளிட்ட பெரு நிறுவனங்கள் இணைய செல்வாக்கால் கொள்ளை லாபம் ஈட்டி வரும் நிலையில், இந்த சேவைகளின் வாயிலாக பகிரப்படும் செய்திகளை வெளியிடும் செய்தி ஊடக நிறுவனங்கள் நஷ்டத்திற்கும், வருவாய் இழப்பிற்கும் உள்ளாகி வருகின்றன.

இதை 'தப்பாட்டம்' என கருதும் ஆஸ்திரேலியா, தொழில்நுட்ப நிறுவனங்கள், செய்தி ஊடக நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு, அவற்றுடன் வருவாயை பகிர்ந்துகொள்ள வேண்டும் என கூறுகிறது. இதற்கான புதிய சட்டம் கொண்டு வரப்படவுள்ளது.

செய்தி ஊடக நிறுவனங்களுடன் செய்திப் பகிர்வுக்காக ஒப்பந்தம் செய்துகொள்ள நேர்ந்தால், தனது வருவாய் பாதிக்கப்படுவதோடு, இணைய ஆதிக்கமும் கேள்விக்குறியாகும் என கருதிய கூகுள், ஏற்கெனவே இது தொடர்பாக ஆஸ்திரேலிய அரசுடன் மோதலில் ஈடுபட்டு, பின்னர் சமரசம் செய்து கொண்டுள்ளது.

இந்நிலையில், முன்னணி சமூக ஊடக நிறுவனமான ஃபேஸ்புக், ஆஸ்திரேலிய அரசுடன் தன் பங்கிற்கு முறுக்கிக் கொண்டது. புதிய சட்டம் அமலுக்கு வந்தால் தனக்கு பெரும் பாதிப்பு உண்டாகும் என கருதிய ஃபேஸ்புக், ஆஸ்திரேலியாவில் ஃபேஸ்புக் பக்கங்களில் செய்திப் பகிர்வை தடை செய்வதாக அறிவித்தது. அதாவது, தனது மேடையில் ஆஸ்திரேலிய செய்திகளை பிளாக் செய்தது.

இதன் பொருள், ஆஸ்திரேலிய ஊடக நிறுவனங்கள் ஃபேஸ்புக்கில் செய்திகளை வெளியிட முடியாது மற்றும் பயனாளிகள் செய்திகளை பகிர்ந்துகொள்ள முடியாது.

ஆஸ்திரேலியாவில் இருந்து தேடல் சேவையை விலக்கி கொள்வோம் என கூகுள் அண்மையில் மிரட்டி, பின்னர் தனது முடிவை கைவிட்டது என்றால், ஃபேஸ்புக் அதற்கு ஒரு படி மேல் சென்று ஆஸ்திரேலியாவை 'அன்பிரண்ட்' செய்தது. உலக அளவில் இது தலைப்புச்செய்தியாகி சூடாக விவாதிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது ஃபேஸ்புக் மீண்டும் ஆஸ்திரேலியாவுடன் நட்பாகி இருக்கிறது.

ஆஸ்திரேலியாவில் தனது மேடையில் செய்திகள் மீண்டும் இடம்பெறத் துவங்கும் என ஃபேஸ்புக் அறிவித்துள்ளது. ஆஸ்திரேலிய எம்பிக்கள் மற்றும் ஃபேஸ்புக் நிர்வாகிகள் இடையே நடைபெற்ற தொடர் பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட கடைசி நேர சமரசத்தின் அடிப்படையில் ஃபேஸ்புக் தனது தடையை திரும்ப பெற்றுள்ளது.

அதேநேரத்தில் ஆஸ்திரேலிய அரசும் அதிகம் விட்டுக் கொடுத்துவிடவில்லை என்று சொல்லிக்கொள்கிறது.

இந்த சம்சரச ஏற்பாட்டின் முக்கிய அம்சம் என்னவென்றால், செய்தி நிறுவனங்களுடன் உடன்பாடு செய்துகொண்டு ஃபேஸ்புக், அவற்றின் செய்திகளுக்கு கட்டணம் செலுத்தும். ஆனால், இந்த உடன்பாட்டை மேற்கொள்ளும் உரிமையை ஃபேஸ்புக் தக்கவைத்துக் கொண்டுள்ளது. அதாவது, எந்த செய்தி ஊடக நிறுவனத்துடன் உடன்பாடு செய்வது, எந்த செய்தி ஊடக நிறுவனத்தை நிராகரிப்பது எனும் உரிமை ஃபேஸ்புக் வசமே இருக்கும்.

இதற்கேற்ற வகையில் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர ஒப்புக் கொள்ளப்பட்டதை அடுத்து, ஃபேஸ்புக்கும் மனம் மாறியிருக்கிறது.

சரி, இந்த பிரச்னையில் யாருக்கு வெற்றி கிடைத்திருக்கிறது?

- இது கொஞ்சம் சிக்கலான கேள்விதான். ஆஸ்திரேலிய அரசை பொறுத்தவரை, தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு கடிவாளம் போடுவதில் வெற்றி பெற்றிருப்பதாக கருதலாம். ஆஸ்திரேலியாவை பின்பற்றி மற்ற நாடுகளும் இப்படி கூகுள், ஃபேஸ்புக்குடன் மல்லு கட்ட முற்படலாம் என கருதப்படுகிறது.

இது நிச்சயம் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு எதிரான மோதலில் கிடைத்துள்ள முக்கிய வெற்றிதான். ஆனால், அதேநேரத்தில் தொழில்நுட்ப நிறுவனங்களின் செல்வாக்கு இதனால் லேசாக அடிவாங்கியுள்ளதே தவிர, அவற்றின் ஆதிக்கம் குறைந்துவிடவில்லை என்றும் கருதப்படுகிறது.

ஒரு நாட்டின் அரசு கொண்டு வர உத்தேசித்துள்ள சட்டத்தை எதிர்த்து, அந்நாட்டில் செய்திகளை முடக்குவோம் என ஒரு நிறுவனம் மிரட்ட முடிவதே அதன் ஆதிக்கத்திற்கான அடையாளமாக கொள்ளலாம்.

செய்திகளை ஊடகங்கள் உருவாக்கும் நிலையில், தங்கள் மேடையின் வீச்சு மூலம் செய்திகளை வெளியிட்டு, விளம்பர வருவாயை சமூக ஊடக நிறுவனங்கள் அள்ளுகின்றன எனும் கருத்து வலுவாகவே முன்வைக்கப்படுகிறது. செய்திகளால் தொழில்நுட்ப நிறுவனங்கள் லாபம் பார்க்கும் நிலையில், அவற்றை உருவாக்கிய செய்தி ஊடகங்களுடன் வருவாயை பகிர்வதுதானே முறை என வாதிடப்படுகிறது.

ஆனால் ஃபேஸ்புக்கோ, செய்தி நிறுவனங்கள் மூலம் தனக்கு கிடைக்கும் ஆதாயம் குறைவு, உண்மையில் செய்தி நிறுவனங்களுக்கான போக்குவரத்தை தனது மேடை அளிக்கிறது என வாதிட்டுள்ளது. கூகுளும் இதேபோன்ற வாதத்தை முன்வைத்தது.

ஃபேஸ்புக் தனது நிலையில் பிடிவாதமாக இருந்த சூழலில், இருதரப்புக்கும் இடையே இப்போதைக்கு சமரசம் ஏற்பட்டுள்ளது. ஆனால், விட்டுக்கொடுத்தது யார், விடாக்கொண்டனாக இருப்பது யார் என்பது போகப்போகத்தான் தெரியும்.

ஆனால் ஒன்று... கூகுள், ஃபேஸ்புக் (ஆப்பிளும், அமேசானும்தான்), உள்ளிட்ட தொழில்நுட்ப நிறுவனங்களின் ஆதிக்கம் நாடுகளின் எல்லை கடந்ததாக இருப்பதும், அவை அரசுகளுடன் மல்லு கட்டத் தயாராக இருப்பதும் நம் காலத்து புதிய யதார்த்தமாக இருக்கிறது. இதன் விளைவுகளை முழுவதுமாக கட்டுப்படுத்தும் ஆற்றல் உலகிற்கு இருக்கிறதா என்பதே முக்கியமான கேள்வி.

- சைபர்சிம்மன்