வனாந்தரத்தில் ஓர் குரல்!
பொருளாதாரத்தைச் சீர்திருத்தவும் – மறுகட்டமைப்புக்கு உட்படுத்தவும் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளாமல் நழுவவிட்ட துயரகரமான நிதிநிலை அறிக்கையும் - இதைத் தவிர வேறில்லை. சீர்திருத்தங்களுக்கும் புதிய கட்டமைப்புக்கும் மக்கள் தயாராக இருந்தார்கள்… அரசுதான் அவர்களுடைய எதிர்பார்ப்புகளை நிறைவேற்றாமல் விட்டுவிட்டது.
1991-ன் கண்ணாடி பிம்பம் 2025
2024-ஆம் ஆண்டின் நிலையை கூர்ந்து கவனியுங்கள்: மக்களவை பொதுத் தேர்தலில் மூன்றாவது முறையாக பாஜகவுக்கு ஆட்சியமைக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் ஒரு எச்சரிக்கையுடன்! ’ஆட்சியமைக்க கூட்டணிக்குப் பெரும்பான்மை உண்டு… உங்கள் கட்சிக்கு மட்டும் (நீங்கள் ஆசைப்பட்டபடி) அறுதிப் பெரும்பான்மை கிடையாது. அரசமைப்புச் சட்டத்தை உங்கள் விருப்பத்துக்குத் திருத்தி எழுதிவிட முடியாது. கருத்தொற்றுமை அடிப்படையில்தான் நீங்கள் ஆட்சி செய்ய வேண்டும். வேலையில்லாத் திண்டாட்டம், வறுமை, சமூக ஏற்றத் தாழ்வுகள் (அசமத்துவம்), விலைவாசி உயர்வு, விவசாயிகளின் தொடர் துயரங்கள், அடித்தளக் கட்டமைப்பில் பெரிய பழுது அல்லது போதாமை ஆகிய பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் தந்து ஆட்சி செய்ய வேண்டும்’ என்றே வாக்களித்தார்கள்.
நரசிம்ம ராவ் – மன்மோகன் சிங் இணை 1991-இல் சந்தித்த அதே சூழ்நிலைதான். காங்கிரஸ் கட்சியின் பிரதமரும் நிதியமைச்சரும் அதையே ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தி, புதிய பாதையில் பயணிக்கும் வகையில் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளை 1991 ஜூலை 1-இல் மேற்கொள்ளத் தொடங்கி அதன் முதல் தொகுப்பை 1991 ஆகஸ்ட் 15-இல் நிறைவு செய்தார்கள் (ரூபாயின் செலாவணி மாற்று மதிப்புக் குறைப்பு, தொழில்-வர்த்தக சீர்திருத்தங்கள், நிதித்துறை சீர்திருத்தங்கள், வரிச் சீர்திருத்தங்கள், தொழில் கொள்கை அறிவிப்பு ஆகியவற்றை மேற்கொண்டனர்).
மக்களவை பொதுத் தேர்தலுக்குப் பிறகு 2024 ஜூலை 3-இல் நிதியமைச்சர் நிர்மலா அளித்த நிதிநிலை அறிக்கை வெறும் வெற்று வேட்டாகத் திகழ்ந்தது. நாட்டைப் பாதிக்கும் பிரச்சினைகளின் அடிப்படைக் காரணங்கள் எதையும் அது தீர்க்க முயலவில்லை. வழக்கம்போலவே பல நொண்டிச் சமாதானங்கள் - சால்ஜாப்புகள் கூறப்பட்டு, அடுத்துக் கொண்டுவரவுள்ள முழு ஆண்டு நிதிநிலை அறிக்கையில் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வும் வழிமுறைகளும் இடம்பெறும் என்று உறுதிகூறப்பட்டது.
இதற்கிடையில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி மேலும் வேகமிழந்தது, ஊதியங்கள் உயராமல் தேக்க நிலையிலேயே தொடர்ந்தன. விலைவாசி உயர்வு அனைத்துத் துறைகளிலும் கோலோச்சியது… அரசின் விருப்பத்துக்கேற்ப வட்டி விகிதங்களில் மாற்றம் செய்ய இந்திய ரிசர்வ் வங்கி மறுத்தது… அன்னிய நேரடி முதலீடுகள் குறைந்தன. வெளிநாடுகளைச் சேர்ந்த நிறுவனங்களும் தனி முதலீட்டாளர்களும் இந்தியச் சந்தையில் செய்திருந்த தங்களுடைய முதலீடுகளைத் திரும்ப எடுத்துக்கொண்டனர், இந்தியாவைச் சேர்ந்த தொழிலதிபர்களும் பெரு வியாபாரிகளும் தொழில் முன்னேற்றத்துக்காக சிங்கப்பூர், துபாய், அமெரிக்கா ஆகிய நாடுகளுக்குச் சென்றுவிட்டனர். அனைவரிடமும் அப்போது எழுந்த கேள்வி, ‘யார் இந்த அரசுக்கு உண்மையை உணர்த்தி விழிப்படைய வைப்பது?’ என்பதே.
அறிவார்ந்த ஆலோசனை!
நல்ல வேளையாக, அரசின் முதன்மைப் பொருளாதார ஆலோசகர் இந்த அரசுக்கு வெளிப்படையாகவும், பொட்டில் அறைந்தார் போலவும் சில அறிவார்ந்த ஆலோசனைகளை 2024-25 நிதியாண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையின் முகப்புரையில் வழங்கியிருக்கிறார். அவருடைய ஆலோசனையின் சாரம், ‘இனியும் பொருளாதார நடவடிக்கைகளில் தேவையின்றி தலையிட்டு தடுத்துக்கொண்டிராமல் வழியைவிடுங்கள்’, ‘கட்டுப்பாடுகளையெல்லாம் தளர்த்துங்கள்’ என்பது. பொருளாதார ஆய்வறிக்கையில் மொத்தம் 13 அத்தியாயங்கள் இருக்கின்றன அவற்றில் நான்கை மட்டும் நான் தேர்வுசெய்து, தலைமைப் பொருளாதார ஆலோசகர் எவற்றையெல்லாம் பரிந்துரைத்தார். அவற்றுக்கு அரசின் பதில் நடவடிக்கை என்ன – பதில் நடவடிக்கையே இல்லாதவை என்ன என்பதையும் சுட்டிக்காட்டுகிறேன்.
முதலாவது அத்தியாயம் நாட்டின் பொருளாதார நிலைமை பற்றியது, மந்த நிலைக்கான காரணங்களை வலியுறுத்திக் கூறுகிறது. அதைப் போக்குவதற்கு நீக்க வேண்டிய கட்டுப்பாடுகளைத் தெரிவிப்பதுடன் - அடிமட்டத்தில் போட்டிகளை அதிகப்படுத்த கட்டமைப்பில் செய்ய வேண்டிய சீர்திருத்தங்களையும் தெரிவிக்கிறது. நிதியமைச்சரோ தனது நிதிநிலை அறிக்கையில், அந்த ஆலோசனைகளுக்கு நேர் எதிரான வழியையே தேர்ந்தெடுத்திருக்கிறார். இப்போது அமலில் உள்ள திட்டங்களுக்கு மேலும் நிதியை ஒதுக்கியிருப்பதுடன், 7 புதிய திட்டங்களையும், 8 செயலாக்க இலக்குகளையும், 4 நிதியங்களையும் புதிதாக அறிவித்திருக்கிறார்.
பொருளாதார நடவடிக்கைகள் மீதான அரசின் கட்டுப்பாடுகளைத் தளர்த்தும் திட்டவட்டமான யோசனை ஏதுமில்லை. எந்த ஒரு துறையிலும் போட்டியை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளும் அறிவிக்கப்படவில்லை. முறைசாராத நிதித்துறைகளின் ஒழுங்காற்று நடவடிக்கைகளை மறுபரிசீலனை செய்து அரசுக்கு அறிவுரை கூற, உயர்நிலைக் குழு அமைக்கப்படுவதாக மட்டுமே அறிவித்துள்ளார். அதாவது, ‘நிதித்துறையானது தொடர்ந்து அரசின் முழுக் கட்டுப்பாட்டிலேயே இருக்கும். அது தொடர்பாக எந்த மறு ஆய்வும் நடக்காது’ என்று உணர்த்தியிருக்கிறார்.
மறுப்பு, மேலதிக மறுப்பு!
நாட்டுக்கு இன்று மிகப் பெரிய பிரச்சினையாக உருவெடுத்துவருவது வேலையில்லாத் திண்டாட்டம், குறிப்பாக படித்து வேலைகிடைக்காத இளைஞர்களைக் கொண்ட குடும்பங்களுக்கு இது மிகப் பெரிய மன உளைச்சலாக நீடிக்கிறது. 12-வது அத்தியாயம் வேலைவாய்ப்பு, திறன் வளர்ச்சி பற்றியது. ‘குறிப்பிட்ட கால இடைவெளியில் அரசால் வெளியிடப்படும் தொழிலாளர் ஆய்வறிக்கை’ (பி.எல்.எஃப்.எஸ்) ஆதார ஆவணமாக ஏற்கப்பட்டு, 2023-24-ல் வேலையில்லா திண்டாட்ட விகிதம் 3.2% என்ற அளவுக்குக் குறைந்துவிட்டது என்ற முடிவுக்கு அரசு வந்துவிட்டது. பொருளாதாரக் கொள்கை வகுப்பாளர்கள் இந்த அளவையே, ‘முழுமையான வேலைவாய்ப்பு’ நிலவுவதாகத்தான் கருதுவார்கள்.
இப்படியொரு ஆபத்து இருக்கிறது என்பதை உணர்ந்தே, ‘ஆண்டுக்கு 78.5 லட்சம் புதிய வேலைவாய்ப்புகளை பண்ணை சாராத துறைகளில் 2030 வரையில் ஏற்படுத்துவது அவசியம்… அப்போது வேலைசெய்யும் வயதில் உள்ள இளையோர் உள்பட மொத்தத் தொழிலாளர்கள் எண்ணிக்கை 96 கோடியாகிவிடும்’ என்று ஆய்வறிக்கை சுட்டிக்காட்டுகிறது. நிரந்தரமான அல்லது மாதச் சம்பளம் பெறும் வேலைகளில் வேலைவாய்ப்பு குறைந்துவிட்டது, சுய வேலைவாய்ப்புகள் - குறிப்பாக சொந்தப் பண்ணைகளில் வேலை செய்வது - அதிகரித்துவருகிறது. மாதச் சம்பளம் வாங்குகிறவர்களின் ‘ஊதிய உண்மை மதிப்பு’ கடந்த 7 ஆண்டுகளில் ரூ.12,665லிருந்து ரூ.11,858 ஆகக் குறைந்துவிட்டது. சுய வேலைவாய்ப்பில் ஈடுபடுவோரின் ஊதிய உண்மை மதிப்பும் குறைந்துவிட்டது.
இந்த சாட்சியங்களும், அலுவலக உதவியாளர் போன்ற பதவிக்கான தேர்வு – நேர்காணல்களுக்கு விண்ணப்பிப்போரின் லட்சக்கணக்கிலான எண்ணிக்கையும் தொழிலாளர் துறை வெளியிடும் ஆய்வறிக்கைப்படியான வேலையில்லா திண்டாட்ட நிலைக்கு நேர் முரணாக இருக்கிறது என்ற முடிவுக்கு வந்துவிடமுடியும். நாட்டின் நிதியமைச்சர், இதில் தொழிலாளர் துறை ஆய்வறிக்கையை ஏற்கிறாரா அல்லது பொருளாதார ஆய்வறிக்கை கூறுவது உண்மை என்று ஏற்கிறாரா? அவருடைய மௌனம், உண்மையை மறுப்பதாகவே தெரிகிறது. உண்மையான நிலைமை என்னவென்றால் நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதார வளர்ச்சி (ஜிடிபி) மிதமான வேகத்தில் இருக்கும்போது, வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துக் கொண்டே வருகிறது – குறிப்பாக படித்த பட்டதாரிகள் – இளைஞர்கள் இடையில், புதிய வேலைவாய்ப்பு உருவாக்கம் என்பது அப்படியே நிலைகுத்தி நின்றுவிட்டது.
‘கட்டுப்பாடுகளை நீக்கினால்தான் வளர்ச்சி’ என்ற தலைப்பில் ஐந்தாவது அத்தியாயம் முழுக்க அதற்கெனவே ஒதுக்கப்பட்டிருக்கிறது. இப்போதைய முதலீட்டு அளவு 31%, பொருளாதார வளர்ச்சி வீதம் 6.5%-க்கும் கீழே என்ற நிலையே தொடர்ந்தால் 2047-ம் ஆண்டு நம்மால் ‘வளர்ந்த நாடு’ ஆகிவிட முடியாது என்கிறது பொருளாதார ஆய்வறிக்கை. கட்டுப்பாடுகளை நீக்கும் செயல்திட்டத்தை அரசு விரைவுபடுத்த வேண்டும் – விரிவுபடுத்த வேண்டும், மக்கள் தங்களுடைய துறைகளில் தனிநபர்களாகவும் அமைப்புகளாகவும் விரும்பிய துறையில் சுதந்திரமாக ஈடுபட கட்டுப்பாடுகளை அகற்ற வேண்டும்” என்கிறது ஆய்வறிக்கை. தொழிற்சாலைகளின் உற்பத்திக் கொள்ளளவு உள்ளிட்ட பலவற்றுக்கு அரசு வரம்புகளையும் கட்டுப்பாடுகளையும் விதிப்பதை அது சுட்டிக் காட்டுகிறது.
1991-96 காலத்தில் கட்டுப்பாடுகளை நீக்கிய நடவடிக்கைகளை என்னால் உதாரணங்களுடன் பட்டியலிட முடியும். ‘சிசிஐ அண்ட் இ’ (போட்டி நெறி ஆணையம் – ஏற்றுமதி இறக்குமதி தலைமை நெறியாளர்) அலுவலகம் மூடப்பட்டது, ‘ஃபெரா’ சட்டம் ‘ஃபெமா’ சட்டமாக மாற்றப்பட்டது. இப்போதைய நிதியமைச்சரும் அதைப்போல தேவையற்ற பல கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை நீக்க முடியும்; அலுவலகங்களை மூட முடியும். ஆனால் அவற்றைச் செய்ய அவர் தயங்குகிறார். இந்த ஓராண்டு முழுவதுமே சீர்திருத்த நடவடிக்கை எதுவுமே இருக்காது என்றே ஊகிக்கிறேன்.
அகிலஸின் பாதம்!
‘இந்தியாவில் தயாரிப்போம்’ (Make In India) என்ற பிரசாரம் காதைக் கிழித்தாலும் இந்தியாவின் தொழில் உற்பத்தித் துறை மிகச் சிறியது, தேவைக்கேற்ப நல்ல வேகத்தில் வளர்ச்சி அடையவில்லை. ‘தொழில்துறை: வர்த்தக சீர்திருத்தம் தொடர்பான அனைத்தும்…’ என்ற ஏழாவது அத்தியாயம் கசப்பான உண்மைகளை வெளிக்கொணர்கிறது. உலக தொழிற்சாலை உற்பத்தியில் இந்தியாவின் பங்களிப்பு 2.8% - சீனத்தின் பங்களிப்போ 28.8%. உற்பத்தித் துறையின் ‘மொத்த மதிப்பு கூட்டல்’ (ஜிவிஏ) பங்களிப்பு 2011-12-ல் 17.4% ஆக இருந்தது, 2023-24-ல் 14.2% ஆக சரிந்திருக்கிறது. உற்பத்திக்குத் தேவைப்படும் உயர்தொழில்நுட்ப இயந்திரங்களை வெளிநாடுகளிலிருந்துதான் பெரும்பாலும் இறக்குமதி செய்கிறோம். தொழில்துறைக்கான ஆராய்ச்சி - வளர்ச்சிப் பணிகளுக்கு நம்முடைய ஒட்டுமொத்த ஜிடிபி மதிப்பில் 1%-க்கும் குறைவாகவே செலவிடுகிறோம்.
நாம் முன்னேற வேண்டுமென்றால் உற்பத்தித்துறையில் அரசின் கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும், ஆராய்ச்சி - வளர்ச்சி புதிய கண்டுபிடிப்புகளுக்கு முக்கியத்துவம் தர வேண்டும். தொழிலாளர்களின் தொழில்திறனை வளர்க்க வேண்டும் என்கிறது பொருளாதார ஆய்வறிக்கை. இவற்றுக்கெல்லாம் நிதிநிலை அறிக்கையின் பதிலோ, புதிய திட்டங்களாகவும் இலக்கு சார்ந்த செயல்திட்டங்களாகவும் இருக்கின்றன.
‘ஆளுகை' என்பது நிகழ்காலத்தது. நாட்டை எதிர்நோக்கியுள்ள சவால்கள் பல, இங்கே ‘அரசு’ இருக்கிறது… ஆனால் ‘அரசாண்மை’ என்பது இல்லாமலிருக்கிறது. தலைமைப் பொருளாதார ஆலோசகரின் எச்சரிக்கை, கேட்பாரற்ற வனாந்தரத்தில் ஒலிக்கும் இன்னொரு குரலாகவேத் தெரிகிறது!
(கட்டுரையாளர் ப.சிதம்பரம் அரசியலர். காங்கிரஸ் முக்கியத் தலைவர்களில் ஒருவர். மாநிலங்களவை உறுப்பினர். முன்னாள் நிதி அமைச்சர். ‘சேவிங் தி ஐடியா ஆஃப் இந்தியா’, ‘ஸ்பீக்கிங் ட்ரூத் டூ பவர்’ உள்ளிட்ட பல நூல்களின் ஆசிரியர்.)