சிறப்புக் களம்

பயிற்சி வகுப்புகள் செல்லாமலேயே நீட் தேர்வில் 674மார்க்: அசத்திய அரக்கோணம் மாணவர்.!

Veeramani

அரக்கோணத்தை சேர்ந்த மாணவன் சக்திவேல், நீட் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு செல்லாமலேயே 720க்கு 674 மதிப்பெண் பெற்றுள்ளார். கடந்த ஆண்டு நீட் தேர்வில் வெற்றி பெற முடியாத நிலையில் ஒரு வருடமாக வீட்டில் படித்து இந்த ஆண்டு வெற்றி பெற்றுள்ளார்

நேற்று வெளியான நீட் தேர்வு முடிவுகளில் அரக்கோணம், குருராஜப்பேட்டையை சேர்ந்த மாணவன் சக்திவேல் 720 க்கு 674 மதிப்பெண் பெற்றுள்ளார். 12 ஆம் வகுப்புவரை தமிழ்வழியிலேயே படித்த இவர், பயிற்சி வகுப்புகள் எதற்கும் செல்லாமல் வீட்டிலேயே படித்து இந்த சாதனையை செய்துள்ளார்.

இது பற்றி பேசிய சக்திவேல் “ எனது அப்பா மணி தறி வேலை செய்கிறார், அம்மா டெய்லராக உள்ளார். நான் 10 வகுப்புவரை குருராஜப்பேட்டையில் உள்ள அரசுப்பள்ளியில்தான் படித்தேன். அதன்பிறகு 11 மற்றும் 12 வகுப்புகள் மட்டும் அரக்கோணத்தில் உள்ள மங்களாம்பிகா மெட்ரிக் பள்ளியில்  தமிழ்வழியில்தான் படித்தேன். கடந்த ஆண்டு 12 ஆம் வகுப்பில் 600க்கு 588 மதிப்பெண் பெற்று மாவட்ட அளவில் முதலிடம் பிடித்தேன். சென்ற ஆண்டு வெறும் 40 நாட்கள் மட்டுமே நீட் தேர்விற்கு பயிற்சி எடுத்து 358 மதிப்பெண்கள் எடுத்தேன். இதனால் எனது குடும்பத்தினர், இன்னும் ஒரு வருடம் நீ படித்து மறுபடியும் தேர்வு எழுது என்று வலியுறுத்தினார்கள். பயிற்சி மையங்களுக்கு கட்டணம் கட்ட வசதி இல்லாத காரணத்தால் ஒரு வருடமாக வீட்டிலேயே இருந்து புத்தகங்களை முழுமையாக படித்தேன், ஆன்லைனில் நிறைய தேர்வுகள் எழுதிப்பார்த்தேன். தற்போது இத்தனை மதிப்பெண் பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது” என்று கூறினார்.

சக்திவேலின் தாய் நாகஜோதி பேசும்போது “ எனது மகன் 12 வகுப்புவரை தமிழ்வழியில்தான் படித்தார், ஒன்றாம் வகுப்பு முதலே முதல் இடங்களில் என் மகன் மதிப்பெண் பெறுவார். கடந்த வருடம் ஒரு மாதம் மட்டுமே படித்து அவன் நீட் தேர்வில் 358 மதிப்பெண் பெற்ற காரணத்தால், நாங்கள்தான் அவனை இந்த ஒரு ஆண்டு முயற்சி செய்து பார்க்க சொன்னோம் அதற்கு பலன் கிடைத்துள்ளது. நாங்கள் மிகவும் எளிமையான குடும்பம் அதனால் பெரிய அளவில் பணம் கட்டியெல்லாம் நீட் கோச்சிங்கிற்கு படிக்கவைக்க முடியவில்லை. இருந்தாலும் வீட்டிலேயே இருந்து படித்து இந்த சாதனையை என்மகன் செய்தது மகிழ்ச்சியளிக்கிறது. அரசுப்பள்ளியில் தமிழ்வழியில் படித்தாலும், பயிற்சி வகுப்புகளுக்கு செல்ல வசதி இல்லை என்றாலும் நம்பிக்கையுடன், விடாமுயற்சியுடன் படித்தால் நீட் தேர்விலும் வெற்றி நிச்சயம் என்பதற்கு என்மகன் சக்திவேல் உதாரணம். பயப்படாமல் அனைவரும் நீட் தேர்வில் வெற்றிபெற வாழ்த்துகள்” என்கிறார்