சிறப்புக் களம்

வெள்ளைக்காரர்களே நடிக்க வேண்டுமா? ஹாலிவுட்டில் நீடிக்கும் சர்ச்சை

வெள்ளைக்காரர்களே நடிக்க வேண்டுமா? ஹாலிவுட்டில் நீடிக்கும் சர்ச்சை

webteam

சினிமாக்களும் சர்ச்சைகளும் எப்போதும் பிரிக்க முடியாதவையாகவே இருந்து வந்திருக்கின்றன. தேவர் மகனுக்கும் விருமாண்டிக்கும் அந்தப் படங்கள் ஒரு குறிப்பிட்ட சாதியை மகிமைப்படுத்துவதாகவும் அதனால் சாதிக்கலவரம் வரும் என்றும் கூறி எதிர்ப்புக் கிளம்பியது. விஸ்வரூபம் இஸ்லாமியர்களின் உணர்வைப் பாதிப்பதாக எதிர்ப்புக் கிளம்பியது. அமீர்கானின் பிகே படம் கடவுளைக் கிண்டல் செய்கிறது என்று கூறி எதிர்ப்பைக் கிளப்பினார்கள். ஃபயர், வாட்டர் போன்ற படங்களுக்கு மத அடிப்படைவாதிகளிடமிருந்து எதிர்ப்புக் கிளம்பியது. 

நம்மூர் படங்கள் பெரும்பாலும் மதம், சாதி, இனம் போன்ற உணர்வுகளைச் சீண்டுவதாகச் சொல்லித்தான் எதிர்ப்பைச் சம்பாதிக்கும். ஆனால் ஹாலிவுட் படங்களைப் பார்க்கும் ரசிகர்கள் வித்தியாசமானவர்கள். படம் எதார்த்தமாக இல்லை என்று கூறி அந்தப் படத்தைப் பார்க்க மாட்டேன் என்று ஸ்ட்ரைக் செய்திருக்கிறார்கள்.

டாக்டர் ஸ்ட்ரேஞ் என்ற படத்தில் ஒரு திபெத்திய சாமியார் வேடத்தில் டில்டா ஸ்வின்டன் எனும் வெள்ளைக்காரப் பெண் நடித்திருக்கிறார். அந்தப் பெண்ணுக்கு மொட்டை அடித்து, கண்ணைச் சுருக்கச் செய்து திபெத்திய சாமியாராக மாற்றி இருக்கிறார்கள். ஏன் இப்படி மெனக்கட வேண்டும்? ஏன் இவ்வளவு செயற்கை? அதற்கு ஒரு திபெத்தியரையே நடிக்க வைக்கலாமே என்று நெட்டில் கேட்ட பல ஹாலிவுட் ரசிகர்கள் அந்தப் படத்தை நாங்கள் பார்க்க மாட்டோம் என்று புறக்கணித்திருக்கிறார்கள். இதே போல சென்ற ஆண்டு மார்சியன் என்று ஒரு படம் வந்தது. ரிட்லி ஸ்காட் இயக்கிய அந்தப் படத்தின் கதை அன்டி வெயிர் எழுதிய மார்ஷியன் என்ற நாவலைத் தழுவியது. அந்த நாவலில் வரும் ஒரு கதாபாத்திரம் ஒரு இந்தியர். பெயர் வெங்கட் கபூர். படத்தில் அந்தக் கதாபாத்திரத்தில் சீவிடால் எஜிபோர் என்ற பிரிட்டன் நடிகர் நடித்திருந்தார். அவரது பூர்வீகம் நைஜீரியா. வெங்கட் கபூர் பாத்திரத்தில் நடிக்க ஒரு இந்தியர் கிடைக்கவில்லையா? என்று அப்போது சர்ச்சை எழுந்தது.

இதே போல 1987-ல் வெளிவந்த "ஷார்ட் சர்க்யூட் 2" படத்தில் இந்திய விஞ்ஞானி பெஞ்சமின் ஜார்வி என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் பிஷ்ஷர் ஸ்டீவன்ஸ். இவர் ஒரு அமெரிக்க நடிகர். இதற்கு ஒரு இந்தியர் கிடைக்கவில்லையா? என்ற கேள்வி எழுந்தது.

அலாவுதீனும் அற்புத விளக்கும் மிகவும் பிரபலமான கதை. தமிழில் அந்தப் பெயரில் இரண்டு படங்கள் வெளிவந்தன. 1957-ல் நாகேஸ்வரராவ் நடித்த படம் ஒன்று. மற்றொன்று கமலஹாசன் ரஜினி இணைந்து நடித்து 1979-ல் வெளிவந்தது. அந்தக் கதையை 1992ல் ஹாலிவுட்டில் அனிமேஷன் படமாக எடுத்து வெளியிட்டனர். அரபு நாட்டில் நடக்கும் அந்தக் கதையிலும் வெள்ளைக்காரர்கள்தான் நடிகர்களா? என்று அப்போதும் சர்ச்சை எழுந்தது.  அனிமேஷன் படத்தில் ஏது நடிகர்கள்? அனிமேஷன் உருவங்களுக்குக் குரல் கொடுத்தவர்கள் வெள்ளைக்காரர்கள். இப்படி தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வந்த ஹாலிவுட் சினிமா உலகம் முதன் முதலாக இந்த சர்ச்சைக்கு முற்றுப் புள்ளி வைக்க முயற்சித்திருக்கிறது. 

இயக்குனர் கே ரிச்சர்ட், அலாவுதீன் என்ற பெயரில் ஒரு படம் இயக்க இருக்கிறார். அந்தப் படத்தில் அலாவுதீன் கதாபாத்திரத்தில் இந்தியர் அல்லது மத்திய கிழக்கு நாடுகளைச் சேர்ந்த ஒருவரை நடிக்க வைக்க திட்டமிட்டிருக்கின்றனர். இதற்காக அந்தப் பட நிறுவனம் வெளியிட்டுள்ள ஆளெடுப்பு விளம்பரம் இப்படிச் சொல்கிறது: "தயவு செய்து நீங்கள் மத்திய கிழக்கு அல்லது இந்திய வம்சாவளியாக இருந்தால் மட்டுமே விண்ணப்பியுங்கள்"