Indira nagar people
Indira nagar people pt desk
சிறப்புக் களம்

“தமிழக அரசு தானே முன்வந்து இதை செய்யணும்”- தன் தெருவின் பெயரிலிருந்த சாதியை நீக்கிய அனுசுயா பேட்டி!

webteam

அரியலூர் கயர்லாபாத் பகுதியில் வசிப்பவர் அனுசுயா. பொறியியல் பட்டதாரியான இவர், தனது சொந்த ஊரான செந்துறை வட்டம் ஆனந்தவாடி கிராமத்திலிருந்த ஆதிதிராவிடர் தெரு என்ற தெருவின் பெயரை மாற்ற வேண்டுமென வலியுறுத்தி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஓராண்டுக்கு முன்பே மனு அளித்துள்ளார். ஆனால் அப்போது அவரது மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரியவருகிறது.

anusuya

இதையடுத்து தன் கிராமத்தில் வசிக்கும் பொதுமக்களிடம் கையொப்பம் பெற்று வருவாய்த் துறை அதிகாரிகளுக்கும், தமிழக முதலமைச்சரின் தனிப்பிரிவிற்கும் கடந்த 2022 ஆம் ஆண்டு மனு அளித்துள்ளார். ஆனால் அப்போதும் எவ்வித நடவடிக்கையும் அரசு சார்பில் எடுக்கப்படவில்லையாம். இதைத் தொடர்ந்து ஆதிதிராவிடர் தெரு என்ற பெயரை அனைத்து அரசு ஆவணங்களிலும் மாற்ற வேண்டுமென 2023 பிப்ரவரி மாதத்தில் ஆன்லைன் மூலம் கோரிக்கை வைத்துள்ளார் அனுசுயா. அந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.

ஆனாலும் தொடர்ந்து முயற்சி செய்த அனுசுயா, மேலும் ஆவணங்களை இணைத்து மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அரசு அலுவலகங்களுக்கு கோரிக்கை வைத்த நிலையில், அவரது கோரிக்கை ஏற்கப்பட்டு 'ஆதிதிராவிடர் தெரு' இனி மீண்டும் 'இந்திரா நகர்' (இந்த தெரு முன் இந்திரா நகர் என்றுதான் இருந்துள்ளது. இடையில்தான் மாற்றியதாக கூறுகிறார் அனுசுயா) என அழைக்கப்பட உள்ளது. விடாமல் முயற்சி செய்து இதை சாதித்துள்ள அனுசுயாவை, புதிய தலைமுறை சார்பில் தொடர்பு கொண்டு பேசினோம்...

petition

“எங்க ஊருக்கு இருந்த சாதிப் பெயரை நான் மாத்திட்டேன். ஆனா, ஒவ்வொரு ஊர்லேயும் இதை முன்னெக்கப்போவது யார்என நம்மிடையே பேச ஆரம்பித்தார் அனுசுயா.

“எங்க ஊர்ல 3 தெரு இருந்துச்சு. அதுல சிமெண்ட் ரோடெல்லாம் போட்டு 3 தெருவுக்கும் 3 பேர் வெச்சாங்க. அதுல எங்க தெருவுக்கு இந்திரா நகர்னு பேரு வெச்சு போர்டெல்லாம் வச்சிருந்தாங்க. நாங்களும் எங்கத் தெரு இந்திரா நகர்னு பெருமையா சொல்லுவோம். நான் ஸ்கூல்ல படிக்கிற வரைக்கும் அப்படிதான் இருந்துச்சு.

ஆதார் அட்டை எடுக்கும்போது வெளியான அதிர்ச்சி தகவல்!

ஆதார் அட்டை வந்த காலத்துல, ஆதாருக்கு ஃபோட்டோ எடுக்கப் போனோம். அப்போ எங்க தெரு பேர, இந்திரா நகர்னு கொடுக்கப் போனோம். ஆனா, ஊராட்சி லிஸ்ட்ல ஆதிதிராவிடர் தெருன்னு இருந்துச்சு. அதனால ஆதார் கார்டுலேயும் ஆதிதிராவிடர் தெரு என்றே போட்டிருந்தாங்க. அப்ப எனக்கு 17, 18 வயசுதான் இருக்கும். ‘என்னடா இது இப்படி போட்டிருக்காங்க, அத லிஸ்ட்ல மாத்தணும்’னு கோபம் மட்டுமே இருந்துச்சு. அதுக்கப்புறமா நான் படிச்சு முடிக்கிற வரைக்கும் எதுவும் தோனல. ஆனா காலப்போக்குல ஆதாரை எல்லாத்துலேயுமே கனெக்ட் பண்ண ஆரம்பிச்சாங்க. அப்போதான் எல்லா விலாசத்துலயும் ஆதிதிராவிடர் தெருன்னு போட வேண்டியதாச்சு

anusuya

இந்த விஷயம் Unwanted-ஆ தொந்தரவு பண்ணிக்கிட்டே இருந்துச்சு. இது போன்ற ஒரு பிரச்னையை நாம கடந்து வந்துடலாம். ஆனா, ஊர்ல இருக்குற மக்களுக்கு ஒரு பிரச்னைனா அவங்க எப்படி சமாளிப்பாங்கன்னு எனக்குள்ளேயே நிறைய கேள்வி எழுந்துச்சு. அந்த கேள்விகளால உருவானதுதான் இந்த மனு போடும் போராட்டம். இன்னும் சொல்லனும்னா, தெருவின் இந்த பெயரால எங்க கிராமத்துல இருக்குற பசங்க படிக்கிற இடத்துல, வேலைக்கி போற இடத்துல என சாதிய ஐடென்டிட்டி தலைதூக்க ஆரம்பிச்சது. இதுபோன்ற பிரச்னைகளை அவங்க சந்திக்க வேண்டாம் என்றுதான் இந்த மனு கொடுக்கும் போராட்டத்தை முன்னெடுத்தேன்.

“எந்த இடத்திலெல்லாம் ஆதிதிராவிடர் தெருன்னு வருதோ அதையெல்லம் இந்திரா நகர்னு மாத்திக் கொடுங்க”

அதன்படி மனு கொடுக்கும் போராட்டத்தை முதன்முதலா முன்னெடுத்தபோது, ஆவணங்களை திரட்டி மொத்தமாக BDO-விடம் மனுவா கொடுத்தேன். அப்போ அவரிடமிருந்து ரெஸ்பான்ஸ் வந்துச்சு. ஆனா, அதுக்கு அப்புறமா எந்த ஸ்டெப்பும் எடுக்கப்படல. அந்தநேரத்துல நானும் வேலை தொடர்பா மத்திய பிரதேசத்துக்கு போயிட்டேன். இங்கே வர்றதுக்கு எனக்கும் வாய்ப்பில்லாம போச்சு. அதுக்கப்புறம், வாக்காளர் அடையாள அட்டையிலும் ஆதிதிராவிடர் தெரு என்றுதான் வந்தது. ‘மீண்டும் மீண்டும் இப்படியா’னு யோசிச்சேன்.

உடனே மறுபடியும் ஒரு மனு... “எங்களோட அரசு டாக்குமெண்டுல ஆதிதிராவிடர் தெருன்னு எங்கெல்லாம் வருதோ அங்கெல்லாம் இந்திரா நகர்னு மாற்றித் தாங்க”ன்னு வருவாயத் துறையிடம் கொடுத்தேன். இந்த பெட்டிசனை அவங்க ரிஜெக்ட் பண்ணிட்டாங்க.

Indira nagar people

மீண்டும் BDO Office, Collector Office-னு மனுவை எடுத்துக்கிட்டு நடையாய் நடந்தேன்”

இதைத் தொடர்ந்து கிராமசபை கூட்டத்துல தீர்மானம் நிறைவேற்றச் சொல்லி அதையும் கலெக்டரிடம் மனுவா கொடுத்தேன். ஆனா, அவங்களோ ‘ஊர்ல இருக்குற பஞ்சாயத்து தலைவருதான் Authority. நீங்க அவங்களை போயி Contact பண்ணுங்க’ன்னு சொன்னாங்க. அதுக்கப்பிறகு அவங்கள பாத்து இந்திரா நகர்னு போர்டு வச்சுத்தரணும்னு Strong-ஆ கேட்டேன். அவங்களோ ‘நீங்களே போர்டு வச்சுக்கோங்க’ன்னு சொன்னாங்க. அதுக்கு நான், ‘பஞ்சாயத்துல இருந்து லிஸ்டு கொடுக்கப் போயிதான் ஆதிதிராவிடர் தெருன்னு போட்டிக்காங்க. அதனால் நீங்கதான் போர்டு வைக்கணும்’னு அழுத்தமா சொல்லிட்டேன்.

“தமிழக அரசு தானாக முன்வந்து சாதிப் பெயர்களை நீக்க வேண்டும்”

அதை ஏத்துக்கிட்டாலும், போர்ட அடிக்கிறதுக்கு 2 வாரமாக்குனாங்க. அப்புறம் எழுதுறதுக்கு 1 வாரம், வைக்கிறதுக்கு 2 வாரம்னு ஒரு வழியா ஜூலை 1ஆம் தேதி இந்திரா நகர்னு போர்ட வச்சுட்டாங்க. இனி பஞ்சாயத்துல இருந்த லிஸ்ட் கொடுக்குறப்ப இந்திரா நகர்னு கொடுக்கணும். அவ்வளவுதான்” என்றார்.

தொடர்ந்து அவர் நம்மிடம் “எங்க ஊருக்கு இருந்த சாதிப் பெயரை நான் மாத்திட்டேன். ஆனா, ஒவ்வொரு ஊர்லேயும் இதை முன்னெக்கப்போவது யார் என்ற தெரியல. யாரும் எடுப்பாங்களான்னும் தெரியல. அதனால் தமிழக அரசு தானாக முன்வந்து தெருக்களில் உள்ள சாதிப் பெயர்களை நீக்க வேண்டும்” என்ற கோரிக்கையையும் வைத்தார்.

தொடர்ந்து போராடி நடையாய் நடந்து ஆதிதிராவிடர் தெரு என்ற பெயரை இந்திரா நகர் என்று மாற்றிய இவருக்கு, இணைய வழியிலும் பாராட்டுகள் குவிகிறதாம்!