நெரிசல் மிகுந்த சாலை. எப்போதும் காதைக் கிழிக்கும் ஹார்ன் சத்தம். லேசாகக் கூட அசையாத மரக்கிளைகள். உடம்பை எரிக்கும் கோடை உஷ்ணம் என தனது கோர முகத்தைக் காட்டுகிறது தலைநகர் சென்னை. இந்தக் கொடுமையில் இருந்து தப்பித்து போக நினைக்கும் பலருக்குப் போக்கிடமில்லை. அதுதான் உண்மை. அழகான இடமாக இருக்க வேண்டும். அதே சமயம் , அது அதிக தூரம் இருக்கக் கூடாது. காலையில் போய், மாலையில் திரும்ப வேண்டும். ஆனால் மனதிற்கு இதமாக இருக்க வேண்டும். அப்படியான இடம்தான் வண்டலூர் உயிரியல் பூங்கா. பசுமையான புறச்சூழல். வண்டி சத்தமே இல்லாத தார்ச்சாலை. திரும்பும் திசை எல்லாம் பசுமை நிறைந்த அடர்பச்சை கலந்த மரங்கள் என மனதை மயக்கும் அந்தப் பூங்காவில் இப்போது பழையச் சாயல் ஒன்றுமில்லை. முழுமையாக நவீனமாக்கப்பட்டிருக்கிறது. அதிநவீன வசதியுடன் ஆடம்பரமாகவும் மாற்றப்பட்டுள்ளது. அதுதான் ஹைலைட்ஸ்.
இனிமேல் நீங்கள் வண்டலூரில் இருக்கும் மிருகங்களை வீட்டில் உட்கார்ந்து கொண்டே டிஸ்கவரி சானல், நேஷனல் ப்ளானெட் போன்ற சர்வதேச சானல்களை நேரடியாக பார்ப்பதைபோல பார்க்கலாம். அந்தளவுக்கு வண்டலூர் உங்களூருக்கு வந்திருக்கிறது. அங்கே பரந்த நிலப்பரப்பில் நின்று கொண்டிருக்கும் சிங்கத்தை https://www.aazp.in என்ற வலைதளத்திற்குப் போய் நேரலையில் வாட்ச் பண்ணலாம். அங்கே நடமாடிக் கொண்டிருக்கும் ஒவ்வொரு மிருகத்தையும் அப்படியே கண் முன் கொண்டு வந்து நிறுத்துகிறது காட்சிகள்.
காண்டாமிருகம், சிங்கவால் குரங்கு, காட்டெருமை, நீர்யானை, முதலை, ஹார்ன்பில், மான்கூட்டம் என நீங்கள் விரும்பும் எதையும் க்ளிக் செய்து லைவ் மோட் போட்டு ரசிக்கலாம் நீங்கள். இதற்கு முன்பாக டிக்கெட் வாங்கிக் கொண்டு உள்ளே போய் சுற்றிப் பார்த்துக் கொண்டிருக்கும் போதே நேரம் போதாமல் வெளியே வருவோம் நாம். அந்த வேதனை இருக்கிறதே மிகப்பெரியக் கொடுமை. ‘அப்பா..அப்பா..ஒட்டகச்சிவிங்கிக் காட்டுப்பா’ என பிள்ளைகள் தொந்தரவு செய்ய எடுத்த வாடகை மிதி வண்டியை அவசர அவசரமாக எகிறி மிதித்தும் முழுமையாக பார்க்க முடியாமல் திரும்ப வேண்டிய சூழலே நிலவியது. அதோடு உள்ளே சென்றால் சாப்பாடு பில், சைக்கிள் பில், காமிரா பில், உள்ளே நுழைய நுழைவுச் சீட்டுக்கட்டணம், கையில் வைத்திருக்கும் ஆண்ட்ராய்ட் மொபைலுக்கு தனி பில் என ஆயிரம் ரூபாய்க்கு மேல் செலவழித்தாலும் சரியான திருப்தி உண்டாகாது. அவதி அவதியாக சகலத்திலும் அவசரம் காட்ட வேண்டும்.
அதற்கும் காரணம் உண்டு. 1.490 ஏக்கர் பரப்பளவில் விரிந்து கிடக்கும் இந்த நிலத்தை ஒரு அரைநாளில் சுற்றி வந்துவிட முடியுமா என்ன? அப்படியே முடியும் என்றால் நாம் முருகனை போல் மயிலில் பறக்க வேண்டும். அது நடந்தால்தான் நாம் முழுமையாக வண்டலூரை காண முடியும். அதற்காகதான் ஒரு விநாயகர் ஐடியாவை கண்டுப்பிடித்து கொடுத்திருக்கிறார்கள் தமிழக வனத்துறை அதிகாரிகள். பிள்ளையார் அம்மை அப்பனை வைத்து உலகம் சுற்றியதை போல நீங்கள் வீட்டில் ஹாலில் உட்கார்ந்துக் கொண்டே வண்டலூரின் முழு பரப்பளைவையும் சுற்றிப் பார்த்துவிடலாம்.
மேலும் உலகில் உள்ள அரிதான அயல்நாட்டு விலங்குகள் உட்பட மொத்தம் 2300 விதமான விலங்குகளையும் கண்டு களித்துவிடலாம். நீங்கள் சிஸ்டத்தில்தான் இதை பார்க்கலாம் என்றில்லை. இதற்காகவே ஒரு செயலி (ஆப்) ஐ உருவாக்கி வெளியிட்டிருக்கிறார்கள். Vandalur Zoo என்று Google Play Storeல் தரவிறக்கம் செய்து ஆண்ட்ராய்ட் மொபைலில் நீங்கள் இதை பயன்படுத்திக் கொள்ளலாம். அல்லது https://play.google.com/store/apps/details@id=com.aazp வலைத்தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்.
உங்கள் குடும்பத்தோடு நீங்க ஜூவை சுற்றிப்பார்க்க வேண்டும் என்றால் இதற்கு முன்பாக காலையிலே எழுந்து வண்டலூர் சென்று க்யூவில் நின்று நுழைவுச்சீட்டை பெற்று உள்ளே போக வேண்டும். ஞாயிறு அன்று கூட்ட நெரிசலில் நமக்கு சீட்டுக் கிடைக்குமா என்று பதறிக்கொண்டே நிற்கவேண்டும். அந்தக் கொடுமை இனிமேல் கிடையாது. வீட்டில் இருந்தபடியே ஆன் லைனில் நீங்கள் டிக்கெட்டை புக் செய்துக் கொள்ளலாம். வெப்சைட்டில் கிடைக்கும் பூங்காவின் நிலப்படத்தை பதிவிறக்கம் செய்து அதை ஒரு கையேடாக எடுத்துக் கொண்டு போய் மிகத் தெளிவாகத் திட்டமிட்டு பூங்காவை சுற்றி வரலாம். மேலும் அதில் பூங்காவில் உள்ள பாலூட்டிகள், ஊர்வன மற்றும் பறப்பன பற்றிய விபரங்கள் ஒலி விளக்கவுரை வசதியும் அமைத்து தரப்பட்டுள்ளது. இவை யாவையும் 4டி வடிவில் வழங்கப்பட்டுள்ளன.
உலகம் முழுக்க இருந்து 20 லட்சம் பார்வையாளர்கள் இந்தப் பூங்காவை பார்வையிட ஆண்டு ஒன்றுக்கு வருகை தருகின்றனர். இவ்வளவு நபர்களும் பூங்காவில் அதிரடியாக குவியும் போது அதன் சூழல் கெடுகிறது. ஆகவே இந்த ஆன்லைன் வசதி மூலம் கொஞ்சம் மக்களை தடுக்கலாம். அது வனச் சூழலுக்கு நன்மையே. அதேபோல் பூங்கா அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது இனிமேல் நீங்கள் வண்டலூர் பூங்காவில் இரவில் தங்கலாம். அதற்கான அறைகள் அங்கே ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது. அதுவும் தரமான ஏசி அறைகள். மாலை ஆறுமணி முதல் தங்கி அழகான வன அனுபவத்தை நீங்கள் அடையலாம். அதற்காக இருவர் தங்க 2 ஆயிரம் ரூபாய் வரை வசூலிக்கப்படுகிறது. குழந்தைகள் 12 வயதிற்கு மேல் இருந்தால் 500 கட்டணம் வசூலிக்கப்படும். உணவு போன்ற விஷயங்கள் சொந்த ஏற்பாடு செய்து கொள்ளலாம். அல்லது உள்ளே இருக்கும் ஹோட்டலை பயன்படுத்திக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 24 மணிநேரத்திற்கு முன்பாக இதற்கான பதிவை செய்து கொள்ள வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்கள். மாலை 6 மணிக்கு ரூம் போட்டால் அடுத்த நாள் மதியம் 1 மணிக்கு செக் அவுட் செய்து கொள்ள வேண்டும். கொஞ்சம் நீட்டித்துக் கொள்கிறோம் என்றால் அனுமதி கட்டாயம் மறுக்கப்படும். அதேபோல் அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு மேல் பூங்காவில் நடக்க அனுமதி கிடையாது. மது போன்ற விஷயங்கள் கட்டாயம் தடை செய்யப்பட்டுள்ளது.
அப்புறம் என்ன? கோடையை கொண்டாட கொடைக்கானல் தான் போகணுமா என்ன? லோ பட்ஜெட்டில் வண்டலூர் போய் தங்கித் திரும்பலாம்.