இணையத்தில் இப்போது பரபரப்பாக பேசப்பட்டு வரும் செயலி எது தெரியுமா என கேட்டால், 'தெரியுமே, சமூக ஆடியோ சேவையான கிளப் ஹவுஸ்தானே' என்றே பலரும் பதில் அளிக்கலாம். ஸ்மார்ட்போனை அரட்டை அரங்கமாக்கி இருக்கும் கிளப் ஹவுஸ் முன்னணி செயலிகள் ஒன்றாக உருவெடுத்திருந்தாலும், அதற்கு போட்டியாக பாப்பரஸி (Poparazzi) செயலி பற்றிதான் இணையம் இப்போது பேசிக்கொண்டிருக்கிறது.
கிளப் ஹவுசுக்கு போட்டி என்றதும், பாப்பரஸியை இன்னொரு ஆடியோ செயலி என நினைத்துவிட வேண்டாம். இது புகைப்படம் எடுத்து பகிர்வதற்கான செயலி. அந்த வகையில், இது இன்ஸ்டாகிராமுக்கு போட்டியாக முளைத்திருக்கிறது என்றாலும், இதன் புதுமையான அம்சத்தால் பலரையும் பரபரப்பாக பேச வைத்திருக்கிறது.
பாப்பரஸி செயலியில் என்ன புதுமை என்றால், இன்ஸ்டாகிராம் தன்மைக்கும், செல்ஃபி மோகத்திற்கும் எதிரானதாக அமைந்திருப்பது தான்.
ஆம், பாப்பரஸி செயலியில், பயனாளிகள் யாரும் தங்களை சுய படம் எடுத்து பகிர்ந்து கொள்ள முடியாது. அதற்கு மாறாக, மற்றவர்களை படம் எடுத்து தான் பகிர முடியும்.
பிரபலங்களை விடாமல் பின் தொடர்ந்து வளைத்து வளைத்து படமெடுக்கும் பழக்கம் பாப்பரஸி என குறிப்பிடப்படுவதை நீங்கள் அறிந்திருக்கலாம். இதே தன்மையை புகைப்பட பகிர்விற்கு கொண்டு வந்திருக்கிறது பாப்பரஸி செயலி.
உங்கள் நண்பர்களுக்கு நீங்கள் தான் பாப்பரஸி, அவர்கள் தான் உங்களுக்கு பாப்பரஸி என்கிறது இந்த செயலி.
ஆனால், பொதுவாழ்க்கையில் பிரபலங்கள் எதிர்கொள்ளும் வில்லங்க அம்சம் இல்லாமல், பாப்பரஸி தன்மையை புகைப்படம் மூலம் நட்பு வளர்த்துக்கொள்வதற்கான அம்சத்தோடு இந்த செயலி அமைந்திருக்கிறது.
செல்ஃபி மோகத்தில் இருந்து விடுபடவும், எப்போதும் நன்றாக தோற்றம் தர வேண்டும் எனும் அழுத்தத்தில் இருந்து விடுபடவும் உதவுவதற்காக உருவாக்கப்பட்ட செயலி என இதன் அறிமுக பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இன்ஸ்டாகிராமில் லைக்குகளை அள்ளுவதற்காக, பலரும் தங்களை அசத்தலான முறையில் படம் எடுத்து வெளியிட மெனக்கெடும் பழக்கம் இருக்கிறது. அதே போல, எங்கே சென்றாலும் சுய படம் எடுத்து வெளியிடும் பழக்கமும் பரவலாக இருக்கிறது.
செல்ஃபி ஆசையால் ஏற்பட்ட விபரீதங்களின் சோக கதைகளும் அதிகம் இருக்கின்றன.
இந்த பழக்கத்தையே தலைகீழாக மாற்றும் நோக்கத்தில் பாப்பரஸி செயலி அமைந்துள்ளது. முதல் கட்டமாக ஐபோன்களில் செயல்படும் வகையில் அறிமுகம் ஆகியுள்ள பாப்பரஸி செயலியில், பயனாளிகள் தங்களை படம் எடுக்கவும் முடியாது. தங்களுக்கான அறிமுக பக்கத்தையும் உருவாக்கி கொள்ள முடியாது. இரண்டையும் அவர்களின் நண்பர்கள் தான் செய்ய முடியும்.
இதில் உறுப்பினராக இணைபவர்கள், தங்கள் நண்பர்களை தான் படம் எடுத்து வெளியிட முடியும். இந்த படங்கள் மூலம் நண்பர்களின் அறிமுக பக்கம் உருவாக்கப்படும். இதே போல நண்பர்கள் படமெடுத்து பகிரும் போது, உங்களுக்கான அறிமுக பக்கம் உருவாகும்.
அறிமுக பக்கத்தில், நீங்கள் எடுத்த படங்கள் மற்றும் உங்களை நண்பர்கள் எடுத்த படங்கள் என இரண்டு விதமாக படங்களை பார்க்கலாம். நண்பர்களை பின் தொடரும் வசதியும் இருக்கிறது.
நண்பர்கள் தான் உங்களை படமெடுக்க முடியும் என்றாலும், வெளியாகும் படங்களை பயனாளிகள் கட்டுப்படுத்தலாம். தங்கள் பக்கத்தில் எந்த படம் இடம்பெறலாம் என தீர்மானிப்பதோடு, அந்த படங்கள் பொது பார்வைக்கானதா அல்லது தனிப்பார்வைக்கு மட்டுமானதா என்றும் தீர்மானித்துக்கொள்ளலாம்.
மேலும், இதில் பகிரும் படங்களை அப்படியே தான் வெளியிட முடியும். பில்டர் வசதி, திருத்தி மேம்படுத்தும் அம்சங்கள் எல்லாம் கிடையாது. எனவே, இயல்பாக எடுக்கப்பட்ட படங்களை பகிர்ந்து கொள்ளலாம். இப்படி நண்பர்களை படமெடுப்பதன் மூலம் அவர்களோடு இணைந்திருக்கும் உணர்வையும் பெறலாம் என்கிறது பாப்பரஸி செயலி.
முன்னோட்டமாக பரிசோதிக்கப்பட்ட முழு வீச்சில் அறிமுகம் ஆகியுள்ள இந்த செயலி, செல்ஃபிக்கு எதிரான அம்சம் மற்றும் நண்பர்களே படம் எடுத்து பகிர முடியும் எனும் தன்மையால் பயனாளிகளை கவர்ந்திழுத்திருக்கிறது.
புகைப்பட செயலிகள் பிரிவில் அடுத்த அலையாக அமையுமா என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும். ஆனால், சமூக ஊடக மோகத்தை லேசாக அசைத்துப்பார்க்கும் வகையில் அமைந்திருக்கிறது என்பதில் சந்தேகம் இல்லை.
ஐபோன் பிரியர்கள் முயன்று பார்க்கலாம். ஆண்ட்ராய்டு பிரியர்கள் காத்திருக்கலாம். செயலியை அணுக: http://www.poparazzi.com/
- சைபர்சிம்மன்