தமிழ்நாட்டில் சுமார் 90 லட்சம் பேருக்கு மது அருந்தும் பழக்கம் இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் இளைஞர்கள் மத்தியில் குடிப்பழக்கம் மற்றும் போதைப் பழக்கம் அதிகரித்து வருவது குறித்தும் மாநில வாரியாக இது குறித்த புள்ளி விவரங்களை வழங்குமாறும் உறுப்பினர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்துள்ள மத்திய சமூக நீதித்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் பிற விவரங்கள்:
நாடு முழுவதும் சுமார் 15,01,16,000 பேருக்கு மது அருந்தும் பழக்கம் இருக்கிறது. இதில் அதிகபட்சமாக உத்தரப் பிரதேச மாநிலத்தில் 3,86,11,000 பேருக்கு இந்தப் பழக்கம் இருக்கிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரயில், சுமார் 90 லட்சம் பேருக்கு மதுப் பழக்கம் இருக்கிறது.
கஞ்சா பழக்கத்தை பொறுத்தவரை நாடு முழுவதும் 2,90,00,000 பேருக்கு இந்தப் பழக்கம் இருக்கக்கூடிய நிலையில், தமிழ்நாட்டில் சுமார் 1,04,000 இந்தப் பழக்கம் இருக்கிறது. தமிழ்நாட்டின் அண்டை மாநிலமான கேரளாவில் சுமார் 3,52,000 பேருக்கு இந்தப் பழக்கம் இருக்கிறது. ஆந்திராவில் 4,43,000 பேருக்கு இந்தப் பழக்கம் இருக்கிறது. இந்தப் பட்டியலிலும் நாட்டிலேயே அதிகபட்சமாக உத்தரப் பிரதேசத்தில்தான் சுமார் 1,20,31,000 பேருக்கு கஞ்சா பழக்கம் இருக்கிறது.
நாடு முழுவதும் போதை மாத்திரைகளை சுமார் 1,86,44,000 பேர் பயன்படுத்துகின்றனர்; இதில் தமிழ்நாட்டில் 1,54,000 பேர் உள்ளனர்.
இது 18 வயது முதல் 75 வயது வரையிலானவர்களிடம் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்கள் ஆகும். இளைஞர்களிடம் இத்தகைய போதைப் பழக்கங்களை குறைப்பதற்காக நாடு முழுவதும் 272 மாவட்டங்கள் கண்டறியபட்டுள்ளன. 8,000-க்கும் அதிகமான இளைஞர்கள் தன்னார்வலர்களாக இந்த மீட்பு பணிகளில் ஈடுபட்டு இருக்கின்றனர். நாடு முழுவதும் 350-க்கும் அதிகமான ஒருங்கிணைந்த மறுவாழ்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
- நிரஞ்சன் குமார்