சிறப்புக் களம்

ஓபிஎஸ் மீது கட்சித் தாவல் தடை சட்டம் பாயுமா?

Rasus

தமிழக அரசியலில் யாருக்கு மெஜாரிட்டி இருக்கிறது என ஆளுங்கட்சியான அதிமுகவிற்குள் உட்கட்சி பூசல் எழுந்துள்ள சூழ்நிலையில், குதிரை பேரம் நடந்தால் ஆளுநர் சட்டப்படி என்ன நடவடிக்கைகள் எடுக்க முடியும் என்ற கேள்வி எழுவது இயற்கையே. அதுபோன்ற குதிரை பேரம் தமிழகத்தில் எழுந்துள்ளதாக முதலமைச்சர் பன்னீர் செல்வம் குற்றம்சாட்டி வருகிறார்.

குறிப்பாக தமக்கு ஆதரவான எம்எல்ஏ.,க்கள் சட்டவிரோதமாக தனியார் ரிசார்ட் ஒன்றில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர் என ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் முதல்வர் பன்னீர்செல்வம் புகார் பட்டியல் வாசித்துள்ளார்.

பொதுவாக குதிரை பேரம் என்பது ஆளுங்கட்சிக்கும், எதிர்கட்சிகளுக்கும் இடையேதான் நடக்கும். ஆனால் தமிழகத்தில் ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு ஒரே கட்சிக்குள் பிளவு ஏற்பட்டுள்ளது அரசியல் விந்தையே.

கடந்த 2016-ஆம் ஆண்டு உத்ராகாண்ட் சட்டப்பேரவையில் மொத்தமுள்ள 71 சட்டமன்ற உறுப்பினர்களில் 36 பேர் ஆளும் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களாக இருந்தனர். இவர்களில் 9 பேர் எதிர்கட்சியான பாரதிய ஜனதாவோடு சேர்ந்து ஆட்சியை கவிழ்த்தனர். இதனால் அங்கு குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

கட்சி தாவிய 9 பேரை கட்சித்தாவல் சட்டத்தின் கீழ் நீக்குவதாக அம்மாநில சட்டப்பேரவை தலைவர் அறிவித்தார். இதனை எதிர்த்து அவர்கள் நீதிமன்றத்தை நாடினர். இதனை முதலில் விசாரித்த உயர்நீதிமன்றமும், பின்னர் விசாரித்த உச்சநீதிமன்றமும், கட்சி தாவிய 9 பேரும் அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்து கொள்ள முடியாது என தீர்ப்பளித்தனர்.

இதனையடுத்து நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் சுயேட்சை உறுப்பினர்களின் ஆதரவோடு ஹரிஷ்ராவத் தலைமையிலான காங்கிரஸ் அரசு வெற்றி பெற்றது.

இதே போன்ற ஒரு சூழல் தமிழகத்தில் ஏற்பட்டால், ஒரே கட்சிக்குள் யாருக்கு ஆதரவு அதிகமாக இருக்கிறதோ, அவர்கள் அரசு அமைக்க வாய்ப்பு அளிக்கப்படும். மற்றவர்கள் நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்து கொள்ள முடியாது. ஏனெனில், ஒரு கட்சியின் கொறடா உத்தரவுக்குக் கட்டுப்பட்டுத்தான் அவர்கள் வாக்களிக்க வேண்டும். அப்படி மீறினால் (அவர்கள் தாங்களும் அதிமுகதான் என்று சொன்னாலும்) அவர்கள் மீதும் கட்சித் தாவல் தடை சட்டம் பாய்ந்து வாக்களிக்க முடியாது.

கடந்த 2003-ம் ஆண்டு சட்டத் திருத்தத்தின் படி ஒரு கட்சியில் இருந்து மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் விலகி தனிக் குழுவாகவோ அல்லது பிற கட்சியிலோ இணையலாம். அவர்கள் மீது கட்சித் தாவல் தடைச் சட்டம் பாயாது.

அதன்படி தற்போதுள்ள சூழ்நிலையில் சசிகலாவை எதிர்க்கும் ஓ.பன்னீர் செல்வம் அணிக்கு 90 உறுப்பினர்கள் வந்தால் மட்டுமே அவர்கள் தனி அணியாக செயல்பட முடியும். எம்எல்ஏ பதவி பறிபோகாது. ஆனால் தற்போது அவர்களின் அணியில் ஓபிஎஸ் உட்பட 6 சட்டமன்ற உறுப்பினர்கள் மட்டும் உள்ளனர். இதனால், முதலமைச்சர் பன்னீர் செல்வம் உட்பட 6 பேர் மீது கட்சித்தாவல் நடவடிக்கை மேற்கொள்ள ஆளுநருக்கு அதிகாரமுள்ளது.

ஆனால் அதற்கு முன்னர் மற்ற அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டவிரோதமாக கடத்தி வைக்கப்பட்டிருக்கிறார்களா என்பதை விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயமும் ஆளுநருக்கு உள்ளது.

மற்றொரு விஷயமும் கவனிக்க வேண்டியிருக்கிறது. கட்சிப் பொதுச் செயலாளர் பதவியில் சசிகலா அமர்ந்ததே சட்டவிரோதம் என்றும் பன்னீர் செல்வம் தரப்பினர் கூறுகின்றனர். சசிகலாவை கட்சியை விட்டே நீக்கி விட்டதாக மதுசூதனன் சொல்கிறார். இந்தச் சூழ்நிலையில் அவர் பிறப்பிக்கும் எந்த உத்தரவும் கட்சியின் உத்தரவல்ல என்றும் கூட பன்னீர் செல்வம் அணியினர் கூற வாய்ப்புள்ளது.

இதுபோன்ற ஒரு சூழலில் மத்திய அரசின் சட்ட வல்லுனர்கள் மற்றும் குடியரசுத்தலைவரின் கருத்துக்களை கேட்டறிந்து ஒரு ஆளுநர் வித்யாசாகர் ராவ் முடிவெடுப்பார் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.