சிறப்புக் களம்

ஷாக் கொடுக்கும் கரண்ட் பில்.. தவறு நடப்பது எங்கே? மின்கட்டணம் எப்படி நிர்ணயிக்கப்படுகிறது?

கலிலுல்லா

மின் கட்டணம் உயர்த்தப்படவில்லை, இருந்தும் மின் கட்டணம் வழக்கத்தை விட மிக அதிகமாக வந்துள்ளது என்ற புகார்கள் 14 லட்சத்திற்கும் மேலான வாடிக்கையாளர்களிடமிருந்து மின் சேவை மையமான மின்னகத்திற்கு வந்துள்ளது. வழக்கம்போல் 2 மாதங்களுக்கு ஒருமுறை ரீடிங் எடுக்காததால், மின்கட்டணம் உயர்ந்துள்ளதாக நுகர்வோர்கள் குற்றம் சாட்டியிருக்கின்றன. நுகர்வோரின் குற்றச்சாட்டு குறித்தும், மின்வாரியத்தின் விளக்கம் பற்றியும் பார்க்கலாம்.

இந்த நிலையில், மதுரையில் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை 800 ரூபாய் மின் கட்டணம் செலுத்தி வந்த ஒரு வருவர், தற்போது 11 ஆயிரம் ரூபாய் மின் கட்டணம் வந்திருப்பதாக புகார் அளித்துள்ளார். இது குறித்து மின்வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்து வரும் நிலையில், ஆயிரத்திற்குள் கட்டணம் செலுத்தி வந்த பலருக்கும் 6000 ரூபாய் வரை கட்டணம் வந்துள்ளது. இந்த அளவிற்கு இல்லாவிட்டாலும், வழக்கத்தை விட மின் கட்டணம் அதிகமாக இருப்பதாக 14 லட்சத்திற்கும் அதிகமான மின் நுகர்வோர் புகார் அளித்துள்ளனர்.

வழக்கமாக 2 மாதங்களுக்கு ஒரு முறை மின்கணக்கெடுப்பு நடைபெறும். இந்த கணக்கீடு ஓரிரு நாட்கள் தள்ளிப்போனாலே, கட்டணம் அதிகரித்து விடுவதாக நுகர்வோர்கள் குற்றம் சாட்டுகின்றனர். உதாரணமாக ஒருவரின் இல்லத்தில் 199 அதாவது 200 யூனிட்டிற்கு உள்ளாக மின்சாரம் பயன்படுத்தினால், முதல் 100 யூனிட்க்கு மானியம் போக, 170 ரூபாய் மட்டுமே கட்டணம் செலுத்த வேண்டும். அதுவே கணக்கீடு செய்வது மூன்று, நான்கு நாட்கள் தள்ளிப்போனால் அவரது மின்பயன்பாடு 220 யூனிட்டாக உயர்ந்துவிட்டது என எடுத்துக்கொண்டால் , கட்டணம் 290 ரூபாயாக உயர்ந்துவிடும். 101 முதல் 200 யூனிட் வரை யூனிட்டிற்கான கட்டணம் 2 ரூபாயாக அதிகரித்துவிடுவதோடு, 200 யூனிட்டிற்கு மேல் ஒவ்வொரு யூனிட்டிற்கும் 3 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும்.

இதேபோல் 500 யூனிட் பயன்பாட்டிற்கு 1,130 ரூபாயாக இருக்கும் கட்டணம். கூடுதலாக 40 யூனிட் பயன்படுத்தினால்கூட 2044 ரூபாயாக அதிகரித்து விடுகிறது. முதல் 2 மாதங்களில் 500 யூனிட்டும், அடுத்த 2 மாதங்களில் 580 யூனிட்டும் பயன்படுத்தியதாக வைத்துக்கொண்டால், மொத்தம் 1080 யூனிட் அதனை இரண்டாக பிரித்து தலா 540 யூனிட் வீதம் தற்போது கணக்கிடப்படுகிறது. அப்படியானால் 2044 ரூபாய் வீதம் மொத்தம் 4088 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டி வரும்.

இதன்படி, வழக்கமாக 500 யூனிட் பயன்படுத்தி இரண்டு மாதங்களில் 1130 ரூபாய் கட்டணம் செலுத்தி வந்த ஒருவர், அடுத்த இரண்டு மாதத்தில் 580 யூனிட் பயன்படுத்தினால், அந்த முறை மட்டும் 2308 ரூபாய் என ஆயிரத்து 178 ரூபாய் அதிகமாக கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். ஆனால் இப்போது 4 மாதமாக கணக்கிடும் போது கூடுதலாக 1828 ரூபாய் அதிகமாக செலுத்த வேண்டியுள்ளது. இதில் மின் வாரியத்திற்கு அதிகமாக 650 ரூபாய் கிடைக்கிறது.

ஆக, கொரோனா காரணமாக இரண்டு மாதம் கணக்கெடுக்காமல், அப்போது கட்டப்பட்ட தொகையை முன்பணம் எனக் கருதி கழிப்பது என்பது, மக்களுக்கு நட்டம், மின்வாரியத்திற்கு லாபம் என்று நுகர்வோர்கள் புகார் தெரிவித்துள்ளனர். ஏப்ரல் , மே மாதங்கள் போன்று ஜூன் ஜலை மாதங்களிலும் மின் கட்டணம் அதிகரித்துள்ளதாக கூறுகின்றனர்.

நுகர்வோர்கள் இவ்வாறு புகார் அளிக்கும் நிலையில், நுகர்வோர்களின் மின்பயன்பாடு அதிகரிப்பே மின்கட்டண உயர்வுக்கு காரணம் என தமிழ்நாடு மின்சார வாரியம் விளக்கம் அளித்துள்ளது. குறிப்பாக சென்னையில் ஏசி பயன்பாடு அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் நுகர்வோர்கள் புகார் அளித்தால், மின் பயன்பாடு மற்றும் கட்டணம் குறித்த கணக்கீடு விவரங்கள் அவர்களுக்கு தெரிவிக்கப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

மின்கட்டணம் எப்படி நிர்ணயிக்கப்படுகிறது?

தமிழகத்தில் டெலஸ்கோபிக் டாரிஃப் முறையில் மின்கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது. அதாவது, இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை நாம் மின்கட்டணம் செலுத்துகிறோம். அது எப்படி கணக்கிடப்படுகிறது என்றால், ஒருவர் 200யூனிட் மின்சாரம் இரண்டு மாதங்களுக்கு பயன்படுத்தியிருந்தால், அதில் முதல் 100 யூனிட் இலவசம். அடுத்த 100 யூனிட்டுக்கு ஒரு யூனிட் ரூ.1.50 என்று கணக்கிடப்படும். அந்த வகையில், 100*1.5 = ரூ150. இதனுடன் நிலையான கட்டணம் = ரூ20 என மொத்த கட்டணம் = ரூ170ஆக இருக்கும். அதுவே இரண்டுமாதங்களில் நுகர்வோர் பயன்படுத்திய மின்சாரம், 380 யூனிட் என்று வைத்துக்கொண்டால், முதல் 100 யூனிட் இலவசம்.
101லிருந்து 200 யூனிட்டுக்கு ஒரு யூனிட் விலை ரூ.2 என அதிகரிக்கும்.100*2 = ரூ200. 201லிருந்து - 380 யூனிட்டுக்கு ஒரு யூனிட் விலை ரூ3 என வசூலிக்கப்படுகிறது. 180*3 = ரூ.540. நிலையான கட்டணம் = ரூ20. மொத்த கட்டணம் = ரூ760ஆக இருக்கும்.

இதனடிப்படையில் பார்க்கும்போது, யூனிட் அதிகரிக்க அதிகரிக்க மொத்த விலையும் வெகுவாக அதிகரிக்கும். இந்த முறை தான் தற்போது செயல்பாட்டில் இருக்கிறது. கொரோனா காலத்தில் மின் ஊழியர்கள் நேரில் வர இயலாததால் முந்தைய கட்டணத்தையே செலுத்த அரசு உத்தரவிட்டது. பின்பு 4 மாதங்களுக்கு மின் கணக்கீடு செய்யப்பட்டு கட்டணம் வசூலிக்கப்பட்டது. 4 மாத மொத்த பயன்பாடு 1200 எனில் முதல் 2 மாதங்கள் 600 யூனிட் , அடுத்த 2 மாதங்கள் 600 யூனிட் என பிரித்து கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. முதல் 2 மாதங்கள் குறைவான யூனிட் பயன்படுத்திருப்போம். அடுத்த மாதம் யூனிட் அதிகரித்திருக்கலாம். ஆனால், 2 மாதத்திலும் அதிக யூனிட் பதிவு செய்யப்படுவதால் விலை அதிகரிக்கிறது என மக்கள் புகார் அளிக்கின்றனர்.

இது தொடர்பாக மின்வாரிய கூட்டமைப்பைச்சேர்ந்த ஜெய்சங்கர் பேசுகையில், ``மின் கணக்கீடு என்பது இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை செய்துகொண்டே வருகிறார்கள். கொரோனா காலக்கட்டம் வந்ததால், முந்தைய மாத கணக்கீடுக்கான கட்டணத்தை செலுத்துமாறு கூறினார்கள். கொரோனா காலத்தில் 7 அல்லது 8 மாதங்கள் கட்டணம் செலுத்தாத போது, வழக்கமான கணக்கீடு தான் செய்கிறோம்.

ஆனால், அவர்களுக்கு அது கூடுதலாக இருப்பதாக தோன்றுகிறது. மின் நுகர்வோரே நேரடியாக ரீடிங் செய்து கட்டணம் செலுத்தலாம் என தமிழக அரசு கூறியிருக்கிறது. இதில் என்ன சிக்கல் என்றால், தற்போது பயன்பாட்டில் இருக்கும் மீட்டர்களில் தொழில்நுட்ப ரீதியான விஷயங்கள் இருக்கிறது. அதனால் நுகர்வோரால் அதை செய்ய முடியவில்லை. குளறுபடிகளை நீக்க `மின்தடை’ மையம் அமைக்கப்பட்டுள்ளது. அதில் லட்சக்கணக்கான புகார்கள் வந்துள்ளது. விரைவில் இது சரி செய்யப்படும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.