ஏப்ரம் மாதத்தின் முதல் நாளான இன்று பலரும் முட்டாள்கள் நாள் என்று கூறுவதை பார்த்திருப்போம். இந்நாளில் நண்பர்களை ஏமாற்றி april fools என்று பலரும் கிண்டல் செய்து கொண்டிருப்பார்கள். முட்டாள்கள் நாள் எப்படி வந்தது. அப்படி சொல்ல காரணம் என்ன? என்பதை தெரிந்து கொள்வோம்.
ரோமானியர்களின் நம்பிக்கைப்படி புளூட்டோ என்ற கடவுள் பிராஸர்பினா என்ற பெண்ணை கீழ் உலகிற்குக் கடத்திச் சென்றதாகவும் அவள் தன் தாயை உதவிக்கு அழைத்தபோது அவள் அழுகுரலைக் கேட்டு தவறான இடத்தில் தாய் தேடியதாகவும் சொல்லப்படுகிறது. அந்தத் தவறான தேடுதலே முட்டாள்கள் நாள் உருவாகக் காரணம் எனச் கூறப்படுகிறது.
13-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மன்னர் ஒருவர் எங்கு படையெடுத்துச் சென்றாலும் அவ்விடம் அரசுச் சொத்தாக எடுத்துக்கொள்ளப்படும். இதற்கு அஞ்சி இங்கிலாந்து நாட்டின், நாட்டிங்கம்ஷைர் பகுதி மக்கள் முட்டாள்களாக நடிக்கிறார்கள். தண்ணீரில் இருக்கும் மீனைத் தரையில் விடுவதும் தரையில் இருந்து மீண்டும் தண்ணீரில் விடுவதுமாய் இருக்கின்றனர். அதனால் அவர்களின் உடமைகளை எடுக்காமல் அரசர் திரும்பி சென்றுவிடுகிறார் என்றும் ஒரு கதை உண்டு.
உண்மைக்காரணமாக வரலாற்றால் அறியப்படுவது நாட்காட்டி மாற்றம் தான். அதாவது கி.பி1582-ஆம் ஆண்டு வரையில் ஐரோப்பிய நாடுகளில் ஏப்ரல் மாதம் தான் முதல் மாதமாகவும் புத்தாண்டாகவும் கொண்டாடப்பட்டது. கிர்கோரி என்ற போப் தான் இன்று நடைமுறையில் இருக்கின்ற தற்போதைய ஆங்கில நாட்காட்டியை உருவாக்கியவர். ஜனவரியை ஆண்டின் முதல் மாதமாகவும் டிசம்பரை ஆண்டின் இறுதி மாதமாகவும் வைத்து உருவாக்கப்பட்ட இந்த நாட்காட்டியைப் பலர் ஏற்றுகொண்டனர். சிலர் ஏற்கவில்லை.
புதிய நாட்காட்டி முறைப்படி மாறியவர்கள் பழைய நாட்காட்டி முறையைப் பின்பற்றி ஏப்ரல் 1-ஐ புத்தாண்டாகக் கொண்டாடுவதை முட்டாள்கள் நாள் என நய்யாண்டி செய்ய ஆரம்பித்தனர். இதுவே நாளடைவில் ஏப்ரல் 1 அன்று முட்டாள்கள் நாள் என்று கூறப்படக் காரணமாக அமைந்தது. இந்த வழக்கம் பிரான்ஸிலிருந்து லண்டன் அமேரிக்கா, மெக்ஸிகோ போன்ற நாடுகளுக்குப் பரவ ஆரம்பித்து. இன்று உலகம் முழுவதிலும் பல நாடுகளுக்குப் பரவி இருக்கிறது.